top of page

பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகத்தில் கொண்டாடப்பட்ட தோழர் முகர்ஜியின் 82வது பிறந்தநாள்


AIRRBEAவின் முன்னாள் பொதுச்செயலாளரும், நம் அன்பிற்குரிய தோழருமான திலிப் குமார் முகர்ஜியின் 82 வது பிறந்தநாள் 07.09.2018 அன்று நாடு முழுவதும் கிராம வங்கி ஊழியர்களால் கொண்டாடப்பட்டது.

கிராம வங்கி ஊழியர்கள் வாழ்விலும், கிராம வங்கி தொழிற்சங்க வரலாற்றிலும் சகாப்தமாக விளங்கும் அந்த மனிதர் குறித்த முக்கிய நிகழ்வுகளையும், நினைவுகளையும் நம் தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நம் கோரிக்கைகள், நம் பிரச்சினைகளோடு தொடர்புடைய, அவர் குறித்த தகவல்களை மட்டுமே நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். அவைகளிலிருந்து மட்டுமே அவரைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

அப்படிப்பட்ட தோழரின் தனிப்பட்ட வாழ்வை, அவரது குடும்பத்தில் இருந்து சேர்த்து அறியும் போதுதான், அவர் குறித்து நாம் முழுமையாக அறிய முடியும்.

தோழர் முகர்ஜியின் உறவினர்கள், நட்பு வட்டாரத்தில் இருந்தவர்கள் பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருந்தனர். வெளிநாடுகளிலும் வசித்து வந்தனர். முகர்ஜியோ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலையை விட்டு கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்தார்.

வாழ்வில் சிறு சிறு சம்பவங்களே, நினைத்துப் பார்த்து முடியாத பெரும் வரலாறு ஒன்றுக்கு ஆரம்பமாகி விடுகிறது. 1977ம் ஆண்டு லக்னோவில் பல்வேறு கிராம வங்கிகளிலிருந்து கலந்து கொண்ட ஆபிஸர்களின் டிரெயினிங் அப்படிப்பட்டது.

1975ம் ஆண்டு துவங்கப்பட்ட கிராம வங்கிகள் என்பதே பெரும் உழைப்புச் சுரண்டல்தான். கிராமங்களில் வங்கிக் கிளைகள் துவங்க வேண்டுமென்றால் வணிக வங்கியின் கிளைகளையே துவக்கி இருக்கலாம். ஆனால் கிராம வங்கிகள் என ஏன் துவக்க வேண்டும். அதில்தான் அரசின் சூழ்ச்சி இருந்தது. வணிக வங்கியின் கிளைகள் துவங்கப்பட்டால் வணிக வங்கியின் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஊதியத்தை குறைத்து வழங்கவே கிராம வங்கிகள் துவங்கப்பட்டன. இது அநீதி. ஆனால் தனித்தனி கிராம வங்கிகளாய், மாநில அளவில் துவங்கப்பட்ட கிராம வங்கி ஊழியர்கள் இது குறித்து அறியவோ, அறிந்தாலும் சேர்ந்து குரல் கொடுக்கவோ முடியாத சூழல் இருந்தது. அங்கங்கு தனித்தனியாய் இருந்தனர். இந்த நிலையில்தான் 1977ம் ஆண்டு லக்னோவில் அந்த டிரெயினிங் நடந்தது.

அதில் கலந்து கொண்டவர்களில் தோழர் முகர்ஜியும் ஒருவர். காலையில் டிரெயிங்கிற்கான வகுப்புகள் முடித்து, மாலையில் அனைவரும் உட்கார்ந்து பேசும்போது தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உணர்ந்தனர். அந்த அநீதியை களைவதற்கு சங்கமாக திரள வேண்டும் என முகர்ஜிக்கு யோசனை வந்தது. அதுதான் அவரது வாழ்விலும், கிராம வங்கி ஊழியர்கள் வரலாற்றிலும் திருப்பு முனையாக அமைந்தது.

கிராம வங்கி ஊழியர்களுக்கான சங்கமாக AIRRBEA உருவெடுத்தது. தோழர் முகர்ஜி இந்தியா முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பயணப்பட்டார். AIRRBEA என்னும் மகத்தான் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கினார். சம வேலைக்கு சம ஊதியம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஊழியர்களைத் திரட்டி போராட்டம், சட்டரீதியான போராட்டம் இரண்டையும் ஒருங்கிணைத்து சம வேலைக்கு சம ஊதியம்; என்னும் நீதி நிலைநாட்டப்பட்டது.

5 வது இருதரப்பு ஒப்பந்தத்தை கிராம வங்கி ஊழியர்களுக்கு அமல்படுத்திய நிர்வாகம் 6வது, 7 வது இருதரப்பு ஒப்பந்தம் இரண்டையும் அமல்படுத்த மறுத்தது. அதை எதிர்த்து, நீதியை நிலைநாட்ட அடுத்தக்கட்ட போராட்டம். அதிலும் வெற்றி பெற்றோம்.

அப்படி அமல்படுத்தப்படும்போது, வணிக வங்கியில் உள்ளது போல் பென்ஷன் வழங்கப்படவில்லை. இன்னொரு அநீதி கிராம வங்கி ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டது. மீண்டும் நீதியை நிலைநாட்ட போராட்டம். இப்போது முகர்ஜியின் மறைவுக்குப் பின்னால், அது சாத்தியமாகி இருக்கிறது. அவரது வழிகாட்டல்களும், அவர் தலைமையில் AIRRBEA வகுத்த பாதையும் இதனை சாத்தியமாக்கி உள்ளது.

இப்படி, கிராம வங்கி ஊழியர்களுக்கு நீதியை நிலைநாட்ட, ஒவ்வொரு நொடியும் சிந்தித்தார். செயல்பட்டார். தனது வாழ்வை அர்ப்பணித்தார். அதனால்தான் AIRRBEA அவரது பிறந்தநாளை JUSTICE DAY என கொண்டாட அழைப்பு விடுத்திருக்கிறது. நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

இந்தப் பயணத்தில் அவரது குடும்பம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கல்கத்தாவில் இருந்து நான்கைந்து மணி நேரத்துக்கும் அதிக பயண தூரமான பெர்காம்பூர் என்னும் சிறிய ஊரில் அவர் வசித்து வந்தார். வீடே சங்க அலுவலகமாக செயல்பட்டது. அங்கிருந்துதான் 196 கிராம வங்கிகளுக்கும் சர்க்குலர்கள் தொடர்ந்து அனுப்புவார். அவரது ஒரே மகன் சாம்ராட்தான் அந்த சர்க்குலர்களை டைப்ரைட்டரில் தட்டச்சு செய்வார். நோய்வாய்ப்பட்ட மனைவியும், ஒரே மகனும், தோழர் முகர்ஜி மாதக்கணக்கில் பல்வேறு கிராம வங்கிகளுக்கு பயணம் செய்த போதெல்லாம் வீட்டில் தனியாக இருந்திருப்பார்கள். அவர்களது மனநிலை எப்படி இருந்திருக்கும்? எதையெல்லாம் அவரும் , அவரது குடும்பமும் தாங்கி இருப்பார்கள்? அதை உணர முடிந்தால்தான் முகர்ஜி என்னும் மகத்தான மனிதரின் வாழ்வும், அதன் அர்த்தமும் விளங்கும்.

தோழர் முகர்ஜி உடல்நலமிழந்து, பெங்களூரில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கு தொழிற்சங்க கூட்டத்தில் சக்கர நாற்காலியில் கலந்து கொண்டார். அப்போது அவரது ஒரே மகன் சாம்ராட், கிராம வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதினார்.

“என் தந்தை என்னோடு செலவழித்த நாட்களை விட அதிகமாக உங்களோடுதான் செலவிட்டார். எங்களைப் பற்றி யோசித்ததை விட அதிகமாக உங்களைப் பற்றித்தான் யோசித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் இப்போதும் உங்களுக்காகவே அவர் அலைகிறார். தோழர்களே! நீங்கள் அவரைப் பார்த்துக் கொள்வீர்கள் என நம்பிக்கை இருக்கிறது” என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாராம்சம்.

தோழர்களே!

அவரது அன்பு மகன், தன் தந்தை இந்த நாளில் தேசமெங்கும் கிராம வங்கி ஊழியர்களால் கொண்டாடப்படுவதைப் பார்த்து, அவர் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்வார். பெருமை கொள்வார்.

தோழர் முகர்ஜியை நாம் காலமெல்லாம் போறுவோம்!


3 views0 comments
world-spin-crop.gif
bottom of page