அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் (ஏஐஆர்ஆர்பிஇஏ) 13 ஆவது அகில இந்திய மாநாடு நவம்பர் 19 ஞாயிறன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எழுச்சியுடன் துவங்கியது.
சங்கக்கொடியை அகில இந்திய தலைவர் ராஜீவன் பிரதிநிதிகளின் முழக்கங்களுடன் ஏற்றி வைத்தார். தியாகிகளின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற பொதுமாநாட்டிற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் ராஜீவன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் வழக்கறிஞர் கீதா வரவேற்புரையாற்றினார். சிஐடியு அகில இந்திய உதவித்தலைவர் ஏ.கே.பத்மநாபன் துவக்கவுரையாற்றினார். பொருளாதார அறிஞர் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆங்கில மாத இதழ் ‘பிரண்ட் லைன்’ ஆசிரியர் ஆர். விஜயசங்கர், ‘பெபி’ பொதுச்செயலாளர் பிரதீப் பிஸ்வாஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர். சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.சையீது கான் சிறப்புரையாற்றினார். பாண்டியன் கிராம வங்கி சேர்மன் ரவிச்சந்திரன், பல்லவன் கிராம வங்கி பொதுமேலாளர் சந்தோஷ் குமார், புதுவை பாரதியார் கிராம வங்கி சேர்மன் மனோரஞ்சன் சாஹூ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் டாக்டர் தவமணி கிறிஸ்டோபருக்கு சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் 1800 பேர் பங்கேற்றுள்ளனர். நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளிலும் மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.
ஞாயிறன்று மாலை 5 மணியளவில் மதுரை சட்டக்கல்லூரி அருகே உலக தமிழ்ச்சங்க கட்டிடம் முன்பிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணி துவங்கி, நடைபெற்றது.
(Source: Theekathir)