உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சங்கத்தின் பார்வைக்கு கொண்டுவந்து தை
top of page

உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சங்கத்தின் பார்வைக்கு கொண்டுவந்து தைரியமாக எதிர்கொண்டால் நிச்சயம்


தோழர்களே

நமது சங்கத்தின் தொடர் முயற்சியினாலும் வழிகாட்டுதலாலும் தோழர் அருண் குமார் (நெருப்பூர் கிளை அலுவலர், IFS அதிகாரியாக தேர்வாகியிருந்தார்) கடந்த 18.10.2019 அன்று வங்கி சேவையில் இருந்து நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய service bond தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றி அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இதற்கு பின்னால் இருந்த போராட்டத்தையும் வலியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தோழர் அருண் குமார் முந்தைய பல்லவன் கிராம வங்கி கிருஷ்ணகிரி மாவட்டம் நெருப்பூர் கிளையில் அலுவலராக பணிக்கு சேர்ந்தவர். அவர் கடந்த ஜூலை மாதம் civil services தேர்வில் வெற்றி பெற்று IFS (Indian Forest Service)ல் தேர்வாகியிருந்தார். அதையொட்டி 18.07.2019 அன்று தனது ராஜினாமா கடிதத்தை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார். மேலும் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ செலவு இருப்பதாகவும், தன்னால் service bond தொகை ரூபாய் 2 லட்சத்தை கட்ட இயலாது என்றும், அதனை தள்ளுபடி செய்யுமாறும் வேண்டிய கடிதத்தை ராஜினாமா கடித்ததோடு இணைத்து அனுப்பியிருந்தார்.

எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க விரும்பாத நிர்வாகம் தொலைபேசி வாயிலாக தோழர் அருண் குமாரை தொடர்பு கொண்டு அவரின் ராஜினாமா கடிதம் ROவிடம் இருந்து தலைமை அலுவலகத்திற்கு 24.07.2019 அன்றுதான் கிடைத்ததாகவும், ஆகவே ஒரு மாத notice period 24.08.2019 அன்றுதான் முடிவடைவதாகவும், மேலும் 18.08.2019 அன்று விடுவிக்க வேண்டும் என்றால் 6 நாட்கள் LOP யாக கருதப்படும் என்றும், service bond உடன் ரூ.7000/- சேர்த்து கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதிர்ந்துபோன தோழர் அருண் குமார் நிர்வாகத்திடம் இருந்து எந்த எழுத்துப்பூர்வ பதிலும் கிடைக்காததால் 06.08.2019 அன்று ஒரு கடிதத்தை எழுதி நிர்வாகத்திற்கு நினைவு படுத்தியிருக்கிறார். 13.08.2019 அன்று மீண்டும் ஒரு நினைவூட்டு கடிதத்தை நிர்வாகத்திற்கு எழுதியுள்ளார். கடிதம் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் பலமுறை நிர்வாகத்திடம் தொடர்புகொண்டும் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.

Relieving Order க்காக காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்த தோழர் அருண்குமார் 17.08.2019 அன்றுடன் தனது ஒரு மாத notice period முடிந்துவிட்டதையும் நிர்வாகத்திடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ கடிதமும் வராததையும் சுட்டிக்காட்டி வேறு வழியில்லாமல் தன்னை வங்கி சேவையில் இருந்து விடுவித்துக்கொள்வதாகவும் 19.08.2019 அன்று தனது கடிதத்தின் மூலம் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தோழர் அருண் குமார் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நமது சங்கத்தின் பார்வைக்கு கொண்டுவந்தார். அவர் நிர்வாகத்திடம் அளித்த கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தையும் நமது சங்கத்துக்கு அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து தோழர் அருண் குமார் தனது நிலையை விவரித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் மத்திய நிதி அமைச்சகத்திற்கும், Asst. Labour Commissioner-Chennai க்கும், நமது TNGBOA மற்றும் TNGBWU சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும் கடிதத்தின் நகல் அனுப்பியிருந்தார். அத்துடன் இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் இணைத்திருந்தார்.

பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த நிர்வாகம் இதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முன் தேதியிட்ட போலி ஆவணத்தை உருவாக்குமாறு நெருப்பூர் கிளை மேலாளரை வர்புறித்தியுள்ளது. இது சங்கத்தின் பார்வைக்கு வர நாம் உடனடியாக நிர்வாகத்தை கண்டித்தோம். பின்னர் நிர்வாகம் அதை கைவிட்டது.

தோழர் அருண் குமாரை உடனடியாக வங்கி சேவையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், service bond அரசியலமைப்பு சட்டத்திற்கும், RRB service regulationக்கும் எதிரானது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அழுத்தமாக நமது கண்டனத்தை பதிவு செய்து கடந்த 09.09.2019 அன்று நம் சங்கத்தின் சார்பாக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

நமது சங்கத்தின் வழிகாட்டுதலால் தோழர் அருண் குமார் இந்த பிரச்சனையை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச்சென்றார். தமிழ்நாடு கிராம வங்கி Board Member களுக்கும், IAS அதிகாரிகளுக்கும், Labour Commissionerக்கும், DFS க்கும், NABARD மற்றும் RBI regional director களுக்கும் கடிதம் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட அநீதியை எடுத்துச் சென்றுள்ளார்.

இதன் விளைவாக Dy Chief Labour Commissioner (Central) இடம் இருந்து நிர்வாகத்திற்கு தோழர் அருண் குமாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற மின்னஞ்சல் வந்தது. இதற்கு நிர்வாகம் தரப்பில் தோழர் அருண் குமார் 17.08.2019 வங்கியை விட்டு சென்றதாகவும், அவரே தன்னை சேவையில் இருந்து விடுவித்துக்கொண்டதாகவும், எனவே அந்த தேதியையே relieving தேதியாக எடுத்துக்கொள்ளலாம் என்றும், service bond ரத்து குறித்து boardல் வைத்து முடிவெடுப்பதாகவும் பதிலளிக்கப்பட்டது.

பலமுறை எழுத்துப்பூர்வமாக தோழர் அருண் குமார் நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்பொழுதெல்லாம் பதிலளிக்காமல் இருந்துவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டு, அவரே வங்கியை விட்டு சென்றதாகவும், தன்னை தானே வங்கி சேவையில் இருந்து விடுவித்துக்கொண்டதாகவும் Dy Chief Labour Commissioner (Central)க்கு நிர்வாகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாகம் தனது கோரப் பல்லை காட்டியுள்ளது.

இதையடுத்து DFS இடம் இருந்தும் தோழர் அருண் குமாரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி நிர்வாகத்திற்கு கடிதம் வந்தது. நெருக்கடிகள் அதிகமாக வேறு வழியில்லாமல் 18.10.2019 அன்று தோழர் அருண் குமார் எழுத்துப்பூர்வமாக நிர்வாகத்தால் வங்கி சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருடைய Service Bond இரத்து செய்யப்பட்டுள்ளது.

தோழர் அருண் குமார் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நமது சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வந்து தைரியமாக எதிர்கொண்டதாலும், தொடர்ந்து நமது சங்கத்தின் வழிகாட்டுதலாலும் அவருக்கு நீதி கிடைத்துள்ளது.

தோழர்களே

உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சங்கத்தின் பார்வைக்கு கொண்டுவந்து தைரியமாக எதிர்கொண்டால் நிச்சயம் இந்த நிர்வாகத்தின் அநீதிகளை களையமுடியும்.

J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி

GS-TNGBWU GS - TNGBOA


63 views0 comments
world-spin-crop.gif
bottom of page