18.09.2018 அன்று மாலை 5 மணி அளவில் நமது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மண்டல அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம், நமது தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய நிகழ்வானது.
ஏறத்தாழ எண்பது தோழர்கள், அதிலும் குறிப்பாக இளம் தோழர்கள் விருதுநகர் வீதியில் நின்று தங்கள் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி இருக்கின்றனர்.
மூத்த தோழர்கள் தங்கள் இளம் வயதில், கற்ற போராட்ட அனுபவத்தை, இன்றைய இளம் தோழர்களுக்குள் செலுத்தி இருக்கின்றனர்.
வீதியில் இறங்கி போராடாமல் நம் பிரச்சினைகளுக்கு விடிவு இல்லை என்பதை உரக்கச் சொல்லி இருக்கின்றனர்.
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் செய்யும் துரோகங்களை, வஞ்சகங்களை இன்று பொதுமக்கள் மத்தியில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
'எளிய ஊர்க்குருவிகளை ராஜாளியை எதிர்க்கப் பழக்குவோம்.
ஊர்க்குருவிகள் ஒன்று சேர்ந்தால்
ராஜாளியின் இறகுகள் கூட மிஞ்சாது'
மகாகவியின் கவிதை வரிகள் உயிர் பெறுகின்றன அந்த உயிர்த்துடிப்போடு நாம் போராடினால் நமது கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுக்க முடியும்.
போராட்டப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!