நமது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட இயக்கங்கள்
top of page

நமது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட இயக்கங்கள்


தோழர்களே!

வணக்கம்.

17.11.2019 அன்று நம் இரு சங்க செயற்குழுக்களும் தனித்தனியாக கூடி விவாதித்தன. பின்னர் ஒன்றாகக் கூடி போராடவும் தீர்மானித்துள்ளன.

மாறுதல்களில் நிர்வாகம் பெரும் அநீதி இழைத்திருப்பதாகவும், ஊழியர்களின் வேதனைகளையும், வலிகளையும் உணராமல் இரக்கமற்ற முறையில் நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதாகவும், சங்கங்களின் ஆலோசனைகளையும் வேண்டுமென்றே உதாசீனப்படுத்தி இருப்பதாகவும் TNGBWUவும், TNGBOAவும் கருதின. இந்த நிர்வாகம் ஊழியர் விரோத, தொழிற்சங்க விரோத மனப்பான்மையுடன் செயல்படுகிறது என குற்றஞ்சாட்டின.

ஏற்கனவே பல கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த நிர்வாகம் காலம் தாழ்த்துவது ஊழியர்களிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்னும் inter-se-seniority வரையறுக்கப்படவில்லை. 2018-2019 வருடத்து promotion-ற்கான பூர்வாங்க அறிவிப்புகள் கூட வெளியிடப்படவில்லை. Scale V பிரமோஷனை நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது, 600க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தாமல் உழைப்பு சுரண்டப்படுகிறது. கேஷியர் அலவன்சு வழங்கவில்லை. நிரந்தரமாக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு அரியர்ஸ் கொடுக்கவில்லை. இப்படி நாம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கப்பட்டியல் அப்படியே நீண்டு செல்கிறது.

பத்துக்கு பத்து அளவில், பாதுகாப்பு அற்ற, அடிப்படை வசதிகளற்ற, ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரண்பட்ட முறையில் கிளைகள் திறக்கக்கூடாது என ஏற்கனவே சொல்லி இருந்தோம். அப்படிப்பட்ட முறையில் எந்த புதிய கிளைகளும் திறக்கப்பட மாட்டாது எனவும், அதுபோல் ஏற்கனவே இருக்கும் கிளைகளை வேறு நல்ல இடங்களுக்கு மாற்றுவதாகவும் நிர்வாகம் உறுயளித்திருந்தது. ஆனால் அப்படிப்பட்ட பழைய கிளைகள் மூடப்படவில்லை. அதே வேளையில் அப்படிப்பட்ட 10க்கு 10 அளவிலான புதிய கிளையை தீர்த்தம் என்னும் ஊரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்வாகம் திறந்திருக்கிறது. ஆக இந்த நிர்வாகம், சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்பது ஒரு பக்கம். ஊழியர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இந்த நிர்வாகம், ஊழியர்களின் நலன், வங்கி குறித்தெல்லாம் அக்கறை கொண்டு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில்-

இனியும் இந்த நிர்வாகம் நம் கோரிக்கைகளை நிறைவேற்றும், டிரான்ஸ்பர்களில் நம் லிஸ்ட் படி தோழர்களுக்கு மாறுதல் அளிக்கும் என காத்திருப்பது அர்த்தமற்றது என நம் சங்கங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

இந்த நிர்வாகம் நம் சங்கங்களோடு விவாதித்து இப்த வருடத்து டிரான்ஸ்பர்களை இன்னும் 15 நாட்களுக்குள் இறுதி செய்து வெளியிட வேண்டும். Inter-se-seniority உடனடியாக வரையறுத்து பிரமோஷன்களை நடத்தி முடிக்க வேண்டும், 10க்கு 10 கிளைகளை ஒரு மாதத்துக்குள் வசதியான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்களால் வங்கியை சீரழிக்கும் கோயம்புத்தூர் மண்டல மேலாளரை உடனடியாக வேறு கிளைக்கு டிரான்ஸ்பர் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்ட போராட்டங்களை நடத்துவது என இரு சங்கங்களும் கூட்டாக தீர்மானித்துள்ளன.

1. நவம்பர் 27ம் தேதி தலைமையலுவலகம் முன்பு செயற்குழு உறுப்பினர்களின் ஒருநாள் உண்ணாவிரதம்.

2. நவம்பர் 30ம் தேதி தீர்த்தம் கிளை முன்பு ஒருநாள் தர்ணா.

3. டிசம்பர் 1ம் தேதியிலிருந்து ஒத்துழையாமை இயக்கம்.

4. டிசம்பர் 18ம் தேதி கோயம்புத்தூர் மண்டல அலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம்.

5. டிசம்பர் 26, 27 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.

தோழர்களே,

ஒற்றுமையோடு திரள்வோம்.

உறுதியோடு நிற்போம்.

வெற்றி காண்போம்.

J. மாதவராஜ் S.அறிவுடைநம்பி

GS-TNGBWU GS-TNGBOA


55 views0 comments
world-spin-crop.gif
bottom of page