top of page

வேலை கிடைத்தும் பணி நியமனம் செய்யாத கொடுமை


கிராம வங்கிகளில் 2018ம் ஆண்டிற்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, ஐபிபிஎஸ்- IBPS (Institute of Banking Personnel Selection) மூலம் கிராம வங்கிகளில் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு எல்லாம் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பட்டியலும் இறுதி செய்யப்பட்டு விட்டது. அந்தந்த கிராம வங்கி நிர்வாகங்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு விட்டது. எனினும் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரும் கிராம வங்கிகளில் இன்றும் பணி நியமனம் செய்யப்படவில்லை.

இந்தியாவில் உள்ள மற்ற கிராம வங்கிகளில் 2018ம் ஆண்டிற்கான பணி நியமனம்நடந்து முடிந்திருக்கின்றது; நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பாண்டியன் கிராம வங்கியிலும், பல்லவன் கிராம வங்கியிலும் இந்த பணி நியமனம் நடத்தப்படவில்லை. கேட்டால் ‘ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து இரண்டு வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாகப் போகிறது, அதன் பிறகு பணிநியமனம் நடத்தலாம்’ என்று இரண்டு வங்கி நிர்வாகங்களின் தரப்பிலும் யோசிப்பதாக சொல்லப்படுகிறது என, பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜா.மாதவராஜ் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.

“இரண்டு வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டால், உடனடியாகச் செய்ய வேண்டிய அலுவல்களும், காரியங்களும் பல இருக்கின்றன. மேலும் இரண்டு வங்கி ஊழியர்கள், அலுவலர்களின் சீனியாரிட்டி முறைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு குறைந்த பட்சம் ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை ஆகும். அதன் பின்னர்தான் 2018ம் ஆண்டிற்கான பணி நியமனம் குறித்து நிர்வாகம் யோசிக்கும். அதற்குள் 2019ம் ஆண்டிற்கான பணி நியமனப் பணிகளை ஐபிபிஎஸ் முடித்து விட்டிருக்கும்’’ என்று அவர் எச்சரிக்கிறார்.

இப்படியொரு பெரும் குழப்பமும், கால தாமதமும் ஆகும் என்பது நிர்வாகத்துக்கும் தெரியும். கிளைகளில் ஊழியர்கள் படும் அவஸ்தைகளும் நன்றாகவே தெரியும். இயற்கை அழைப்புக்குக் கூட எழ முடியாமல் வாடிக்கையாளர் சேவை செய்ய வேண்டிய சங்கடம் பல கிளைகளில் நிலவுகிறது. ஆள் பற்றாக்குறை தாண்டவமாடுகிறது. விடுமுறை கிடைக்காமல் திருமண நிச்சயம் தள்ளிப் போன அவலங்கள், மிக நெருங்கிய உறவினர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்க முடியாமல் போன அவஸ்தைகள், கர்ப்பம் தரித்த பெண் ஊழியர்கள் ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் பேருந்துகளில் தொடர்ந்து பயணம் செய்து கிளைகளுக்குச் செல்ல வேண்டிய சித்ரவதைகள் என ஊழியர்களின் பணி நிலைமைகள் துயரமும், வலியும் கொண்டதாக இருக்கின்றன. இந்த மோசமான நிலையை 2018ம் ஆண்டிற்கான பணிநியமனம் செய்தால், ஓரளவுக்கு சரிசெய்யலாம். ஆனால் நிர்வாகம் அது குறித்து கவலைப்படவில்லை என மாதவராஜ் குற்றம் சாட்டுகிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நிர்வாகம் 2018ம் ஆண்டிற்கான பணிநியமனத்தை காலம் தாழ்த்துவதற்கு இரண்டு கிராம வங்கிகளின் ஒன்றிணைப்பை காரணமாகச் சொன்னாலும், உண்மையான காரணம் அதுவல்ல.

பல்லவன் கிராம வங்கியில், புதிதாகப் பணிக்கு சேர்கிறவர்களிடம் ஒரு சேவைப் பத்திரம் (Service Bond) வாங்கும் வழக்கம் இருக்கிறது. அதன்படி பணிக்குச் சேர்ந்த அலுவலர் ஒருவர் வங்கியை விட்டு ராஜினாமா செய்தால் இரண்டு லட்சம் வங்கிக்கு கட்ட வேண்டும். ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்தால் ஒரு லட்சம் கட்ட வேண்டும். இதைதண்ட வசூல் என்பதா அல்லது அபராதம் என்பதா?

பாண்டியன் கிராம வங்கியில் அந்த வழக்கம் இல்லை. அப்படி நிபந்தனைகள் விதிக்கப்படுவதை இங்குள்ள சங்கங்கள் எதிர்த்து தடுத்து நிறுத்தி இருக்கின்றன. ‘இங்கு வேலைக்குச் சேர்ந்து, வேறு வணிகவங்கியில் வேலை கிடைத்தால் உடனே அங்கு சென்று விடுகிறார்கள், அதை தடுப்பதற்காகத்தான் கொண்டு வருகிறோம்’ என்று நிர்வாகம் சொல்லிப் பார்த்தது. “இங்கு பணிக்குச் சேர்ந்து விட்டு, வணிக வங்கிக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டுமென்றால் சரிசெய்யப்பட வேண்டியது கிராம வங்கிகளின் நிலைமையே தவிர, பணிக்குச் சேர்ந்தவர்களிடம் முறையற்று காசு பறிப்பது அல்ல” என்று சங்கங்கள் அழுத்தமாகச் சொல்லின. ‘நமது வங்கியின் நலனுக்காகத்தான் இந்த ஏற்பாடு, இதற்கு சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றும் கேட்டுப் பார்த்தன. ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வேலை பார்க்கும் உரிமையை நீங்கள் பறிக்கிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது’ என சட்டத்தின் மொழியில் பேசி தடுத்து விட்டோம்.

இப்போது அதுதான் பிரச்சனை. பல்லவன் கிராம வங்கியில் அதுபோல ஒரு சேவைப்பத்திரம் (service Bond) வாங்கி, பாண்டியன் கிராம வங்கியில் வாங்காவிட்டால், நாளை ஒன்றிணைய இருக்கும் தமிழ்நாடு கிராம வங்கியில் பிரச்சனை வருமாம். ஒரே வங்கியில் பாண்டியன் கிராம வங்கி மூலம் பணிக்கு வந்த ஒருவர் ராஜினாமா செய்தால் அபராதம் கட்ட வேண்டி இருக்காது. பல்லவன் கிராம வங்கி மூலம் பணிக்குச் சேர்ந்திருந்தால் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். எனவே 01.04.2019க்குப் பிறகு தமிழ்நாடு கிராம வங்கியில் இந்த பணி நியமனத்தை நடத்தி புதிதாக பணிக்குச் சேர்கிற அனைவரிடமும் பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது என நிர்வாகங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.

தேர்வு செய்யப்பட்ட முடிவு அறிந்து, பாண்டியன் கிராம வங்கியிலும், பல்லவன் கிராம வங்கியிலும் வேலை பார்க்க வெளியே காத்திருக்கும் நானூற்றுக்கும் அதிகமான இளைஞர்களின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்பையும் இக்காரணத்திற்காக நிர்வாகங்கள் அலட்சியம் செய்கின்றன. பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கியின் ஊழியர்கள் அலுவலர்களை திரட்டி இந்த அநீதிக்கு எதிராகவும், நிர்வாகங்களின் படு மோசமான நோக்கங்களுக்கு எதிராகவும் இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


99 views0 comments
world-spin-crop.gif
bottom of page