
தோழர்களே! வணக்கம். இந்த நெருக்கடியான காலக் கட்டத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு, அவர்கள் நலன்கள் சார்ந்த நடவடிக்கைகளில் மிகுந்த பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டியது நிர்வாகங்களின் பொறுப்பு. ஏனென்றால், இந்த ஊரடங்கு முடிந்து, நெருக்கடிகள் தளர்ந்த பிறகு, வங்கியின் வணிகத்தை தூக்கி நிறுத்த வேண்டியவர்கள் ஊழியர்களும், அலுவலர்களுமே. விதிகள், காலம் எல்லாம் பார்க்காமல் வங்கியின் நிலைமையை தலை நிமிர வைக்கப் போவது அவர்களே. ஊழியர்களிடம் அதிருப்தி இருந்தால் அது சாத்தியமாகாது. பல வங்கிகளிலும் நிர்வாகங்கள் இதனை உணர்ந்திருக்கின்றன. எனவே முடிந்தவரை தங்கள் ஊழியர்கள், அலுவலர்களுக்கு அனுசரனையாகவும், பாதுகாப்பாகவும் இந்த நேரத்தில் செயல்பட்டு வருகின்றன. ஊழியர்களிடம் positive mindsetஐயும், positive energyஐயும் ஏற்படுத்துவது அவசியம். ஆனால் நமது நிர்வாகத்திற்கு அதுகுறித்தெல்லாம் எந்தக் கவலையுமில்லை. இந்த வங்கியின் எதிர்காலம் குறித்தும் அக்கறையுமில்லை. ஊழியர்கள், அலுவலர்களின் மனநிலை எல்லாம் ஒரு பொருட்டுமில்லை. ஊரடங்கு அறிவித்ததிலிருந்து நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கும், தொழிற்சங்க விரோதப் போக்கும் தலை விரித்தடுகிறது. வன்மமும், பழிவாங்கும் போக்கும் மட்டுமே நிர்வாகத்தின் நாடி நரம்பெல்லாம் கலந்திருக்கிறது. ஊரடங்கு அறிவித்ததால் நமது தோழர்கள் சிலர், தங்கிமிடம், உணவுக்கு வழியில்லாமல் தங்கள் Home Town க்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனவே Home Town அருகில் எதாவது கிளையில் பணிபுரிய அனுமதி அளியுங்கள் என கேட்டோம். நிர்வாகம் எல்லோருக்கும் ஏற்பாடு செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சாத்தியமான தோழர்களுக்கு அனுமதி அளித்திருக்கலாம். ஆனல் அப்படி அனுமதி அளிக்கவில்லை. இதனால் நுற்றுக்கும் மேலன தோழர்கள் விருப்பமிருந்தும், தேவையில்லாமல் பணிக்குச் செல்ல முடியாத சூழலில் இருக்கிறார்கள். போக்குவரத்து வசதி இல்லாததால் Home town அருகே பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கும், தொலைதூரத்தில் இருந்து வருகிறவர்களுக்கும் நிர்வாகமே போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. இதனால் நானூற்றுக்கும் அதிகமான தோழர்கள் தங்கள் சொந்த வாகனங்களில், தினமும் கைக்காசை செலவழித்து கிளைகளுக்கு சென்று வந்து கொண்டு இருக்கின்றனர். சில தோழர்கள் தினமும் ரூ.1000/-ற்கும் அதிகமாக செலவு செய்து வருகின்றனர். இது ஒரு புறம். இன்னொரு புறம் கிளைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை. போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. சில இடங்களில் காவல்துறை கிளைகள் செல்லும் வழிகளில் அனுமதிக்க மறுக்கிறார்கள். நிர்வாகத்திடம் சொன்னால் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல், “எப்படியாவது கிளைகளுக்குச் செல்லுங்கள்’ என்று மட்டுமே சொல்லப்படுகிறது. சில கிளைகளின் வாடிக்கையாளர்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது அறிந்த பின்னும், மாவட்ட நிர்வாகத்திடம் அதை எடுத்துக் கூறியும், உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாக இருக்கிறது. சில இடங்களில் கிளைகளை Lead Bankல் இருந்து மூடச் சொன்னாலும், நிர்வாகம் கிளைகளை நடத்தத் துணிகிறது. இவையெல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நம் ஊழியர்களும், அலுவலர்களும் பணி புரிந்தாலும், நிர்வாகம் அவர்களுக்கு அனுசரனையாக இருப்பதே இல்லை. SLBCயிலிருந்து பணி நேரத்தை குறைக்கவும் ,50 சதவீத ஊழியர்களை வைத்து பணிபுரியவும் சொல்லப்படுகிறது. அதன் நோக்கம் வைரஸ் தொற்றுக்கான சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் குறைப்பதே ஆகும். ஆனால் நிர்வாகம் அது போன்ற உத்தரவுகளை வேண்டா வெறுப்பாக அமல்படுத்துவதையே வழக்கமாக வைத்திருக்கிறது. 50 சதவீத ஊழியர்களை வைத்து கிளைகளை நடத்தும் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இப்போது அடுத்தக் கட்ட விஷமத்தனத்தை அரங்கேற்றி இருக்கிறது. இத்தனை நெருக்கடியிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வட்டியில்லாக் கடனாக ஒருமாதச் சம்பளத் தொகையை அளிக்க எல்லா வங்கிகளுக்கும் முன்வந்திருக்கின்றன. ஆனால் நம் வங்கியில் மட்டும் புதிதாகப் பணிக்குச் சேர்ந்த தோழர்களுக்கு கிடையாது என்னும் முடிவெடுத்து இருக்கிறது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் என்பது மிக மோசமான நடவடிக்கை. பல கிராம வங்கிகளில் மிக அற்புதமாகவும், ஊழியர்கள் அலுவலர்களுக்கு ஆதரவாகவும் இந்த நேரத்தில் செயல்பட்டு வருகின்றன. நம் வங்கியின் நிர்வாகத்தைப் பற்றி கேள்விப்பட்ட நமது அகில இந்திய சங்கம் AIRRBEA, ஏன் உங்கள் நிர்வாகம் இவ்வளவு ஊழியர் விரோதமாக நடந்து கொள்கிறது என ஆச்சரியப்படுகிறார்கள். தோழர்களே! இந்த நிர்வாகத்திற்கு மனிதாபிமானம் கிடையாது. இந்த நிர்வாகத்திற்கு தங்கள் ஊழியர்கள், அலுவலர்கள் மீது எந்த நல்லெண்னமும், மதிப்பும் கிடையாது. இந்த நிர்வாகத்திற்கு நம் மீது வன்மமும், வெறுப்பும் மண்டிக் கிடக்கிறது. அதனால்தான், நிர்வாகத்தின் ஒரு நடவடிக்கை கூட ஊழியர்களுக்கு ஆதரவாக இல்லாமல் இருக்கிறது. ஊழியர் விரோத மனப்பான்மை கொண்ட CMHRM. நம் சங்கங்கள் மீது துவேஷம் கொண்ட - இந்த வங்கிக்குத் தேவையில்லாத ‘அட்வைசர்’. தொழிற்சங்கத் தலைவர்கள் போன் செய்தால் ஒரு போதும் போனை எடுக்காத சேர்மன். இந்த முக்கூட்டுச் சிந்தனையில் செயல்பாட்டில்தான், ஊழியர்களுக்கு, அலுவலர்களுக்கு விரோதமான யாவும் திட்டமிடப்பட்டு அமல் செய்யப்படுகின்றன. சங்கமாக நேரில் சென்று பேசவோ, இயக்கம் நடத்தவோ முடியாத சூழலில் இந்த காலக்கட்டம் இருப்பதால், நிர்வாகம் இதுதான் சமயம் என தன் வெறுப்பை, வன்மத்தை மொத்தமாகக் காட்டுகிறது. ஆனால் இதுவே நிரந்தரம் அல்ல. ஊரடங்கு விலக்கப்படும். நெருக்கடிகள் தளர்த்தப்படும். மீண்டும் எல்லாம் இயல்பு நிலைக்கு வரும். அப்போது நம் அனைவரின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவைப்படும். தொழிலாளர்கள் இன்றி எதுவும் அசையாது. அவர்களின் உழைப்பு இல்லாமல் எதுவும் வளராது. அப்போது இவை யாவற்றுக்கும் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும். அடை காத்திருப்போம். காத்திருப்போம். தோழமையுடன் J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி GS-TNGBWU GS-TNGBOA