top of page

ஊழியர்களை வேவு பார்க்கவும், குற்றம் காண்பதற்கும் கண்காணிப்பு காமிராக்களை பயன்படுத்துமானால், கடும் வி


ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு இந்த வங்கியிலிருந்து ரிடையர்டு ஆன, சாத்தூரைச் சேர்ந்த மிஸ்டர் P.கணேசன் என்பவர் கடந்த 25.10.2019 அன்று தமிழ்நாடு கிராம வங்கியின் படந்தால் கிளைக்கு சென்றிருக்கிறார். தான் அங்கு வாங்கியிருந்த விவசாய நகைக்கடனுக்கான பணத்தை செலுத்தி, நகையை பெற்று சென்றிருக்கிறார். காலை 10.15 மணிக்கு வங்கிக்கிளைக்கு வந்த அவரை அரை மணி நேரத்துக்குள் அங்கு பணி செய்த நம் தோழர்கள் அனுப்பி வைத்து இருக்கின்றனர்.

ஆனால் மிஸ்டர் கணேசன், தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தான் 10 மணிக்கே படந்தால் கிளைக்கு சென்றதாகவும், தன்னை இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வைத்ததாகவும், விவசாய நகைக் கடனுக்கு 13 சதவீதத்துக்கு மேலாக வட்டி வாங்கியதாகவும் அவர் எழுதுகிறார். மேலும் அந்தக் கிளையில் பணிபுரிந்து வரும் நம் TNGBWUவின் உதவித்தலைவர் தோழர் சங்கர், கிளைக்கு 12 மணிக்குத்தான் வந்ததாகவும், மேனேஜர் 12.30க்கு வந்ததாகவும் எழுதுகிறார். அந்தக் கிளையில் யாரும் சரியாக வாடிக்கையாளர் சேவை செய்வதில்லை எனவும், யாரும் ஒழுங்காக கிளைக்கு வருவதில்லை எனவும் எழுதித் தள்ளி இருக்கிறார்.

நாம் ஓய்வு பெற்ற தோழர்கள் நம் கிளைகளுக்கு வந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, சேவை செய்ய வேண்டும் என நம் தோழர்களுக்கு சங்கத்திலிருந்து அறிவுறுத்துகிறோம். அப்படி இருக்க, மிஸ்டர் கணேசனின் இந்த பித்தலாட்டங்களைப் பாருங்கள்.

மிஸ்டர் P.கனேசனின் கடந்த கால வரலாறு அறிந்தவர்களுக்கு அவரது இந்த பொய் புகாரின் உள்நோக்கம் தெரிந்திருக்கும். தன் சுயநலனுக்காகவும், பதவி வெறிக்காகவும் சங்கங்களிடையே அங்குமிங்குமாய் தாவி, உறுப்பினர்களிடையே அம்பலப்பட்டுப் போன நபர் அவர். இன்று பெரும் சக்தியாய் உருவெடுத்திருக்கிற நம் சங்கத்தின் வளர்ச்சி கண்டு பொருமுகிறவர். குறிப்பாக நம் தோழர் சங்கர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்.

அவரது பொய்ப் புகாரை பெற்ற நிர்வாகம் மின்னல் வேகத்தில் செயல்பட்டு இருக்கிறது. நேற்று இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட்டின் Chiefஆக இருக்கும் திருமதி.ராஜேஸ்குமாரி அவர்கள் படந்தால் கிளைக்கு சென்று இருக்கிறார். மிஸ்டர் கணேசனின் புகார் குறித்து விசாரித்து இருக்கிறார். சி.சி டிவி காட்சிகளை பார்வையிட்டு இருக்கிறார். உண்மை வேறாய் இருந்திருக்கிறது. தோழர் சங்கர் காலை 10 மணிக்கு கிளைக்கு வந்திருக்கிறார். மேனேஜரும் சில நிமிடங்களில் வந்திருக்கிறார். மிஸ்டர் கணேசனை அரை மணி நேரத்துக்குள் அனுப்பி வைத்திருக்கின்றனர். மிஸ்டர் கணேசன் ஒரே கஸ்டமர் ஐ.டியில் சாத்தூர், நென்மேனி, படந்தால் கிளைகளில் நகைக்கடன் வாங்கி இருப்பதால், மூன்று லட்சத்துக்கும் மேலாக மொத்தக் கடன் தொகை இருப்பதால், crownல் அதிக வட்டி போட்டு வைத்திருந்திருக்கிறது. அது சிஸ்டம் போட்ட வட்டி. அதற்கு தோழர் சங்கரும், அந்தக் கிளை மேலாளரும் எப்படி பொறுப்பாவர்கள்?

விசாரணையில் மிஸ்டர் கணேசன் சொன்னது அனைத்தும் பொய் என தெரிய வந்த பிறகும், திருமதி ராஜேஸ்குமாரி அவர்கள், கடும் விசாரணகள் மேற்கொண்டு இருக்கிறார். போததற்கு சி.சி டிவி Hard diskஐயே கொண்டு சென்று இருக்கிறார்.

சரி.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.

இந்த நிர்வாகம் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்வோம்.

இந்த நிர்வாகம் நம் வங்கியில் ஒரு பெண் ஊழியர் sexual Harassment புகார் கொடுத்து இரண்டு மாதமாகியும் அது குறித்து கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனால் நம் சங்கத்தின் பொறுப்பாளர் மீது ஒரு புகார் வந்தவுடன் பாய்ந்து செல்கிறது. இந்த நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதமும் வெளிப்படுகிறது. ஊழியர் விரோதமும் வெளிப்படுகிறது. நிர்வாகத்தின் போக்கை கடுமையாக கண்டிக்கிறோம்.

பல வருடங்களாக, பல மாதங்களாக பல ஒழுங்கு நடவடிக்கை ஃபைல்கள் முடிக்கப்படாமல் இருக்கின்றன என என்பதை நாம் சுட்டிக்காட்டும் பொழுதெல்லாம், இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட்டில் தொடர்ந்து முக்கிய வேலைகள் வந்துவிடுவதால் அவைகளைப் பார்க்க நேரமில்லாமல் போய் விடுவதாக காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முக்கிய வேலைகள் இப்படிப்பட்ட பொய்புகார்கள் மீதான விசாரணைகளாக இருக்கின்றன. அதற்கு இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட்டின் Chief நேரடியாக களத்தில் இறங்குவது நகைப்பிற்கிடமாக மட்டும் இல்லை, வருத்தத்திற்கும் உரியது. நாம் நமது கடும் விமர்சனத்தை முன்வைக்கிறோம்.

எதற்கெடுத்தாலும் சிசி டிவியை பார்ப்பதும், hard diskஐ கழற்றிச் செல்வதுமாக நிர்வாகம் அலைகிறது. ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கிறோம். வங்கிக்கும், அதன் ஆவணங்கள், நகைகள், பணத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கில் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு காமிராக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஊழியர்களையும், அலுவலர்களையும் வேவு பார்க்கவும், அவர்கள் மீது குற்றம் காண்பதற்கும் அல்ல. இந்த நிர்வாகம் கண்காணிப்பு காமிராக்களை இதுபோல பயன்படுத்துமானால், கடும் விளைவுகளை இந்த நிர்வாகம் சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கிறோம்.

J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி

GS-TNGBWU GS -TNGBOA


Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page