தோழர்களே!
இரவுகள் உடைந்தது...
இருபது ஆண்டுகளுக்கும் மேலான நெடிய போராட்டம் அது!
வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் கேட்டு கிராம வங்கி ஊழியர்கள் நடத்திய மிக நீண்ட போராட்டத்தின் விளைவாக இன்று உச்சநீதிமன்றத்தில் கிராம வங்கி ஊழியர்களுக்கும் வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் திட்டத்தை இன்னும் மூன்று மாதத்தில் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எத்தனை கண்ணீர்... எத்தனை வேதனை நிறைந்த கதைகள்... எத்தனை கனவுகள்!
ஏக்கமும் கேள்விகளுமாய் ஓய்வு பெற்ற ஊழியர்களை எதிர்கொள்ளும் கனங்கள் வார்த்தைகளற்றவை!
இராஜஸ்தான், கர்நாடக உயர்நீதிமன்றங்கள் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கச் சொன்ன பிறகும்... மத்திய அரசு இரக்கமின்றி SLP போட்டு உச்சநீதிமன்றத்தில் வாய்தாக்களை வருடக்கணக்காக வாங்கி இழுத்தடித்து கொன்றது!
முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி In principle-ஆக பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்ட பிறகும் இத்தனை ஆண்டுகால இழுத்தடிப்பு!
இவர்கள் ஓய்ந்து போவார்கள். போராட்ட குணமிக்க ஒரு தலைமுறை ஓய்வு பெற்று விட்டால் புதியவர்கள் என்ன செய்து விடுவார்கள் என்ற அரசாங்கத்தின் மனப்பாலை கொட்டி கவிழ்த்தது AIRRBEA-வின் போர்குணம்!
கிராம வங்கி ஊழியர்களை துண்டாட அரசும் தோழமை சங்கம் என்ற போர்வையில் BMS, AIBOC ஆகியவற்றின் கிராம ஊழியர் அமைப்புகளும் எத்தனை சூழ்ச்சிகளை செய்தார்கள்! போராட்டங்களால் இனி எதுவும் சாத்தியமில்லை என அவநம்பிக்கை விதைக்கப்பட்டது.
அத்தனையையும் தகர்தெறிந்து AIRRBEA கிராம வங்கி ஊழியர்களுக்கான கூட்டமைப்பை UFRRBU-கீழ் உருவாக்கி தொடர்ந்து சமரசமற்று இயக்கங்களை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்ததன் வெற்றி இது!
தோழர். திலீப் குமார் முகர்ஜி என்னும் மகத்தான தலைவனின் பின்னால் அணிவகுத்த AIRRBEA தோழர்களில் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்! ஒரு நல்ல சமரசமற்ற போராளிக்கு மரணம் என்பதே கிடையாது! இதோ எங்கள் தோழர்.திலீப் குமார் முகர்ஜி இன்று அனைத்து கிராம வங்கி ஊழியர்களின் நினைவுகளிலும் உயிர்ந்தெழுந்து நிற்கிறார்!
’இனி அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் கிடையாது...’ என்னும் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகார முடிவை கிராம வங்கி ஊழியர்களாகிய நாங்கள் எங்கள் பலம் கொண்டு உடைத்துள்ளோம். இந்த சிறு ஒளி இரவுகள் உடையும் என பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
இது நமது நீண்ட நெடிய போராட்டத்தின் வெற்றி!
அவநம்பிக்கைகள் சூழ்ந்த நேரத்தில், அதை உதறி நின்ற நம்பிக்கையின் வெற்றி!
அவதூறுகள் விதைக்கப்பட்ட சூழலில் அதனை உறுதியால் மீட்டெடுத்த வெற்றி!
இளம் தோழர்கள் பெற்றுத்தந்த வெற்றி!
தொடர்ந்து வாய்தா மேல் வாய்தாவாகப் போய்க்கொண்டு இருந்த வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தின் வெற்றி!
கொண்டாடுவோம்.
இப்போராட்டத்தை இத்தனை உக்கிரமாய் தொடரச் செய்த இளம் தொழிற்சங்க தலைவர்களே நாளைய பெரும் நம்பிக்கை!