பிரசுரம்-3
44 நாட்கள் வேலை நிறுத்தம்
நீங்களே சொல்லுங்க..
"எப்பங்க பேங்க்கத் திறக்கப் போறீங்க?"
பாக்குற இடத்திலெல்லாம் இதே கேள்வியாயிருக்கு. என்னங்க செய்றது. நாலு வருஷமா தொடர்ந்து கஷ்டப்படுறோம். நிர்வாகம் ஏன்னுகூட கேக்க மாட்டேங்குது. போராட்டதுல இறங்கிட்டோம்....
நீங்களே சொல்லுங்க...
எங்களோடயே வேலைபாக்குற கடைநிலை ஊழியர்கள் காலம் பூராவும் கடைநிலை ஊழியர்களாவே இருக்கணும்னு நிர்வாகம் சொல்லுது. இது நியாயமாங்க?
சம்பளத்த கூட்டிக் கேக்கலீங்க ஆனா உள்ள சம்பளத்தையாவது உருப்படியா கொடுக்கனுமா இல்லியா? அதிலயும் கைவச்சி்ருக்கு நிர்வாகம்.
அங்க இங்கன்னு பேங்கல கொள்ளையும் கொலையுமா நடக்கு. இந்த நெலமைல நாங்க இருக்கிறதோ கிராமத்துல. ஏதாவது ஒண்ணு நடந்தா என்னங்க ஆகுறது? யாருங்க பதில் சொல்றது? அதனால எங்க உயிருக்கும் பேங்குக்கும் பாதுகாப்பு வசதி செஞ்சுதரக் கேட்டோம். ரொம்பச் செலவாகுமாம். அதாவது நாங்க செத்தா கூட பரவாயில்லனு நிர்வாகம் சொல்லாம சொல்லுது.
கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு கிராமுக்கு ரூ.130/- னு கொடுக்கிற நகைக்கடனை ரூ.200/- க்கு கொடுங்கன்னு கேட்டோம். "அது ஒங்க பிரச்சனை இல்ல... பேசாதீங்கன்னு" பதில்.
நீங்களேச் சொல்லுங்க...
ஒங்க பிரச்சனையை நாங்க பேசக் கூடாதா? இங்க தான் பெரிய சூழ்ச்சியே இருக்கு. என்னைக்கு ஒங்க பிரச்சனைகளை நாங்களும், எங்க பிரச்சனையை நீங்களும் பேச ஆரம்பிச்சிட்டோமா, அன்றைக்கு இந்த நிர்வாகம், இந்த அரசாங்கம் எல்லாத்துக்குமே நாம் ஒரு பெரிய பிரச்சனையாயிருவோம்.
நீங்க எங்க பிரச்சனைய பேசக்கூடாது என்கிறதுக்குத்தான் நிர்வாகம் பேப்பர்ல உண்மைய மறைச்சு...பொய் விளம்பரமா கொடுக்குது. போலீஸ்ல பொய் கேஸும் போட்டிருக்கு.
உண்மை இதாங்க...
151 கிளைகள்ள 149-ல் ஒண்ணுமே நடக்கல. மொத்தமுள்ள 856 பேர்ல 750 பேர் வேலைக்கு போகல. வேலைநிறுத்தம் தொடங்கி மூணு வாரம் ஆகுது. நிர்வாகம் பிடிவாதமாக இன்னும் வாயைத் தெறக்கல.
ஒங்க கஷ்டம் எங்களுக்குப் புரியுது...
பணத்தை பேங்கல போட்டிட்டு அவசரத்துக்கு எடுக்க முடியாம... நகை அடகுவச்சிட்டு கல்யாணங் காச்சிக்கு திருப்ப முடியாம... நீங்க படுற கஷ்டங்கள்.
மனசு ரொம்பவும் வலிக்குது. எங்களுக்காக இந்த கஷ்டங்களை பொறுத்துக்குங்க. நாங்களும் உங்க புள்ளைங்கதான். எங்க போராட்டம் ஜெயிக்கிறது எல்லா வழியிலேயும் நீங்க தர்ற ஒத்துழைப்பிலேயும் ஆதரவிலேயும் அடங்கி இருக்கு.
- வரலாறு விரியும்.