பிரசுரம்-2
குலோப்ஜாமுக்கு ஜீரா கேட்கவில்லை கூழுக்கு உப்புத்தான் கேட்கிறோம்.
தேதி- 30/09/1987
இரண்டு நாட்கள் ஆர்ப்பரிக்கும் அலைகளை எதிர்த்து நீந்தி கரை கைக்கெட்டும் தூரத்தில் தெரிந்ததென்று நம்பினோம். கரையை அடைந்தோம். அது கரை இல்லை. சின்னத்திட்டு. அப்.பா..டா.. என்று கையை காலை உதறி உட்கார்ந்தோம். திடீரென்று திட்டே நகர்ந்தது. கவனித்தால்...ஐயோ அது திட்டே இல்லை. திமிங்கலம் . இது தான் எங்கள் வாழ்க்கை.
ஆமாம் மகாஜனங்களே!
ஒரு வருடத்திற்கு முன் ஓயாது போராட்டம்... உண்ணாவிரதம்... தர்ணா... ஒத்துழையாமை இயக்கம்... வேலைநிறுத்தம். இப்படி அடிக்கடி தலைமை அலுவலகத்தின் முன் பந்தல் போட்டோம். எங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையாவது வேண்டுமென்று கேட்டோம். அதற்காக நாங்கள் போட்ட கோஷங்களும், கொண்ட கோபங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. சம்பளம் இழந்து, சார்ஜ்ஷீட் வாங்கி எங்கள் உரிமைகளை நிலை நாட்டினோம். போராட்டத்தால் நிர்வாக தலைமை மாறியது.
பிரச்சனை தீர்ந்தது என நினைத்தோம். நடந்தது வேறு. பிரச்சனை திசை திருப்பப்பட்டு இருக்குகிறது. தலையனை மாற்றி போட்டால் தலைவலி தீருமா? தீரவில்லை!
எங்களுக்கு சேர்மனாக வருபவர் எங்களை விட பல மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் நிறுவனத்திலிருந்து மூன்று வருடத்துக்கு ஒரு முறை இறக்குமதி செய்யப்படுவார். அவர் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் வாங்கட்டும். என்னென்ன சலுகைகளை வேண்டுமானாலும் அனுபவிக்கட்டும். ஆட்சேபனை இல்லை. அது ஜனநாயக உரிமை. ஆனால் நாங்கள் கேட்கும் அஞ்சு ரூபாய்... பத்து ரூபாய் கோரிக்கைகளையாவது நிறைவேற்றட்டும். அது போதும்.
கோரிக்கைகளை இன்னும் கிடப்பில் கிடக்கின்றன. உங்களுக்கென்ன கோரிக்கை? பேங்க் உத்தியோகஸ்தர்கள் தானே? 'வொயிட் காலர்ஸ்' தானே?' என்று நீங்கள் கேட்பீர்கள். அது தான் இல்லை. தமிழக அரசின் தாலுகா ஆபிஸ் உத்தியோகஸ்தர்கள் வாங்கும் சம்பளத்தை விட சில பதவிகளில் எங்களுக்கு சம்பளம் குறைவு. ஆனால் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் உள்ள வேலைப்பளுவை விட அதிகம். இது தான் எங்கள் நிலைமை.
நாங்கள் 'வொயிட் காலர்ஸ்' தான். ஆனால் உள்ளே கிழிந்த பனியன்கள்.
தமிழக அரசு ஊழியர்களுக்கும் எங்களுக்கும் சில சம்பள வித்தியாசம் இருக்கிறது. அதைச் சரி பண்ணச் சொல்கிறோம். அதற்காக மனுபோட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. நாங்கள் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தையும் குறைக்க சொல்லி இருக்கிறது நிர்வாகம். "குதிரை குப்புறத் தள்ளியது போதாது என்று குழியும் பறிக்கிறது" பேசினோம்... பேசினோம்... நிர்வாகம் எங்களை வீதிக்கு விரட்டி இருக்கிறது.
ஆகவே மகாஜனங்களே!
வருகின்ற 30/09/1987 அன்று சாத்தூரில் தர்ணா போராட்டம் நடத்துகிறோம். உங்கள் ஆதரவு... ஏன் அனுதாபம் இருந்தாலே போதும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
-வரலாறு விரியும்.