தோழர்களே!
வணக்கம்.
கடந்த 09.08.2018 அன்று PGBOA வின் பொதுச்செயலாளர் தோழர்.நடராஜனை, அவர் சூலக்கரைக் கிளையில் பணிபுரிந்து கொண்டு இருக்கும்போது, மதுரை City Crime Police-லிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
தகவல் அறிந்து தோழர்கள் மாதவராஜ், சங்கரசீனிவாசன், சங்கர் (PGBWU), பத்மநாபன், சாமுவேல்ஜோதிக்குமார், போஸ்பாண்டியன், காமராஜ் (PGBOA), இரண்டு அட்வகேட்களோடு மதுரை விரைந்தனர்.
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் அளித்த Complaint பேரில் அரசரடி கிளையில் பணிபுரிந்த அலுவலர் பாலச்சந்திரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தோழர். பாலச்சந்திரன் மதுரையில் வழக்கறிஞரை சந்திக்க உதவியது குறித்து விசாரிக்கவும், அவர் இருக்குமிடத்தைத் தெரியப்படுத்தவும் PGBOA பொதுச்செயலாளர் தோழர். நடராஜனை அழைத்துச் சென்றிருப்பதாகத் தெரிய வந்தது.
ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, தனது உறுப்பினரை பாதுகாப்பது என்பது கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட. அந்த வகையில், பொதுச்செயலாளர் என்ற முறையில் தோழர் பாலச்சந்திரனுக்கு நமது வக்கீல் மூலம் சட்ட ரீதியான உதவிகள் புரிய தோழர்.நடராஜன் உதவி இருக்கிறார்.
ஆனால் அதற்காக விசாரிக்கிறோம் என, முறையான சம்மன் இல்லாமல் போலீஸ் அழைத்துச் சென்றது முதல் அத்துமீறல்.
ஒரு பொதுத்துறை வங்கியின் அதிகாரி ஒருவர் கிளையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது, அவரை இதுபோல் அழைத்துச் செல்வதற்கு போலீஸ் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாதது இரண்டாவது அத்துமீறல்.
அப்படி விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது எங்கு அழைத்துச் செல்கிறோம், ஏன் அழைத்துச் செல்கிறோம் என தெரியப்படுத்த வேண்டும். இது மூன்றாவது அத்துமீறல்.
ஒரு குற்றவாளியை நடத்துவது போல, தோழர் நடராஜன் யாரிடம் தொடர்பு கொள்ள முடியாதபடிக்கு அவரது செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டது police harassment தவிர வேறு இல்லை.
ஒரு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராக இருப்பவருக்கான அடிப்படை உரிமையைக் கூட காவல்துறை மதிக்கத் தயாராக இல்லை.
நமது சேர்மனுக்கு தெரியப்படுத்தினோம். எந்த முன்னறிவிப்பும், முறையான அனுமதியும் இல்லாமல் வங்கிக்கிளைக்குள் இருந்து தோழர்.நடராஜனை காவல்துறை அழைத்துச் சென்றது குறித்து நிர்வாகம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
நமது சங்கத்திலிருந்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் பேசினோம். காவல்துறை நடந்து கொண்டது சரியல்ல, தோழர் நடராஜனை முறையாக அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டோம். காவல்துறையிலிருந்து அழைத்து வந்ததில் எந்த தவறும் இல்லை, விசாரணை முடிந்ததும் அனுப்பி வைக்கிறோம் என்றார்.
மதுரை Commissioner of Ploice அவர்களை சந்தித்து முறையிட்டோம். இது விசாரணைதான், விசாரணை முடிந்ததும் அனுப்பி வைக்கிறோம் என்றார்.
நமது அட்வகேட் கீதா அவர்கள், காவல்துறையை தொடர்பு கொண்டு, “மதியம் 2 மணியிலிருந்து ஏழு மணிநேரமாய் ஒரு தொழிற்சங்க நிர்வாகியை, எந்த சம்மனும் கொடுக்கப்படாமல் விசாரணை என்ற பேரில் வைத்திருப்பது சரியல்ல. உடண்டியாக விடுவிக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தில் இப்போதே urgent petition போடுவோம்” என்றார்.
அதன் பின்னரே, தோழர்.நடராஜன் காவல்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையானதாகவும், சட்டதிட்டங்களுக்கு புறம்பானதாகவும், அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் இருக்கின்றன.
இந்த அசாதாரண நிகழ்வைத் தொடர்ந்து நமது இரு சங்கங்களின் செயற்குழுக்களும் 10.08.2018 அன்று விருதுநகரில் இணைந்து விவாதித்தன.
காவல்துறையின் நடவடிக்கைகள் அராஜகமானது என்றும், இதனை நாம் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என்பதே ஒருமித்த கருத்தாகவும், உணர்வாகவும் இருந்தது.
எனவே இதனை நாம் கண்டிப்பதோடு, எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும் என இரு சங்கத்தின் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் பாதுகாக்கும் முயற்சி என்னும் தெளிவோடு, சகோதரத் தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு குரல் எழுப்ப திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைக் கொண்ட இயக்கத்தை முன்னெடுப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
1. நிர்வாகத்திடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் வங்கிக்கிளையின் வளாகத்திற்குள் நுழைந்து, வங்கியின் அதிகாரியாய் பணிபுரிந்து கொண்டிருந்த தோழர் நடராஜனை காவல்துறை அழைத்துச் சென்றது அப்பட்டமான விதி மீறல். அத்து மீறல்.
இந்த வங்கியில் பணிபுரிகிற அனைவரும், பணி நேரத்தில் நிர்வாகத்தின் custodyயில் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இங்கு பணிபுரிகிறவருக்கு நேர்கிற எதுவொன்றுக்கும் நிர்வாகமே பொறுப்பு.
நிர்வாகம் இவ்விஷயத்தில் மௌனமாக இருப்பது சரியாக இருக்காது. அது நாளை மேலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி கொடுப்பதாகி விடும்.
எனவே நிர்வாகம் மதுரைக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு உடனடியாக கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்க வேண்டும்.
13.08.2018 அன்று நமது இரு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும் Mass deputation ஆக வங்கியின் சேர்மனை சந்தித்து நிர்வாகத்தை வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2. நமது அட்வகேட் அறிவுரைப்படி மதுரை Commissioner of police-ன் வாட்ஸ் அப்பிற்கு இரு சங்கத் தோழர்களும், தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்கள் தோழர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
3. மனித உரிமை கமிஷனுக்கு, காவல்துறையின் அத்து மீறல் குறித்து முறையிட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நடவடிக்கை கோருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4. 16.8.2018 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில், நமது சங்கத் தோழர்களும், சகோதரத் தொழிற்சங்கத் தோழர்களும் இணைந்து ஒரு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்தி, காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து குரல் எழுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் BEFI சங்கத்தின் தலைமையில், முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகளும், தோழர்களும் DGPயை சந்தித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்த இருக்கிறார்கள்.
தோழர்களே!
இது தொழிற்சங்க உரிமைகளுக்கான இயக்கம்.
ஜனநாயக நெறிகளை மீறும் காவல்துறையை கண்டித்த இயக்கம்.
மனித உரிமைகளுக்கான இயக்கம்.
எதிர்காலத்தில் இது போன்ற அத்துமீறல்களை அனுமதிக்கக் கூடாது என்னும்பார்வையோடு கூடிய இயக்கம்.
இன்னும் சொல்லப் போனால், ‘சுய மரியாதைக்கான’ இயக்கம்.
நாம் முழுமையாக பங்கேற்போம்.
தொழிற்சங்கங்களுக்கு முன்னுதாரணமாய் பரிணமிப்போம்.
தோழமையுடன்
J.மாதவராஜ் S.நடராஜன்
(GS – PGBWU) (GS – PGBOA)