தோழர்களே!
வணக்கம்.
இன்று (12.09.2018) நமது இரு சங்கங்களும் அறிவித்தபடி, தலைமையலுவலகம் முன்பு, இரு சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்களும் உண்ணாவிரதத்தை துவக்கினர்.
பாண்டியன் கிராம வங்கி சேர்மன் அவர்களும் திடுமென நாம் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்து, நம்மோடு தரையில் அமர்ந்து, தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். ”நான் ஓர்க்கர்ஸ்க்கு எதிரானவன் இல்லை, அவர்களுக்காக நானும் போராடத் தயார். ஆனால் நிர்வாகத்தரப்பில் இருக்கும் நியாயங்களை தொழிற்சங்கம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். அவர் உட்கார்ந்து இருப்பதை அறிந்து, தலைமையலுவலகத்தில் இருந்து பொதுமேலாளர், சீனியர் மேனேஜர்கள் அங்கு வந்தனர். அவர்களையும் அங்கே உட்கார சேர்மன் அழைத்தார். தலமையலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் வெளியே அழைத்தார்.
சேரமனின் விநோத நடவடிக்கையை இரு சங்கத்தின் செயற்குழுத் தோழர்களும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர். உரத்த குரலில் கோஷங்களிட்டனர். நமது நியாயமான கோரிக்கைகள் தோழர்களின் குரல்களின் வெப்பத்தோடு தலைமையலுவலகத்தில் சூழ்ந்தன.
PGBOA தலைவர் தோழர் பத்மநாபன் அவர்கள் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசினார். என்னென்ன கோரிக்கைகள் குறித்து நமது போராட்டம் என்பதை தெரிவித்தார்.
உடனே சேர்மன் எழுந்து, நிர்வாகத் தரப்பில் சில விஷயங்களைப் பேச வேண்டி இருப்பதாகவும், எல்லோருக்கும் உண்மைகள் தெரிய வேண்டும் என்பதாலும் தான் பேசுவதாகக் கூறினார்.
வங்கியின் அன்றாட நிர்வாகப் பணிகளில், மிகுந்த அழுத்தத்தோடு தன் தலைமையில் செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். அந்த சிரமங்களை தொழிற்சங்கங்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்றார். தனது நிர்வாகம் ஊழியர்களுக்கு பல நல்ல காரியங்களை செய்திருப்பதாகவும், எந்த நிர்வாகமும் செய்யாத பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் விளக்கினார். ஒழுங்கு நடவடிக்கைகளில் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். தற்காலிக ஊழியர்களில் 19 பேரை தனது நிர்வாகம்தான் பணி நிரந்தரம் செய்தது, மற்றவர்களை பணி நிரந்தரம் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். நிச்சயம் விரைவில் பணி நிரந்தரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். டிமானிட்டைசேஷன், ஜி.எஸ்.டி போன்ற அறிவிப்புகளால், வங்கியின் வணிகம் பாதிக்கப்பட்டு பெரும் சாவல்கள் நிறைந்துள்ள காலம் இது. இந்த இக்கட்டான நேரத்தில் போராட்டங்கள் நடத்துவது வங்கிக்கு எதிராக அமையும், தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து, தோழர் மாதவராஜ் பேச ஆரம்பித்தார். இரு சங்க செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளும்படியாக நாம் ஆரம்பித்த இந்த உண்ணாவிரதத்தில் சேர்மனும் கலந்துகொண்டு, தலைமையலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் அலுவலர்களும் கலந்து கொள்ளச் செய்ததற்கு நாம் நன்றி செலுத்துவோம் என்றார். மேலும் ஒரு அறைக்குள் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் நடக்கிற உரையாடலை அனைவருக்கும் தெரியும்படிச் செய்தமைக்கும் சேர்மன் அவர்களை பாராட்ட வேண்டும் என்றார்.
”இதுவரை சேர்மன் நிர்வாகத்தரப்பில் பேசினார், அது ஒரு பிரச்சினையின் ஒரு பக்கம். தொழிற்சங்கத் தரப்பில் அதன் இன்னொரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். ஒரு பக்கத்தை மட்டும் பார்த்தால் உண்மைகளும் இருக்காது நியாயங்களும் புரியாது.
இந்த வங்கியில், அலுவலர்கள், ஊழியர்கள் சேர்த்து 1400க்கும் மேல் பணி புரிகிறார்கள். இது போக தற்காலிக ஊழியர்கள், அப்ரைசர்கள், பிஸினஸ் கரஸ்பாண்டட்கள் எல்லாம் சேர்ந்து 3000 பேர் பணி புரிகிறோம். இவர்களால் இந்த வங்கியின் ஒரு முடிவைக்கூட தீர்மானிக்க முடியாது. இதுதான் தொழிலாளர்கள் நிலைமை. ஆனால் இந்த வங்கிக்கேச் சம்பந்தமில்லாத 9 போர்டு மெம்பர்கள் தீர்மானிப்பார்கள். அவர்கள் முதலீடு செய்தவர்களின் பிரதிநிதிகள். இதுதான் தொழிலாளர்களுக்கும், முதலீட்டிற்கும் உள்ள நிலைமை. இங்கே தொழிலாளர்களின் குரலை, அவர்களின் வேதனையை, பிரச்சினையை பேச தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அதைத்தான் நாம் இங்கு உண்ணாவிரதமாகச் செய்து கொண்டிருக்கிறோம்.,
இந்த வங்கியின் நிர்வாகத்துக்கு அன்றாட நிர்வாகத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அது இந்த பாண்டியன் கிராம வங்கிக்கு மட்டும் இல்லை. இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளும் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகள். ஆனால் இந்த ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமான பிரச்சினைகளை இந்த நிர்வாகம் உணர்ந்திருக்கிறதா? கடுமையான ஆள் பற்றாக்குறையால் லீவு எடுக்க முடியாமல், டெபுடேஷன் கிடைக்காமல் பணியாற்றும் கொடுமையை அறிந்திருக்கிறதா?
தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்து 2015ம் ஆண்டில் தீர்ப்பு வந்தது. இந்த நிர்வாகம் அதனை அமல்படுத்தவில்லை. இரண்டு வருடங்கள் காலதாமதம் செய்தது. பின்னர் நாம் ரிஜினல் லேபர் கமிஷனரிடம் முறையிட்டோம். அவரிடமிருந்து கடுமையான கடிதமும், தலையீடும் வந்த பிறகுதான் நிர்வாகம் 19 பேரை பணி நிரந்தரம் செய்தது. அர்தன் பிறகு ஒரு வருடத்திற்கு மேலாகியும், அடுத்த 16 பேரை பணி நிரந்தரம் செய்ய மறுக்கிறது. கிளையில் நம் அருகே மாதம் எட்டாயிரத்துக்கும், ஒன்பதாயிரத்துக்கும் பணி புரியும் அவர்களின் வேலையும் வாழ்க்கையும் எங்கள் நெஞ்சை அறுக்கிறது. ஒவ்வொரு காலை விடியும்போதும், எதாவது நல்ல செய்தி தங்களுக்கு வராதா என காத்திருக்கும் அவர்களின் வேதனையும், வலியும் இந்த நிர்வாகத்துக்கு தெரியுமா?
இந்த நிர்வாகம் ஊழியர்களுக்காக சில நல்ல காரியங்களைச் செய்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். அதே வேளையில் பல நல்ல காரியங்களைச் செய்யாமல் இருக்கிறது. 2018ம் ஆண்டிற்கான பிரமோஷன் இன்னும் அறிவிக்கப்படவே இல்லை. இன்னும் பல அலவன்சுகள் கொடுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் காலதாமதம் செய்வதுதான் இந்த நிர்வாகத்தின் இயல்பாகவே இருக்கிறது. ரெட் டேபிஸம் என்பதில் மூழ்கிக் கிடக்கிறது நிர்வாகம்.
வங்கிக்காக நிர்வாகம் பேசினால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கம் பேசத்தான் செய்யும் இதை சேர்மன் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் நியாயமற்றது என இந்த நிர்வாகத்தால் சொல்ல முடியுமா?
நாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் திடுமென வைத்தவை இல்லை. பல காலம் தொடர்ந்து பேசி, ஒன்றும் ஆகாததால் வைத்த கோரிக்கைகள்.
இந்த நிர்வாகம் அதனைச் செய்ய மறுத்ததால்தான் நாங்கள் போராடுகிறோம். நிச்சயம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும்”
என தோழர் மாதவராஜ் தொடர்ந்து பேசினார்.
அதன்பின், சேர்மன் எழுந்து, சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறி, அங்கிருந்து தன் இருப்பிடத்திற்குச் சென்றார். தலைமையலுவலக தோழர்களும் அவர் பின் சென்றனர்.
அடுத்த சில மணி நேரங்களில் நிர்வாகத்தரப்பில் இருந்து பொது மேலாளர்கள், ஸீனியர் மேலாளர்கள் அடங்கிய குழு வந்து, நமது கோரிக்கைகளில் நிர்வாகம் இது வரை என்ன செய்திருக்கிறது என்பதை விளக்கியது. அனைத்து கேடர்களுக்குமான பதவி உயர்வு, தற்காலிக ஊழியர் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாதகமான பதிலைத் தருகிறோம் என்றனர்.
நாம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்களிடம் சொல்லி விட்டோம்.
தோழர்களே!
இந்த நிர்வாகம், மிகவும் நல்ல நிர்வாகம் என்பதாக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறது. ஆனால் ஊழியர்களின் கோரிக்கைகள் இழுத்தடிக்கப்படுவது, நிர்வாகத்தை வேறு விதமாகக் காட்டுகிறது.
கிளைகளில் நாம் படும் கஷடங்களும், அவஸ்தைகளும் இந்த நிர்வாகம் அறியவில்லை. அதை அறியாதது மட்டுமல்ல, நமக்கான நலன்களைப் புறக்கணிக்கிறது.
நாம் போராட்டத்திற்கு வலிய செல்லவில்லை. தொடர்ந்து பேசிப் பார்த்தோம். நிர்வாகம் பிரச்சினைகளை தீர்க்காமல் இழுத்தடித்ததாலே நாம் போராட்டத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இன்றைய செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதம் மிகுந்த எழுச்சியோடும், உக்கிரத்தோடும் நடந்து முடிந்திருக்கிறது.
தலைமையலுவலகம் முன்பு நம் இளம் தோழர்களின் கோஷங்களும், ஆவேசமான உரைகளும் நம்பிக்கையளித்தன.
அடுத்தக் கட்ட போராட்டங்கள் நமது மண்டல அளவிலான ஆர்ப்பாட்டங்கள்.
தயாராவோம்!
போராடுவோம்!
வெற்றி பெறுவோம்!
J.மாதவராஜ் S.நடராஜன்
(GS – PGBWU) (GS – PGBOA)