விருதுநகர் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அருமைத் தோழர் சீனிவாசன் நம்மை விட்டு மறைந்துவிட்டார்
top of page

விருதுநகர் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அருமைத் தோழர் சீனிவாசன் நம்மை விட்டு மறைந்துவிட்டார்



விருதுநகரில் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நமது அருமைத் தோழர் சீனிவாசன் நம்மை விட்டு மறைந்துவிட்டார். எப்போதும் கலகலப்பாக இருக்கும்- எவ்வளவு பெரிய பிரச்சினையாய் இருந்தாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்- நெட்வொர்க்கில் எந்த பிரச்சினையென்றாலும் விளக்கமளிக்கும் - அற்புதமான மனிதர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். நமது கிராம வங்கி வாழ்க்கையில் கிடைத்த அன்பான உறவினை இழந்து நிற்கிறோம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு, நமது வங்கியில் முதல் உயிர் பலியாகி இருக்கிறது. தோழர் சீனிவாசனுக்கு ஏற்கனவே மருத்துவ ரீதியான சில பிரச்சினைகள் இருந்தது என்றாலும் – கடைசி நேரத்தில் அவருக்கு சிகிச்சையளிப்பதில் அரசின் தரப்பில் இருந்த போதாமைகள் காரணம் என்றாலும் - அவரது உயிர் இழப்பில் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்திற்கும் பெரும் பங்கு இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஊழியர்களையும்,அலுவலர்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இந்த நிர்வாகம் கடைப்பிடிக்கவே இல்லை. வயதானவர்களை, ஏற்கனவே மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டு இருப்பவர்களை, கர்ப்பிணி பெண் ஊழியர்களை பார்க்கும் வேலையில் relaxation கொடுங்கள் என்று வழிகாட்டும் நெறிமுறைகள் இருந்தாலும், இந்த நிர்வாகம் அதுகுறித்து அறிவிப்பு ஒன்றும் செய்யவில்லை. அமல்படுத்தவில்லை. இதுகுறித்து நிர்வாகத்திற்கு பலமுறை எச்சரித்து இருக்கிறோம். நிர்வாகம் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தி இருந்தால் நாம் தோழர் சீனிவாசனை இழந்திருக்க மாட்டோம். கிளைகளில், மண்டல அலுவலகங்களில், தலைமை அலுவலகத்தில், 50 சதவீத பணியாளர்களை வைத்து பணிகள் நடக்க வேண்டுமென்று தெளிவாக வரையறுக்கப்பட்ட போதிலும் இந்த நிர்வாகம் அதில் அக்கறையே கொள்ளவில்லை. நம் சங்கத்திலிருந்து தலையீடு செய்த பிறகே அங்கங்கு சில கிளைகளில் அமல்படுத்தப்பட்டன. ஆனால் மண்டல அலுவலகங்களில் அமல்படுத்தப்படவில்லை. ஜூலை 8 ம் தேதி, விருதுநகர் மண்டல அலுவலகத்தில் தோழர் சாத்தூரப்பனுக்கு முதலில் வைரஸ் தொற்று வந்து, தோழர் சீனிவாசன் உட்பட 21 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு, ‘மண்டல அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் இருந்தால் போதும்’ என அவசரம் அவசரமாக தலமையலுவலகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அப்படியானால் இங்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் மட்டும்தான் நிர்வாகம் கண் திறந்து பார்க்குமோ? மண்டல அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணி புரிய வேண்டும் என்பதை கறாராக அமல்படுத்தி இருந்தால் நாம் தோழர் சீனிவாசனை இழந்திருக்க மாட்டோம். விருதுநகரில் பணிபுரியும் , கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட தோழர் சாத்தூரப்பனும் ஏற்கனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர்தான். அவர் தினமும் மதுரையில் இருந்து விருதுநகருக்கு வந்து கொண்டு இருந்தார். கடந்த ஒரு மாத காலமாக மதுரை அருகே எதாவது கிளையில் பணிபுரிய அனுமதியுங்கள், என்னால் முடியவில்லை என்று கேட்டு இருக்கிறார். தலைமையலுவலகத்திலிருந்து HRM CM, அப்படி யாருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று சேர்மன் சொல்லி இருக்கிறார் என்று கண்டிப்பாக இருந்திருக்கிறார். தோழர் சீனிவாசனின் மரணத்திற்கு பின்னால் இப்படி நிர்வாகத்தின் தவறுகள் நிறைய இருக்கின்றன. கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து நம் வங்கி ஊழியர்களையும், அலுவலர்களையும் இந்த நிர்வாகம் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். வைரஸ் தொற்றால் ஒருவேளை பாதிக்கப்பட்டல், இந்திய வங்கியில் அறிவித்து இருப்பது போல, 20 லட்சம் நிதி உதவி செய்வதற்கான Policy யும் அறிவிக்கவில்லை. நிர்வாகத்திடம் பேசிவிட்டோம். கடிதம் எழுதி விட்டோம். இன்றுவரை எந்த அசைவும் இல்லை. மனிதாபிமானமற்ற, தங்கள் ஊழியர்கள் மீது அக்கறையற்ற நிர்வாகத்தினை இந்த நேரத்தில் கடுமையாக குற்றம் சாட்டுகிறோம். தோழர்.சீனிவாசனின் மரணம் தந்த காயம் ஆக்கிரமிக்க, பெரும் வலியோடு இதனை உரக்கச் சொல்கிறோம். எங்கள் அன்புத் தோழனே! சீனிவாசனே! உன்னை மீட்க முடியாதவர்களாயாகி விட்டோமே! தாங்க முடியவில்லை. தோழமையுடன் J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி GS-TNGBWU GS-TNGBOA

22 views0 comments
world-spin-crop.gif
bottom of page