அந்த மகத்தான 44 நாட்கள் – பகுதி 1


உற்சாகமும், வலியும் நிரம்பிய நாட்கள்தான் அந்த 44 நாட்களும். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது திரும்பிப் பார்க்கிறபோது சிலிர்ப்பாகவும், அதிசயம் போலவும் தெரிகிறது. அந்த அனுபவங்களை மறுவாசிப்பு செய்கிறபோது, தொழிற்சங்கம், போராட்டம் குறித்தெல்லாம் புதிய பார்வைகளும், அணுகுமுறைகளும் தேவை என்பதை உணரமுடிகிறது. அந்த தளங்களில் தீவீரத்தோடு செயலாற்றுவதற்கான தேவை இருப்பதையும் அறிய முடிகிறது.

இடதுசாரி பார்வையும் அணுகுமுறையும் கொண்ட எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கமும் (இப்போதைய பாண்டியன் கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோஷியாஷனும் இணைந்திருந்த சங்கம்), ஐ.என்.டீ.யூ.சி (காங்கிரஸ்) பாரம்பரியத்தில் வந்த பாண்டியன் கிராம வங்கி எம்ப்ளாயிஸ் யூனியனும் இணைந்து நடத்திய வேலை நிறுத்தம் அது. மிகச் சாதாரணமாக ஒன்றிரண்டு நாட்களில் நிர்வாகம் அடிபணிந்துவிடும் என்று பாண்டியன் கிராம வங்கியில்ஆரம்பித்த அந்த வேலைநிறுத்தம் 44 நாட்கள் நீண்டது. 14 கடைநிலை ஊழியர்களின் பணி நியமனம், ஊதியங்களில் உள்ள முரண்பாடு, போன்றவைதாம் முக்கிய கோரிக்கைகள். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் பேசி வந்தும், இந்தக் கோரிக்கைகள் குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது, ஸ்பான்ஸர் வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி)தான் முடிவெடுக்க வேண்டும் என நிர்வாகம் ஒரேயடியாகச் சொல்ல, வேலைநிறுத்தத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.

நம்பிக்கைகளும், துரோகங்களும் கொண்ட கதையாக அது உருவெடுத்தது......

அந்தக் கதையை எனது சொந்த அனுபவத்திலிருந்து பகிர்கிறேன் இங்கு - மாதவராஜ்

1988ம் வருடம் ஆகஸ்ட் 30ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் ஆரம்பமாகியது. காலையிலேயே ஊரிலிருந்து (பூச்சிக்காடு கிளை) தூத்துக்குடி விசாகா லாட்ஜுக்கு புறப்பட்டேன். அம்மா எப்போது வருவாய் என கேட்டார்கள். தெரியாது என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். எனக்கு முன்னரே திருச்செந்தூரிலிருந்து சோமு வந்திருந்தார். சங்கரலிங்கம், கண்ணன், அகஸ்டின், அருள்ராஜ், கனகராஜ், ராமர், ராஜரத்தினம் என பல தோழர்கள் வந்திருந்தனர். ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கிக்கொண்டு எந்தெந்த கிளைகள் திறக்கப்பட்டிருக்கிறது, அவைகளை எப்படி பூட்டுவது, யார் யாரையெல்லாம் சந்திப்பது என திட்டமிட்டோம். இது போலவே திருநெல்வேலி, தென்காசி, சாத்த்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி என ஒவ்வொரு பகுதியிலும் தோழர்கள் தினந்தோறும் வந்து சந்திக்க, விவாதிக்க இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஓரிரு நாட்களில் வேலைநிறுத்தம் முடிந்துவிடும் என்கிற நினைப்பில் எங்கும் உற்சாகத்தில் தோழர்கள் இருந்தனர்.

சிலர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இருபது கிளைகள் போல இயங்கிக் கொண்டிருந்தன. காசாளர்களாக பணிபுரிந்து வந்த தோழர்கள் கேஷ் பார்க்கும் சாவியோடு வெளியே வந்துவிட்டதால் பல கிளைகளில் இயக்கமில்லை. ஆனால் அதுபோன்ற கிளைகளில் ஊழியர்கள் யாராவது பணிக்குச் சென்றால், நிர்வாகம் வேறு யுக்திகளை காட்டியிருந்தது. அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் காலையில் பணமெடுத்து வந்து வரவு செலவுகளை முடித்து அன்றே போய் திரும்பவும் கட்டி விட வேண்டும். அப்படி சில கிளைகள் இயங்கின. அந்தக் கிளைகளில் பணிபுரிபவர்களிடம் முதலில் பேச வேண்டும் என திட்டமிடப்பட்டது.

நிர்வாகம் குறிவைத்து எத்தனையோ தோழர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. உயர் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் சொந்த பந்தங்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தாரை மிரட்டியச் சம்பவங்கள் நடந்தன. எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கள் முகாம்களில் வந்து நாட்கணக்கில் வெறும் தரையில் படுத்து உறங்கிய அற்புதமான தோழர்களையெல்லாம் அப்போது பார்க்க முடிந்தது.

லேபர் கமிஷனரோடு பேச்சுவார்த்தைகள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க, தலைமையலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. நிர்வாகம் கொஞ்சமும் தன்னிலையில் இருந்து இறங்குவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது சாத்தூரில் கூடும் செயற்குழுக் கூட்டங்களில் கலந்துவிட்டு நானும் சோமுவும் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்துவிடுவோம். அந்த சமயங்களில்தான் இன்னொரு செயற்குழு உறுப்பினராயிருந்த காமராஜ், பொதுச்செயலாளராக இருந்த கிருஷ்ணகுமாரை எல்லாம் சந்தித்து பேசிக்கொள்ள முடியும்.

வீட்டிற்குச் சென்று பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தன. முதலில் நான்கைந்து நாட்கள் விசாகா ஓட்டலிலேயே சாப்பிட்டு வந்த எங்களுக்கு பிறகு பணம் இல்லை. தூத்துக்குடியிலிருந்த தோழர்கள் தங்கள் வீடுகளிலிருந்து உணவு கொண்டு வருவார்கள். சிகரெட்டு குடித்து வந்த நானும் சோமுவும் மெல்ல பீடிக்கு மாறிக் கொண்டோம். இது போன்ற நிலைமைகள் எல்லா இடங்களிலும் இருந்தன.

நிர்வாகம் விவசாயிகளுக்குக் கடன் கொடுக்காமல், அரசுத் திட்டங்களை செயல்பட விடாமல் தங்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இந்தச் செய்திகள் தடித்த எழுத்துக்களில் வெளியாகி இருந்தன. சோமு அதனை அம்பலப்படுத்தி ஒரு பிரசுரம் எழுதச் சொன்னார். உட்கார்ந்த