விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாண்டியன் கிராம வங்கி அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் அலுவலராக பணி புரிந்து வருபவர் நடராஜன். இவர்,பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்க பொது செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் மதுரை அரசரடி வங்கிக் கிளையில் நடைபெற்ற ஒரு பிரச்னை தொடர்பாக பாலச்சந்திரன் என்பவருக்கு உதவியதாக நடராஜனை மதுரை போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதைக் கண்டித்து பாண்டியன் கிராம வங்கி அலுவலர்கள் சங்கத்தினர் விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியது: நடராஜனை கைது செய்ததில் எந்த விதிமுறைகளையும் மதுரை போலீஸார் பின்பற்றவில்லை.
அதேபோல்,வங்கியில் பணியில் இருந்த ஒரு அலுவலரை எந்த முன் அனுமதியும் பெறாமல் போலீஸார் அழைத்து சென்றது கண்டிக்கதக்கது. மேலும்,அவருடைய செல்லிடபேசி தொடர்பை துண்டிக்கக் கூறி போலீஸார் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில்,பாண்டியன் கிராம வங்கியை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.