top of page

கேரள கிராம வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை


கேரள கிராம வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து, அலுவலர்களில் இரண்டு தோழர்கள் டிசம்பர் 11ம் தேதியிலிருந்து டிசம்பர் 17 வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் டிசம்பர் 17ம் தேதியிலிருந்து மொத்த வங்கியும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் கேரள கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும், அலுவலர் சங்கமும் அறிவித்திருந்தன. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நம் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்திலிருந்தும், அலுவலர் சங்கத்திலும் 13 தோழர்கள் சென்றிருந்தோம். சமீபத்தில் பாண்டியன் கிராம வங்கியில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று தோழர்களும் வந்திருந்தனர்.

நிரந்தர ஊழியர்களை பணிக்கு அமர்த்தாமல் மிக மிகக் குறைந்த ஊதியத்திற்கு தற்காலிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டும் முறை என்பது தேசம் முழுவதும் வியாபித்திருக்கிற கொடுமைகளில் ஒன்று. அவர்கள் பணி செய்வதற்கான எந்தத் தடயமும், ஆதாரங்களும் இல்லாதபடிக்கு நிர்வாகங்கள் கவனமாய் இருக்கின்றன. தங்கள் வேலை எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்னும் பதைபதைப்பில், எதிர்காலம் குறித்த அச்சத்தில் தங்கள் சுயமரியாதை இழந்து அந்த தற்காலிக ஊழியர்கள் படும் பாடு என்பது நரகத்தில் உழல்வதுதான்.

நிரந்தர ஊழியர்களை தங்கள் உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் அந்த நிரந்தர ஊழியர்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடுவது, இயக்கம் நடத்துவது என்றே தங்கள் சங்க நடவடிக்கைகளை வடிவமைத்துக்கொண்டு இருக்கின்றன. தான் மாதம் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் ருபாய் ஊதியம் பெறும்போது, தன் அருகில் அதே வேலையை இன்னொருவர் மாதம் ஐந்தாயிரத்துக்கும், மிஞ்சிப் போனால் பத்தாயிரத்துக்கும் பார்க்கிறார் என்கிற குற்ற உணர்வோ, வலியோ இல்லாமல்தான் பெரும்பாலான நிரந்தர ஊழியர்களும் இருக்கின்றனர். அவர்களும் நம்மைப் போல ஒரு தொழிலாளி என்ற உணர்வு மரத்துப் போன அவலம் இது. சுயநலமாய் சிந்தித்து சிந்தித்து குறுகிப் போன மனித உணர்வின் அடையாளம் இது.

இந்த முதலாளித்துவ அமைப்பு தொழிலாளர்களை Class-A, Class-B, Class-C என பிரித்து வைத்திருக்கிறது. நிர்வாக வசதிக்காக எனச் சொல்லப்பட்டாலும், அது ஏற்றத் தாழ்வுகளை தொழிலாளர்களிடையே விதைத்து வளர்த்து வைத்திருக்கிறது. பிரச்சினைகளை அவர்கள் இந்த Classகள் சார்ந்தே பார்க்கின்றனர். அந்தந்த classக்கென்று தனித்தனி தொழிற்சங்கங்கள் உருவாகி, அவரவர்கள் சார்ந்தே செயல்படுகின்றனர். பெரும்பாலும் Class-C எனச் சொல்லப்படும் தொழிலாளர்களைத்தான் நிர்வாகங்கள் தற்காலிகமாக பணிக்கு அமர்த்துகின்றன. எனவே மற்ற class சார்ந்த தொழிலாளர்கள் இந்தக் கொடுமைக்கு எதிராக குரல் எழுப்புவதில்லை. அனைத்துத் தொழிலாளர்களும் Working Class என்னும் ஒரே class தான் என்னும் உண்மையும், உணர்வும் மங்கிப் போய் நிற்கிறது.

இடதுசாரிப் பார்வை கொண்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே, இந்தக் கொடுமை குறித்து பேசுகின்றன. அனைத்துத் தொழிலாளர்களின் பிரச்சினையாகப் புரிந்து கொள்கின்றன. ’தற்காலிகம்’ என்னும் சித்திரவதையை எதிர்த்து போராடுகின்றன.

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கமும், அலுவலர் சங்கமும் 2008ம் ஆண்டிலிருந்து ‘தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என போராடி வருகின்றன. இந்தப் போராட்டத்தில் இரண்டு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. லேபர் கோர்ட்டில் இரண்டு அலுவலர்கள்தான் முன் வந்து தங்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிந்தும், ‘தங்கள் கிளைகளில் தற்காலிக ஊழியர்கள் எட்டு வருடங்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்’ என சாட்சி அளித்தனர். பத்து வருட போராட்டங்களுக்குப் பின் சென்ற வருடம் 19 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இந்த வருடம் 16 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். வரும் வருடத்திலும் இப்படி பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாண்டியன் கிராம வங்கியில் இந்த வெற்றிக்கு காரணமான அலுவலர்கள் எல்லாம் Class-A பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம். அதுபோல் மலப்புரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் இரண்டு அலுவலர்களும் Class-A பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த புரிதல்தான் எங்களை மலப்புரத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது.

திரும்பவும் உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்றபோது வெளிச்சமாய் இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் சுற்றி அமர்ந்திருந்தனர். தோழர்கள் பிரகாஷும், ரஜத்மோலும் எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். சோர்ந்திருந்தாலும் அவர்கள் முகம் பிரகாசமாக இருந்தது. அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து அவர்களோடு இருந்தோம். நம் அனுபவங்களை விவரித்தோம். பணிநிரந்தரம் செய்யப்பட்ட நம் தோழர்களை அறிமுகப்படுத்தினோம்.

பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யும் முயற்சியில், நம் சங்கங்கள் அந்தக் கோரிக்கையை தனியாக வைத்ததில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள், கிளர்க்குகள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் சேர்த்து வைத்துத்தான் போராட்டங்கள் நடத்தி இருந்தோம். அப்போதுதான் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என திட்டமிட்டோம். ஆனால் கேரளாவில் ‘தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்னும் ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அனைவரும் சம்பள வெட்டு என நிர்வாகம் அறிவித்திருக்கிறது. தினமும் இரு நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்களும், கிளர்க்குகளும் வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கின்றனர். 650க்கும் மேற்பட்ட கிளைகளில் பணிபுரியும் 3000த்திற்கும் மேற்பட்ட அலுவலர்களும், கிளர்க்குகளும் தாங்கள் பணிபுரியும் கிளைகளில் இந்த 3 நாட்களும் மதிய உணவு சாப்பிடாமல் இருக்கிறார்கள். வரும் நாட்களும் அதைத் தொடர இருக்கிறார்களாம். ஒட்டு மொத்த கேரள கிராம வங்கித் தொழிலாளர்கள் அனைவரும் ஓருருவமாக, பெரும் சக்தியாக திரண்டு நிற்கிறார்கள்.

அதிசயம் போலிருந்தது. அவர்கள் தங்களுக்காக போராடவில்லை. தங்கள் வர்க்கத்துக்காக போராடுகிறார்கள். கேரள கிராம வங்கித் தோழர்கள், இந்திய தொழிலாளர்கள் அனைவருக்கும் சொல்லும் செய்தி இதுதான்.

மாலை 5 மணிக்கு நம் தோழர்கள் புறப்பட ஆயத்தமானதும், கஞ்சியும், தேங்காய்த் துவையலும் தந்தார்கள். ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் இருந்த நம் தோழர்களுக்கு அது அமுதாக, பெரும் ருசியாக இருந்தது. தோழர்கள் பிரகாஷும், ரஜத்மோலும் இந்த ருசியை எப்போது காண்பார்கள் எனத் தோன்றியது.

அவர்களின் பசி வேறு. அவர்கள் பெறப்போகும் ருசியும் வேறு. அது வெற்றியின் ருசி. தற்காலிக ஊழியர்களின் வீடுகளில் ஏற்றப் போகும் வெளிச்சத்தின் ருசி. இந்தியத் தொழிலாளர் வர்க்கத்துக்கு தரப் போகும் நம்பிக்கையின் ருசி.

விடைபெறும்போது, படுத்திருந்த தோழர் ரஜத்மோல், முஷ்டி மடக்கி தன் வலது கையை உயர்த்தி சிரித்தார்.

நம் தோழர்கள், ‘லால் சலாம்’ என்று குரல் எழுப்பினார்கள்.


4 views0 comments
world-spin-crop.gif
bottom of page