top of page

08.02.2019 அன்று சேலத்தில் சிறப்பாக நடைபெற்ற AIRRBEA-தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டம்


08.02.2019 அன்று சேலத்தில நடந்த கூட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கெடுபிடிகள், ஐந்து மணிக்கும் மேலே பணி செய்ய வேண்டிய நெருக்கடிகள் எல்லாம் மீறி ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கிராம வங்கியில், ஆபிஸர்களும், ஊழியர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அவசியம், எதிர்நோக்கும் சவால்கள், எடுத்துச் செல்ல வேண்டிய இயக்கம் குறித்து சங்கத் தலைவர்கள் உரையாற்றினார்கள். ஒரு மாபெரும் அத்தியாயத்தின் துவக்கம் இது!

 

”பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் இணையும் நாளுக்காக நாம் காத்திருந்தோம். நமது தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வலிமை பெறும் இதுபோன்ற நாளுக்காக காத்திருந்தோம். ஒரு கனவு நிறைவேறி இருக்கிறது."

தோழர் பரிதிராஜன், இணைச்செயலாளர், பல்லவன் கிராம வங்கி எம்ப்ளாயிஸ் யூனியன்

 

”பாண்டியன் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்துக்கும், பல்லவன் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்துக்கும் நீண்ட காலத் தொடர்பும் உறவும் இருந்து வந்திருக்கிறது. வள்ளலார் கிராம வங்கியில் தொழிற்சங்க இயக்கம் துவக்கப்பட்டதிலும் செயல்பட்டதிலும் பாண்டியன் கிராம வங்கியின் தொழிற்சங்க இயக்கத்துக்கு முக்கிய பங்குண்டு. காலம் இப்போது அனைவரையும் ஒன்றாக செயல்பட வைத்திருக்கிறது. நமது ஒற்றுமையால் நாம் மேலும் வலிமை பெறுவோம். நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம்.”

தோழர். சுரேஷ், பொதுச்செயலாளர், பல்லவன் கிராம வங்கி எம்ப்ளாயிஸ் யூனியன்

 

”ஒரு தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களின் உரிமைக்காக போராடுவதாக இருக்க வேண்டும். மாறாக ஒரு கும்கி யானை போல தொழிலாளர்களை அடக்கி நிர்வாகத்திற்கு சேவை செய்ய வைக்கக்கூடாது. ஆனால் இங்கே அது நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நாம் அதை அனுமதிக்க முடியாது. சட்டப்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை வெட்டி குறைப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இதுபோன்ற அநீதிகளை உங்களோடு சேர்ந்து எதிர்க்க நாங்களும் இருக்கிறோம். இங்கு வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் மன நிறைவிற்கு ஏற்ப அந்தப் பணியை செய்து வருகிறோம். இதில் அலுவலர்கள் என்றும் பணியாளர்கள் என்றும் எந்த வேறுபாடும் கிடையாது ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடி வெல்ல முடியும்."

தோழர் அறிவுடைநம்பி , இணைச்செயலாளர், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோசியேஷன்

 

“மூன்று நாட்கள் பல்லவன் கிராம வங்கியின் சில கிளைகளுக்குச் சென்று தோழர்களை சந்தித்து வந்திருக்கிறோம். அவர்களோடு உரையாடி இருக்கிறோம். நிறைய பிரச்சினைகளை அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நாம் செல்ல வேண்டிய பாதைகளை அவர்கள் உணர்த்தி இருக்கிறார்கள். இனி அவைகளை தீர்ப்பதற்காக நாம் போராடுவதும், இயக்கம் நடத்துவதும்தான் நம் முன்னே இருக்கும் பாதை. இனி வரும் நாட்கள் நம்பிக்கையானவையாக இருக்கும். நமது துயர் துடைப்பவையாக இருக்கும். இந்தக் கூட்டத்தின் மூலம் நாம் உரக்கச் சொல்லும் செய்தி இதுதான்.”

தோழர் அண்டோ கால்பர்ட், பொருளாளர், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோசியேஷன்

 

“கிராம வங்கிகள் துவங்கப்பட்டபோது அவர்களுக்கு வணிக வங்கியின் ஊதியம் வழங்காமல் மத்திய அரசு துரோகம் செய்தது. அதனை எதிர்த்து AIRRBEA போராடியது. அப்போது AIBOCஐச் சேர்ந்தவர்கள் எதிர்த்து சாட்சியம் அளித்து துரோகம் இழைத்தார்கள். பின்னர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல், வணிக வங்கி ஊதியம் அளிக்காமல் மஹாலிக் கமிட்டியை மத்திய அரசு அமைத்து வேறொரு ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்தது. அப்போது மஹாலிக் கமிட்டி அறிக்கையை ஏற்றுக்கொண்டு துரோகம் செய்தது AIBOC சங்கம். அடுத்து பென்ஷனுக்காக AIRRBEA போராடி, வழக்குத் தொடுத்தது. லாபம் ஈட்டும் கிராம வங்கிகளுக்கு பென்ஷன் என்று நிபந்தனைகளை விதித்து பென்ஷனை பெறமுடியாத சூழலை மத்திய அரசு உருவாக்கியது. அப்போதும் மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பென்ஷனை பெறலாம் என AIBOC சங்கம் சொல்லி கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் துரோகம் இழைத்தது அதே AIBOC சங்கம். இங்கே பல்லவன் கிராம வங்கியில் நிர்வாகத்திற்கு சாதகமாக இருந்து கொண்டு ஊழியர்கள், அலுவலர்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் துரோகம் இழைக்கிறது இங்குள்ள AIBOC இணைப்பு சங்கம். கிராம வங்கிகளைப் பொறுத்த வரையில் AIBOC தொடர்ந்து துரோகங்களையே செய்து கொண்டிருக்கிறது,”

தோழர் நடராஜன், பொதுச்செயலாளர், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோஷியேஷன்

 

“ஒரு கிளையைத் திறந்து, ஒரு முப்பது கோடியைக் கொடுத்து வணிகத்தைத் தொடங்குமாறு எந்த நிர்வாகமும் செய்வதில்லை. கட்டிடம், ஸ்டேஷனரி, ஃபர்னிச்சர் மட்டுமே நிர்வாகம் அமைத்துத் தருகிறது. அங்குள்ள நமது ஆபிஸரும், கிளர்க்குமே வாடிக்கையாளர்களை, டெபாசிட்டை, அட்வான்ஸை எல்லாம் அந்த கிளைக்குக் கொண்டு வருகிறார்கள். அந்தக் கிளைக்கு உயிர் கொடுப்பது நமது உழைப்புத்தான். ஆனால் அந்த உழைப்புக்கு இங்கே உரிய மரியாதையை நிர்வாகம் கொடுப்பதில்லை.

ஒரு பத்துக்கு பத்து அளவிலான அறையில் ரோட்டோரத்தில் ஒரு கடையைப் போல இருந்த ஒரு கிளையை பல்லவன் கிராம வங்கியில் நாங்கள் பார்த்தோம். அதற்குள் safe வைத்து கேஷியர், மேனேஜர், அப்ரைசர்களுக்கான இருப்பிடம் என வடிவமைத்த அந்த கார்ப்பெண்டரை நினைத்து ஆச்சரியமாய் இருந்தது. வாடிக்கையாளர்கள் ஒன்றிரண்டு பேரைத் தவிர உள்ளே யாரும் நிற்க முடியாது. கழிப்பிட வசதி இல்லை. ஆனால் அந்தக் கிளையில் 15 கோடி வணிகத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அடிப்படை வசதியற்ற போதும், உரிய பணிச்சூழலே அமைத்துத் தராத போதும், மிகக் குறுகிய காலத்தில் அந்த கிளையின் வணிகத்தை அந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிற அந்த தோழர்களை நினைத்து நான் பிரமித்துப் போகிறேன். இவ்வளவு உழைப்பை செலுத்துகிறவர்கள் மட்டும் தங்கள் உரிமைக்காக, உழைப்புக்கான மரியாதைக்காக தங்கள் முஷ்டிகளை உயர்த்திப் போராடத் துவங்கி விட்டால் நாம் எவ்வளவு வெற்றிகளை இங்கே சாத்தியமாக்கி இருக்க முடியும்?. இதுதான் நான் உங்கள் முன் வைக்கும் கேள்வியும், உங்களுக்குச் சொல்லும் செய்தியுமாகும்.”

தோழர் காமராஜ், இணைச்செயலாளர், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோஷியேஷன்

 

“இந்தக் கூட்டத்துக்குச் செல்லக் கூடாது என்று அலுவலர்களை AIBOC சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கடுமையாக நெருக்கடி கொடுத்து இருக்கின்றனர். உங்களுக்கு விருப்பப்பட்ட கிளைகளுக்கு டிரான்ஸ்பர் வாங்கித் தருகிறோம். இல்லையென்றால் டிரான்ஸ்பர் கிடைக்காது என்று மிரட்டி இருக்கின்றனர். Recruitment நடத்தப்படாமல் எப்படி விருப்பப்பட்ட கிளைகளுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுக்க முடியும் என்கிற அடிப்படை அறிவு கூட அவர்களுக்கு இல்லை.

அந்த மிரட்டல்களையும் தாண்டி இந்தக் கூட்டத்தில் தோழர்கள் திரண்டிருக்கிறார்கள். பல பேர் நம்மிடம் தொடர்ந்து மெம்பர்களாகிக் கொண்டு இருக்கின்றனர். மிக விரைவில் இணைவதாக உறுதியளித்திருக்கின்றனர்.

ஆரம்பத்தில் 40 பேர் போல உறுப்பினர்களாகக் கொண்டிருந்த சங்கம் பின்னர் 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சங்கமானது. இதோ இப்போது 110க்கும் மேற்பட்ட தோழர்கள் இணைந்திருக்கின்றனர். இன்னும் பலர் வர இருக்கின்றனர். தங்கள் அடித்தளம் ஆடிப்போவது கண்டு AIBOC சங்கம் பதறிப்போய் இருக்கிறது.

AIRRBEA தலைமையிலான நமது சங்கம் வெறும் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு முடங்கிவிடும் சங்கமல்ல. ஆபிஸர்கள், ஊழியர்கள் நலன்களுக்காக தொடர்ந்து போராடுகிற சங்கம். இத உணர்ந்துகொண்டு நமது சங்கத்தில் இன்று வேகமாக உறுப்பினர்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்த நமது செயல்பாடுகளால், AIRRBEA தலைமையிலான நமது சங்கம் மிகப் பெரும் சக்தியாக தமிழ்நாடு கிராம வங்கியில் அமையப் போவது உறுதி!”

- தோழர் அருண ஜடேஜன், பொதுச்செயலாளர், பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்

 

”தமிழ்நாடு கிராம வங்கி அமைக்கப்படும் என்றும் அதன் ஸ்பான்ஸர் வங்கியாக இந்தியன் வங்கி இருக்குமென்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டவுடன், பாண்டியன் கிராம வங்கியிலிருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உயரதிகாரிகளுக்கு மிகுந்த வருத்தமும் சோகமும் ஏர்பட்டது. 1977லிருந்து பாண்டியன் கிராம வங்கியோடு கூடவே இருந்த வங்கி, இனி இல்லை என்பது வேதனை தருவதாகச் சொன்னார் ஒருவர். நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘உங்களுக்கு கொஞ்சம் கூட இதில் வருத்தமில்லையா?” என்றார் அவர். நான் கொஞ்சம் கூட தயங்காமல், அப்படியெல்லாம் இல்லை என்றேன். அவருக்கு மேலும் வருத்தமாய் இருந்திருக்க வேண்டும். நான் சொன்னேன்.. “இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இனி ஸ்பான்ஸர் வங்கி இல்லை என்பதில் எங்களுக்கு வருத்தமும் இல்லை. இந்தியன் வங்கிதான் இனி ஸ்பான்ஸர் வங்கி என்பதில் மகிழ்ச்சியும் இல்லை. ஆனால் பாண்டியன் கிராம வங்கியின் ஊழியர்களும், பல்லவன் கிராம வங்கியின் ஊழியர்களும் இணையப் போகிறார்கள் என்பது மட்டுமே பெரும் மகிழ்ச்சியாய் இருக்கிறது!

பல்லவன் கிராம வங்கியையும், பாண்டியன் கிராம வங்கியையும் ஒன்றிணைப்பது என்பது இரண்டு வங்கிகளின் பெயரை ஒன்றிணைப்பது மட்டும் அல்ல. இரண்டு வங்கிகளின் பாலன்ஸ் ஷீட்டை ஒன்றிணைப்பது மட்டும் அல்ல. இரண்டு வங்கிகளின் CBSற்கான சாப்ட்வேரை ஒன்றிணைப்பது அல்ல. இரண்டு வங்கிகளின் தலைமையலுவலகத்தை ஒன்றிணைப்பது அல்ல. இரண்டு வங்கிகளின் ரத்தமும் சதையுமாய் இருக்கிற அதன் ஊழியர்களை ஒன்றிணைப்பதும் ஆகும். அதுதான் மிக முக்கியமானது. அப்படி ஊழியர்களை ஒன்றிணைக்கும் வேலையை ஒருபோதும் நிர்வாகம் செய்யாது. அதை சமூகப்பார்வையும், சமத்துவ நோக்கும் கொண்ட தொழிற்சங்கம் மட்டுமே செய்யும். தமிழ்நாடு கிராம வங்கியில் அதனை சாத்தியமாக்கும் தகுதியும் வல்லமையும் கொண்டவை AIRRBEA தலைமையிலான நமது சங்கங்கள் மட்டுமே!

இப்போது இரண்டு கிராம வங்கி நிர்வாகங்களும் தத்தம் ஊழியர்களிடம். ’நமது வங்கியின் வணிகம் நன்றாக இருப்பதாகவும், நிதி நிலைமை நன்றாக இருப்பதாகவும், நாம் ஒன்றும் அந்த வங்கிக்கு inferior அல்ல’ என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதற்கான புள்ளி விபரங்களை பட்டியலிட்டு ‘பாருங்கள் நம் வங்கியை’ என மார் தட்டுகிறார்கள். தங்கள் வங்கியைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை தங்கள் ஊழியர்களுக்கு வந்து விடக் கூடாது என்று அவர்கள் நம்பிக்கையை கொடுக்கிறார்களாம். வங்கியின் புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு ஒரு ஊழியர் தன்னை inferior ஆக உணருவதில்லை. அப்படி ஒரு தோற்றத்தை இந்த நிர்வாகங்கள் கொடுக்க முயற்சிக்கின்றன. ஆனால் ஒரு ஊழியர் உண்மையாகவே inferior ஆக உணர்வது தங்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துத்தான். ஆனால் இந்த நிர்வாகங்கள் அதை பற்றி மட்டும் வாயேத் திறப்பதில்லை."

-தோழர் மாதவராஜ், பொதுச்செயலாளர், பாண்டியன் கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன்.

 

கூட்டத்தில் கலந்துகொண்ட நமது தோழர்கள்


5 views0 comments
world-spin-crop.gif
bottom of page