top of page

தோழர் போஸ் பாண்டியன்! ஒரு சகாப்தம்!!


தோழர் போஸ் பாண்டியன்!

1988ம் ஆண்டு பாண்டியன் கிராம வங்கியில் 44 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. தோழர் போஸ் பாண்டியன் உட்பட probation periodல் இருந்த 12 அலுவலர்த் தோழர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். நிர்வாகம் அவர்களை டிஸ்மிஸ் செய்தது. அந்தத் தோழர்களை மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டும் என்பதையும் கோரிக்கைகளில் ஒன்றாக்கி வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

அப்போதைய சங்கத் தலைமையில் ஒரு பகுதியினர் நிர்வாகத்திற்கு ஆதரவாக துரோகம் இழைத்தனர். நிர்வாகம் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொன்ன வாக்குறுதிகளை நம்பி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினர். டிஸ்மிஸ் செய்யப்பட்ட 12 அலுவலர்த் தோழர்களை மீண்டும் பணிக்கு எடுப்பதற்கு நிர்வாகம் உத்திரவாதமாக எதுவும் சொல்லவில்லை.

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர சங்கத் தலைமை உறுப்பினர்களைக் கூட்டி பேசிய போது, கூட்டத்திலிருந்து , “எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க காம்ரேட்ஸ்” என்று கம்பீரமாக எழுந்து நின்றார் போஸ்பாண்டியன். அவர் முகத்தில் கலக்கமில்லை. துயரத்தின் சாயல் இல்லை. கம்பீரம் மட்டுமே இருந்தது. அவரது அந்த ஒற்றைக் கேள்வி மொத்தக் கூட்டத்திலும் கலகத்தை ஏற்படுத்தியது. தோழர் போஸ் பாண்டியனோடு மொத்தக் கூட்டமும் இணைந்து ஆத்திரம் கொள்ள, துரோகம் செய்த சங்கத் தலைவர்கள் நிர்வாகத்திடம் சென்று, ‘நாங்கள் வெளியே தலை காட்ட முடியாது” என காலில் விழ, டிஸ்மிஸ் செய்யப்பட்ட அலுவலர்களை அடுத்த நாளே பணிக்குச் சேர நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருந்தது.

அந்த போஸ்பாண்டியன், அதன் பிறகு ஏறத்தாழ 32 வருடங்கள் பணி செய்து விட்டு, இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார்.

அவரோடு பணிக்குச் சேர்ந்து, வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, டிஸ்மிஸ் ஆகி, பின்னர் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட அலுவலர்களில் சிலர் பிறகு தொழிற்சங்கத்தின் பக்கமே வராமல் ஒதுங்கிப் போனார்கள். ஆனால் போஸ் பாண்டியன் அதே தொழிற்சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக, உதவிப் பொதுச்செயலாளராக, பொதுச்செயலாளராக, தலைவராக இருந்து பணியாற்றினார், வழி காட்டினார்.

அவர் பணிக்குச் சேர்ந்ததிலிருந்து, இன்று வரை நடந்த ஐநூற்றுக்கும் அதிகமான போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கோண்டவர். (கடைசியாக சேலத்தில் நடைபெற்ற தர்ணாவில் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவரது மகளுக்கு காலேஜ் அட்மிஷனுக்காக செல்ல வேண்டி இருந்தது.) அனைத்து அகில இந்திய மாநாடுகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

இந்த முதலாளித்துவ அமைப்புக்கு எதிரானவராய், இடதுசாரி சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவராய் திகழ்ந்ததால் அவரது தொழிற்சங்கப்பணியும் சரி, வங்கிப்பணியும் சரி அர்த்தமுள்ளதாகவும், முன்னுதாரணமாகவும் இருந்தது.

அவ்வப்போது நிகழ்கிற தொழிற்சங்கப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு, அதனோடு ஓடிக்கொண்டு இருப்பவர் மட்டுமல்ல தோழர் போஸ் பாண்டியன், காலத்தை திரும்பிப் பார்த்து, ஓடிக்கொண்டு இருக்கிற பயணம் குறித்து அறிகிற இயல்பு கொண்டவராய் இருந்தார். தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு அது வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம், வங்கித்துறை, கிராம வங்கிகளின் பிரத்யேகத் தன்மை, கிராம வங்கியில் பணிபுரியும் தோழர்களின் வாழ்க்கை குறித்த புரிதல்களும், தெளிவான பார்வையும் அவருக்கு இருந்தன. “சாதாரண கிராமங்களில் இருந்து அரசு வேலைக்கு வந்த முதல் தலைமுறை நாங்கள்’ என அவர் சொல்வார். கிராம வங்கிகள், அதன் ஊழியர்கள் குறித்த வரலாற்றை ஒற்றை வரியில் சொல்வது போலிருக்கும் அந்த வார்த்தைகள்.

நிர்வாகத்தோடு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத அவரது உறுதி அளப்பரியது. மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை எல்லாம் அவர் பயன்படுத்தி இருக்கிறார். சமயங்களில் அது ‘அளவு மீறியதாக’ தோன்றினாலும், அதிகாரத்தில் இருந்து கொண்டு சக தொழிலாளிகள் மீது ஈவிரக்கமற்று, சுயநலமாய் இருப்பவர்கள் மீதான அவரது கோபத்தின் வேகமாகவே பார்க்கத் தோன்றுகிறது.

பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்தோடு பேசும்போதும் சரி, செயற்குழுக் கூட்ட விவாதங்களிலும் சரி, அவருக்கென்று ஒரு தெளிவு இருக்கும். பிரச்சினைகளை விவரிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவைகளை தீர்ப்பதற்கான முனைப்பும் இருக்கும். அது முக்கியமானது.

ஒரு பிரச்சினை குறித்த விபரங்கள் தெரிந்திருந்ததால், தீர்க்கமான பார்வை கொண்டு இருந்ததால், நிர்வாகம் தோழர் போஸ் பாண்டியனோடு பேசும்போது பம்மி நிற்பதை பலமுறை பார்க்க முடிந்திருக்கிறது.

நிர்வாகத்திற்கு சிம்ம சொப்பனம் போலிருந்தார். எழுத்து பூர்வமான தலைமையலுவலக உத்தரவு இல்லாமல் அவரது கிளைக்கு இன்ஸ்பெக்ஷன் செய்ய வந்தவர்களை அவர் அனுமதித்ததே இல்லை.

பாண்டியன் கிராம வங்கியிலும் ஆபிஸர்கள் கேஷ் பார்க்க வைக்க நிர்வாகம் முயன்றது. ஆபிஸர்களிடம் கேஷ் கீ கொடுக்க முடியாது என விருதுநகர் கிளையை மதியம் 1 மணி நேரம் வரை திறக்காமல் இருந்து முறியடித்தவர் தோழர் போஸ் பாண்டியன்.

சங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களிலெல்லாம் தோழர் போஸ் பாண்டியன் முன் வந்து நிற்பார். அதனை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்.

இளம் தலைமுறையினரை சங்கப் பணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எப்போதும் அவர் ஆர்வமாய் இருப்பார். இளம் தோழர்களைப் பார்த்தாலே உற்சாகமாகி விடுவார்.

கடந்த நான்காண்டுகளாக அவர் சங்கத்தில் பொறுப்பில் இல்லை. அவரை எவ்வளவோ வற்புறுத்தியும் பிடிவாதமாக மறுத்து விட்டார். ”புதிய தோழர்கள் பொறுப்புக்கு வரட்டும். நான் எங்கு போய் விடப் போகிறேன்” என்று சொல்லி விட்டார்.

தனிப்பட்ட முறையில் தோழர்களோடு அவருக்கு முரண்பாடு இருந்தாலும், சங்கமாக அவர்களோடு ஒன்றிணைந்து நிற்பதில் தயக்கம் காட்டியதில்லை. அந்தத் தெளிவு அவருக்கு இருந்தது.

அவர் பணி நிறைவுக்கு எளிய முறையில் ஒரு விழா நடத்தலாம் என அவரிடம் கேட்டோம். மறுத்து விட்டார். இளம் தலைமுறையினருக்கு அவரது பணிகளும், கடந்த காலமும் முன்னுதாரணமானவை. சங்கம் மீதான நம்பிக்கையைத் தந்தவர் அவர். எனவே அதை வெளிப்படுத்துவது அவசியம் என்று பல முக்கிய தோழர்கள் அவரிடம் பேசிப் பார்த்தோம். பிடிவாதமாக மறுத்து விட்டார்.

“நான் எப்படி இந்த வங்கிக்குள் அமைதியாக வந்தேனோ, அப்படியே சத்தமில்லாமல் விடைபெறுகிறேன்” என்று சொல்லி விட்டார்.

அது எப்படி சாத்தியம்? அவர் எழுப்பிய அதிர்வுகள் இந்த தொழிற்சங்க இயக்கத்துக்குள் ஒரு போதும் அமைதியாகி விடாது. அது மேலும், மேலும் அதிகமாகி, பெருத்த சத்தத்தோடு ஒருநாள் வேரோடு இந்த அதிகார அமைப்பை விழ வைக்கும்.


51 views0 comments
world-spin-crop.gif
bottom of page