காலடிச்சுவடுகளில் காலத்தின் நினைவுகள் இளைப்பாறுகின்றன. சங்கம் கடந்து வந்த பாதையின் பதிவுகளாய் பழைய துண்டு பிரசுரங்களை இங்கே தொகுத்து இருக்கிறோம். கோரிக்கைகள் இருக்கிறது. போராட்டங்கள் தெரிகின்றன. அவற்றின் ஊடே நமது வாழ்க்கை இருக்கிறது. வரலாறு இருக்கிறது. கொஞ்சம் இலக்கியமும் இருக்கிறது.
பிரசுரம்-1
இது உங்கள் போராட்டம்!
தேதி- 07/03/1986
பொதுமக்களே!
ஒரு நிமிடம் நில்லுங்கள். எங்கள் நியாயங்களை கேளுங்கள். கிராமங்களை முன்னேற்றவும், விவசாயிகளின் வாழ்க்கை நலனுக்காகவும் ஏற்படுத்தப்பட்ட எங்கள் வங்கியில் , கடந்த எட்டு மாத காலமாக விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கொடுக்கக்கூடிய விவசாய நகைக்கடன்களை நிறுத்தி வைத்து இருக்கிறது நிர்வாகம். அவர்களுக்காக நிர்வாகத்திடம் குரல் கொடுத்தோம்.
பொது மக்களுக்கு கொடுக்க வேண்டிய கடன்கள் பலவற்றை நிறுத்தி வைத்திருப்பது நிர்வாகம் தான். நாங்கள் இப்போதும் , எப்போதும் உங்களுக்காக- இன்முகத்தோடு- பணி செய்யத் தயார். இந்த நிர்வாகம் தயாரா?
குறைந்தபட்ச வசதிகூட இல்லாத கிராமங்களில் பணிபுரியும் எங்கள் பெண் ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் கிளைகளில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டினோம். கழிப்பிட வசதி செய்து தரவில்லை.
எட்டு வருட காலமாக இரவு பகல் பாராது வாழ்க்கையெல்லாம் தற்காலிகமாகவே பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு எட்டு வருட கால உழைப்பின் அடையாளத்திற்கு அத்தாட்சி பத்திரம் கேட்கிறோம்.
இந்திய அரசு எங்களுக்காக வீடுகட்ட, கடன் தர அனுமதி கொடுத்து இரண்டு வருடமாகியும் நிர்வாகம் இருட்டடிப்புச் செய்கிறது. கேட்டால் தர மறுக்கிறது. ஆனால் தினப்பத்திரிக்கைகளில் பொங்கல் பரிசென்றும், புத்தாண்டு பரிசென்றும் ரூ.50000/- எங்களுக்கு வீடுகட்டத் தரப்போவதாக பொய் விளம்பரங்கள்.
இவைகளை கேட்டால் நாங்கள் 'பேட்டை ரௌடிகளாம்' நிர்வாகம் சான்றிதழ் தருகிறது. முட்டாள்களாம் (idiots). ஆட்டுமந்தைகளாம். எங்களை ஒழுக்கமில்லாதவர்கள் (Rascals) என்ற வார்த்தைகளை வீசுகிறது நிர்வாகம்.
"Bastard உனக்கெல்லாம் எவன் வேலை கொடுத்தான்", "நீயெல்லாம் தூக்கு போட்டுச் சாகலாம்", "துப்பாக்கி இருந்தா சுட்டுப்புடுவேன்"- என வாய்க்கு வந்தபடி ஊழுயர்களை தரக்குறைவாக வேறு பேசுகிறார் சேர்மன்.
ஒருபுறம் நியாயம் கேட்டவர்களுக்கு சம்பளவெட்டு... குற்றப்பத்திரிகை... மிரட்டல். 'யூனியனாவது வெங்காயமாவது' என்ற ஏகவசனப் பேச்சுகள். மறுபுறம் தன் தவறுகளை மூடி மறைக்கிற ஜால்ராக்களுக்கு வங்கிப் பணத்தை வாரி இறைக்கிறார். பொதுநிதியை சுறையாடாதே என்று சொன்னால் ஆள் வைத்து அடிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்.
இதை அனுமதிக்க முடியாது. இதோ வீதியில் நின்று குரல் கொடுக்கிறோம். இந்தப்போராட்டத்தின் வெற்றி உங்கள் வெற்றி! ஆதரவு தாரீர்.
(07/03/1986 அன்று சாத்தூர் தபால் அலுவலகம் முன்பு காலை 10.00மணி முதல் மாலை 6.00 மணி வரை " தர்ணா".
10/03/1986 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம்.)
- தொடரும்