கிராமிய வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய போராட்டம்


கிராமிய வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக நடத்திவரும் உரிமைப் போராட்டம், நமது நாட்டின் அதிகாரவர்க்கம் எவ்வாறு கீழ்நிலையிலுள்ளவர்களைப் புறக்கணிக்கிறது என்பதையும், ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள்நல அரசு என்ற கோட்பாட்டை முழுமையாக நிராகரிக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இந்த வங்கிகளில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் 25,000 பேரில் சுமார் 3,500 பேர் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். இவர்கள் 1990-களில் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர். அது 2003-இல் சட்டப் போராட்டமாக வடிவெடுத்தது. ஆயினும் இதுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இனிமேல் கிடைத்தாலும், ஓய்வூதியம் பெறாமலே இறந்துபோன ஆத்மாக்கள் நற்கதி அடையுமா என்று தெரியவில்லை.

இந்த விவகாரத்தின் வரலாற்றை முதலில் அறிந்தாக வேண்டும்.

ஊரக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பிராந்திய ஊரக வங்கி (ஆர்ஆர்பி) என்ற வங்கி நடைமுறை மத்திய அரசால் 1975-இல் முன்னெடுக்கப்பட்டது. கிராமீண் வங்கி, கிராமிய வங்கி, கிராமீணா வங்கி, கிராம வங்கி என, அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் இவை இயங்குகின்றன. கிராமப்புற விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், கிராமக் கலைஞர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிப்பதே இந்த கிராமிய வங்கிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்.

இவையும் அட்டவணையிடப்பட்ட அரசுத் துறை வங்கிகளே. மத்திய அரசு இதற்கு 50% மூலதனம் அளிக்கிறது. இதில் அரசுக்குச் சொந்தமான வர்த்தக வங்கிகளின் பங்களிப்பு 35%; கிராமிய வங்கிகள் இயங்கும் மாநிலங்களின் அரசுகள் மீதமுள்ள 15% மூலதனத்தை அளிக்கின்றன. இந்த வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பயன்களை மாநில அரசே வழங்க வேண்டும். ஆனால், அந்த ஊழியர்கள் பாதிப்புக்குள்ளானபோது, உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய வந்தது. உச்சநீதிமன்றமும், கிராமிய வங்கி ஊழியர்களின் குறைகளை உணர்ந்து, அதற்குத் தீர்வு காண தேசிய தொழிலக முத்தரப்புத் தீர்வாயத்தை (என்ஐடி) அமைக்குமாறு உத்தரவிட்டது.

அதையேற்று, ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஓபுல் ரெட்டி தலைமையில், 1987 செப்டம்பரில் என்ஐடி அமைக்கப்பட்டது. அந்தத் தீர்வாயம் 1990 ஏப்ரலில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. பிற வர்த்தக வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் பெறும் ஊதியப் பயன்களை கிராமிய வங்கி (ஆர்ஆர்பி) ஊழியர்களும் பெற வேண்டும் என்ற அந்தப் பரிந்துரை, 1991 ஜனவரியில் காலதாமதமாக நடைமுறைக்கு வந்தது. அப்போது, வர்த்தக வங்கிகளின் ஊதிய நிர்ணயத்தைக் கட்டுப்படுத்தும் ஐந்தாவது இருதரப்பு ஒப்பந்தம் அமலில் இருந்தது.

பின்னர் ஆறாவது ஒப்பந்தம் வர்த்தக வங்கிகளில் அமலானபோதும், கிராமிய வங்கிகளில் அது அமலாகவில்லை. அதையடுத்து கிராமிய வங்கி ஊழியர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் படிகளில் ஏறினர். வங்கி ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வை அகற்றுமாறு உச்சநீதிமன்றமும் அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் கிராமிய வங்கி ஊழியர்களின் துயரங்கள் குறைந்துவிடவில்லை.

வங்கித் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய வசதி 1995-இல் அறிமுகமானது. ஆனால், கிராமிய வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது. ஊழியர்கள் பணிபுரியும் வங்கிகளுக்கு நிதி அளிக்கும் திறன் இருந்தால் மட்டுமே அதன் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது சாத்தியம் என்று மாநில அரசுகள் வாதிட்டன. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2003-லும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 2005-லும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அந்த உயர் நீதிமன்றங்கள், கிராமிய வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமையுண்டு என்று 2011-இல் தீர்ப்பளித்தன. ஆயினும், அதை எதிர்த்து ராஜஸ்தான் மாநில அரசு உயர் நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டபோதும், 2012-இல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்னமும் விசாரணை நிலையில் உள்ளது.

ஓய்வூதிய விவகாரத்தில் வங்கிகளின் அளிக்கும் திறன் குறித்த அரசின் வாதம் ஏற்கத் தக்கதல்ல என்பது அரசுக்கே தெரியும். 1995-இல் இயங்கிய 19 வர்த்தக வங்கிகளில் 12 வங்கிகள் நஷ்டத்தில்தான் இயங்கின. என்றபோதும், அதன் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 1990-இல் நாடு முழுவதும் செயல்பட்ட 196 ஆர்ஆர்பி வங்கிகளில் 152 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கியபோதும், என்ஐடி உத்தரவுப்படி ஊதியச் சமன் செய்யப்பட்டது. தவிர, கிராமிய வங்கிகளின் வர்த்தக நஷ்டம் என்பது ஊரக வளர்ச்சிக்காக அரசு செய்யும் முதலீடே. அதன் பணிகளை வெறுமனே லாப நோக்குடன் மட்டும் அணுகக் கூடாது.

சொல்லப்போனால், ஆர்ஆர்பி வங்கிகள் தற்போது நஷ்டத்தில் இயங்கவில்லை. அவை ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய வங்கிகளாகிவிட்டன. முன்னிருந்த 196 ஆர்ஆர்பி வங்கிகள் தற்போது 56 வங்கிகளாக உருமாறியுள்ளன. 2017 மார்ச் நிலவரப்படி இந்த வங்கிகளின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 4,096 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 2,573 கோடியாகவும் இருந்தது. மேலும் கிராமிய வங்கிகளின் மூலமாக ரூ. 1,414 கோடி வரி வருவாயையும் அரசு பெற்றது. அவற்றின் நிதியிருப்பு ரூ. 23,120 கோடியாகும். இந்த விவரங்களைப் பரிசீலிக்கும்போது, கிராமிய வங்கிகளின் ஒட்டுமொத்த நஷ்டம் ரூ. 1,233 கோடி மட்டுமே.

இந்த வங்கிகள் ரூ. 6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளன. இதில் வைப்புத்தொகையின் மதிப்பு ரூ. 3.72 லட்சம் கோடி; கடனளிப்புகளின் மதிப்பு ரூ. 2.28 கோடி. நாட்டிலுள்ள வங்கித் துறையின் ஒட்டுமொத்த வைப்புத்தொகையான ரூ. 110.55 லட்சம் கோடியுடனும், ரூ. 83.01 லட்சம் கோடி கடனளிப்புகளுடனும் ஒப்பிடும்போது இது சிறிய அளவே என்றபோதும், கிராமிய வங்கிகளின் சிறப்பம்சம், அவை பரம ஏழைகளுக்கும் உகந்தவையாக இருப