தோழர்களே!
நமது பொறுமையையும், வங்கியின் தொழில் அமைதியில் இருக்கும் அக்கறையையும் நிர்வாகம் ரொம்பவே சோதிக்கிறது.
முறையற்ற, அதிகார பூர்வமற்ற நடவடிக்கைகளால்தான் மொத்த வங்கியையும் நடத்தி வருகிறது. நாம் பலமுறை, பல மட்டங்களில் பேசியும், நிர்வாகம் எதையும் சரி செய்யவும் இல்லை, சரி செய்ய உத்தேசமும் இருப்பதாகத் தெரியவில்லை.
லீவுகள் சாங்ஷன் செய்வதில் அராஜகம். TA பில்கள் சாங்ஷன் செய்வதில் காலதாமதம். உரிய ஸ்டேஷனரிகளை கிளைகளுக்கு ஏற்பாடு செய்வதில் அலட்சியம். நமக்குரிய கடன்கள் வழங்குவதில் நெருக்கடிகள். அதிகமான வட்டி விகிதம். தற்காலிக sub-staffக்கு ஊதியம் வழங்குவதில் பாகுபாடு. பெரும் உழைப்புச் சுரண்டல். ஊழியர்கள் அலுவலர்கள் பிரச்சினைகள் குறித்து பேச இயலாமல் – எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிற உயரதிகாரிகள். இப்படி தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தின் மோசமான நிலைமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
Amalgamation process நடந்து கொண்டு இருக்கிறது, நிர்வாகத்துக்கு பல முக்கியப் பணிகள் இருக்கும், என்பதையெல்லாம் உணர்ந்து நாம் மிகவும் பொறுமையாகவும், அமைதியாகவும்தான் இருக்கிறோம். ஆனால் நிர்வாகம் நாம் முன்வைக்கிற எந்த யோசனையையும் ஏற்றுக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாகவே செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கத்திற்குரிய மரியாதையை அளிக்கக் கூடாது என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது. Amalgamation நடந்து நான்கு மாதமாகி விட்டது. இன்றுவரை நமது இரு சங்கப் பொதுச்செயலாளர்களுக்கும் சேலத்திற்கு, தலைமையலுவலகத்திற்கு டிரான்ஸ்பர் போட மறுக்கிறது.
பேச்சுவார்த்தைகளில் இணக்கமாக நடந்து கொண்டாலும், நடவடிக்கைகளில் இணக்கமாக இருப்பதில்லை நிர்வாகம்.
அண்மையில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில், சங்கத்துடன் நேரடியாக கலந்தாலோசித்து, டிரான்ஸ்பர்கள் போடுவதாக உறுதி தந்த நிர்வாகம் இப்போது சங்கங்களை கலந்தாலோசிக்காமல் தானடித்த மூப்பாக டிரான்ஸ்பர்கள் போட எத்தனிக்கிறது.
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக லீவு எடுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்கு லீவு சாங்ஷன் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறது. TNGBOA முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர்.வள்ளுவனுக்கு சம்பளப்படித்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கவும், உழைப்புச் சுரண்டலை எந்த கேள்வியுமற்று மூர்க்கத்தனமாக நடத்தவும், லீவு விஷயத்தில் குறைந்த பட்ச இரக்கம் கூட இல்லாமல் நடந்து கொள்ளவும், எந்த அடிப்படை எழுத்து பூர்வமான தொடர்புகள் இல்லாமல் வங்கியை நடத்தவும் இந்த நிர்வாகம் துணிந்து இருக்கிறது.
இதனை அனுமதிக்கவே முடியாது. நம் உரிமைகளும், சுயமரியாதையும் பறி போவதை வேடிக்கை பார்க்க முடியாது. நம் வலியை அறியாத நிர்வாகத்தைப் பற்றி நாம் அக்கறை கொள்ள அவசியம் இல்லை.
எனவே முதற்கட்டமாக- நமது இரு சங்கங்களும் இணைந்து ஆகஸ்ட் 8ம் தேதி சேலத்தில் தலைமையலுவலகம் முன்பு ஒருநாள் தர்ணா நடத்துவது என தீர்மானித்து இருக்கிறோம். உண்ணாவிரதம், ஒத்துழையாமை இயக்கம், விதிப்படி வேலை என அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை ஆகஸ்ட் 8ம் தேதி முடிவு செய்து அறிவிப்போம்.
தோழர்களே! இந்த வங்கியை வங்கியாக நடத்தவும் மனிதர்களை மனிதர்களாக நடத்தவும் நம் போர் ஆரம்பமாகிறது.
வெப்பத்தோடும் வேகத்தோடும் அடியெடுத்து வைப்போம்.
ஆகஸ்ட் 8ம் தேதி நாம் எடுத்து வைக்கும் முதல் அடி.
வாருங்கள்...
J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி GS – TNGBWU GS - TNGBOA