top of page

புதுவை பாரதியார் கிராம வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை எதிர்த்து தொழிற்சங்க இயக்கம்


21.09.2018 அன்று புதுவை பாரதியார் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக திட்டமிட்டபடி மாலை நேர ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

புதுவை பாரதியார் கிராம வங்கித் தோழர்களோடு, பாண்டியன் கிராம வங்கித் தோழர்களும், பல்லவன் கிராம வங்கித் தோழர்களும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

AIRRBEA-TN and Puduvai முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் சோலைமாணிக்கத்தின் உரத்த குரலில் எழுந்த கோஷங்கள் புதுவை வீதிகளை திரும்பிப் பார்க்க வைத்தன.

பி.எஸ்.என்.எல், சி.ஐ.டி.யூ, BEFI, அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். கடுமையான ஆள் பற்றாக்குறையால், புதுவை பாரதியார் கிராம வங்கியில் ஏற்பட்டிருக்கும் பணி நெருக்கடிகளையும், உழைப்புச் சுரண்டலையும் பொதுமக்களிடம் அம்பலப்படுத்தினர்.

பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் சார்பில் தோழர்கள் பத்மநாபன், நடராஜன், காமராஜ் ஆகிய தோழர்களும், பாண்டியன் கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் தோழர் குளோரி, பல்லவன் கிராம வங்கி எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் தோழர்கள் சுரேஷ், பழனிச்சாமி ஆகிய தோழர்களும், பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் சார்பில் தோழர்கள் அருண ஜடேஜன், சிவசங்கரன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். "இது புதுவை பாரதியார் கிராம வங்கியின் பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. தங்கள் பிரச்சினையாக பார்க்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற அனைத்து கிராம வங்கி ஊழியர்களும் அலுவலர்களும், இந்தியா முழுவதும் இருக்கிற 75000க்கும் மேற்பட்ட கிராம வங்கி ஊழியர்களும் உங்களோடு இருக்கிறோம்” என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தனர்.

இறுதியாக பேசிய AIRRBEA-TN and Puduvai மாநிலச் செயலாளர் தோழர் மாதவராஜ், “வங்கித்துறையை இன்று மோடி தலைமையிலான பாஜக அரசு பல வழிகளிலும் சிதைத்துக்கொண்டு இருக்கிறது. பல முனைகளிலும் தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் புதுவை பாரதியார் கிராம வங்கி என்னும் மிகச் சிறிய கிராம வங்கி தன் வணிகத்தையும், லாபத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடிகிறதென்றால் அதற்கு அந்த கிராம வங்கியில் பணிபுரியும் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது என்று அர்த்தம். ஆனால் அதே வேளையில், கடும் உழைப்புச் சுரண்டலால்தான் அந்த லாபத்தை அடைய முடிந்திருக்கிறது என்பதும் சகிக்க முடியாத உண்மையாக நிற்கிறது. வங்கிக்குத் தேவையான ஆட்களை பணியமர்த்தாமல், தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், அதன் மூலம் கிடைக்கும் தொகையே இங்கு லாபமாக கருதப்படுகிறது. முதலாளித்துவத்தின் கோர முகம் இது. ஆறு கிளைகளில் ஒரு அலுவலரே மேலாளரின் சாவியையும், கேஷியரின் சாவியையும் வைத்துக்கொண்டு பணிபுரிகிறார்கள் என்பது மிக மோசமான நிலைமை. ரிசர் வங்கி விதிகளுக்கு எதிரானது.

ஒரு வங்கிக் கிளை என்றால் அதற்கென்று வேலை நேரம் முறையாக அறிவிக்கப்பட்டிருக்கும். காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணியென்பதும், மதிய உணவு இடைவேளை அரை மணி நேரம் என்பதும் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கு மதிய உணவு இடைவேளை என்பதே அறிவிக்கப்படாமல் இருக்கிறது. மதியம் 2 மணிக்கு ஊழியர்கள் உணவுக்குச் செல்வது கூட நிர்வாகத்தால் தவறாகப் பார்க்கப்படுகிறது. நிர்வாகம் மிரட்டுகிறது. இது மனித உரிமைகளை மீறும் செயல்.

ஆட் பற்றாக்குறையால் லீவு வழங்கப்படுவதில்லை. யார் யாருக்கு எவ்வளவு லீவு என்பது கூட தெரிவிக்கப்படுவதில்லை. டெபுடேஷன் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. போதுமான டிரெய்னிங் கொடுக்கப்படுவதில்லை. இதனால் வங்கி நடவடிக்கைகளில் ஏற்படும் சிறு சிறு தவறுகளுக்கும் நிர்வாகம் அலுவலர்களை பொறுப்பாக்கி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கிறது.

இந்த ஊழியர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, கடும் ஆட் பற்றாக்குறையை எதிர்த்து, தங்கள் பணிகளைப் பாதுகாப்பதற்காக புதுவை பாரதியார் கிராம வங்கியில் இருக்கும் தொழிற்சங்கங்கள் பலமுறை நிர்வாகத்துடன் பேசியும் எந்த முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைகிறது. சென்ற வருடம் இரண்டு கிளைகளில் மட்டுமே ஒரு அலுவலர் இரண்டு சாவிகளையும் வைத்திருந்தார்கள். இந்த வருடம் ஆறு கிளைகளில் வைத்திருக்கிறார்கள். நாம் அமைதியாக இருந்தால், இந்த நிலைமை மேலும் மோசமாகும்.

எனவேதான் இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இன்று பேசி கலைந்து போவதில்லை நமது இயக்கம். இது ஆரம்பம். தொடரும். அடுத்தக்கட்டமாக இந்தப் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்வோம். அலுவலர்கள் தங்களிடம் இருக்கும் கேஷியர்களுக்கான சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் இயக்கம் நடக்கும். அதைத் தொடர்ந்து ஒரு நாள் வேலை நிறுத்தம் நடக்கும். அதன்பிறகும் நிர்வாகம் அமைதியாக இருக்குமானால் இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடக்கும். அதன் பிறகும் நமது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் புதுவை பாராதியார் கிராம வங்கியில் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கும் தயாராவோம்.” என்றார்.

ஆர்ப்பரிப்பான உணர்வுகளோடு, நம்பிக்கை சுடர் விடும் போராட்டப் பாதையோடும் மாலை நேர ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

 

மாலை நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு இரவு 7 மணியிலிருந்து இரவு 9.45 வரைக்கும் ஹால் மீட்டிங் நடந்தது.

புதுவை பாரதியார் கிராம வங்கியில், நான்கைந்து ஊழியர்கள் அலுவலர்களைத் தவிர அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டனர். தற்காலிக மெஸஞ்சர்களும் கலந்து கொண்டனர். நூற்று இருபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் நிறைந்த அந்த அரங்கக் கூட்டம் அர்த்தமுள்ள கலந்துரையாடலாக நீண்டது.

பாண்டியன் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தின் இளம் தலைவர்கள் முதலில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். தோழர்கள் சந்திரசேகர், ஆறுமுகப்பெருமாள் (PGBOA), தோழர்கள் தங்கமாரியப்பன், வினோத், கோபால் சுப்பிரமணியன், கலைச்செல்வி, அஸ்வத், பார்த்தசாரதி, சங்கர் (PGBWU) ஆகியோர் தொழிற்சங்கத்தின் அவசியம் குறித்தும், போராட்டம் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்பது குறித்தும், தொழிற்சங்கத் தலைமையிடம் நமது கேள்விகளை முன்வைத்து, பிரச்சினைகளைப் பேசி, அதைத் தீர்ப்பதற்கான வழிகளை காண வேண்டும் என்றும், தயக்கங்களை உதறி, அமைதியை உடைத்து உரக்கப் பேச வேண்டும் என்றும் மிக அற்புதமாக தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

உணர்வு பூர்வமான அந்த உரையாடல்களால் உத்வேகம் கொண்டு, புதுவை பாரதியார் கிராம வங்கி தோழர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பேச ஆரம்பித்தனர். வலியும், வேதனையும் கொண்ட அவர்களது வாழ்க்கை மொத்த அரங்கத்தையும் கலங்க வைத்தது. அடிமைகளைப் போல தாங்கள் நடத்தப்படுவதை நெஞ்சு வெடிக்கக் கூறினார்கள். மத்திய அரசு அமைத்த மித்ரா கமிட்டி பிரகாரம் குறைந்த பட்சம் 213 பேர் வேலை பார்க்க வேண்டிய வங்கியில், 103 பேர் மட்டுமே பணிபுரிகிறோம் என்னும் அவலத்தை போட்டு உடைத்தனர். நம்பிக்கையற்று, அநாதைகளைப் போல ஆதரவற்று இருந்த தங்களுக்கு AIRRBEA தலைமை இப்போது வழிகாட்டுவதை பெருமையோடு நினைவில் கொண்டனர். தொழிற்சங்கமும், போரர்க்குணமும்தான் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற உண்மையைக் கண்டு கொண்டதாக சொன்னார்கள். இனி இந்த வங்கியில் யார் ஒருவருக்கும் நிர்வாகத்தால் பாதிப்பு ஏற்பட்டாலும் அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம் என தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.

அந்த இரண்டே முக்கால் மணி நேரம் நிச்சயம் மகத்தான அனுபவம். ஒரு மாபெரும் அத்தியாயத்தின் தொடக்கம்.

எதிர்காலத்தின் மீது வெளிச்சம் மெல்ல மெல்ல பரவுகிறது.

புதுவை பாரதியார் கிராம வங்கியில், மாலை நேர ஆர்ப்பாட்டத்திற்கும் ஹால் மீட்டிங்கிற்கும் பிறகு - புதுவை பாரதியார் கிராம வங்கியின் தொழிற்சங்கத் தலைவர்களோடு கலந்து கொண்டு கீழ்கண்ட போராட்டங்களைக் கொண்ட அடுத்தக் கட்ட இயக்கத்தை அறைகூவல் விடுத்து வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

1. அக்டோபர் 3ம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து அனைத்துத் தோழர்களும் பணிபுரிவது.

2. தங்கள் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் விளக்கி, அவைகளை உடனடியாகத் தீர்க்குமாறு நிர்வாகத்திற்கு புதுவை பாரதியார் கிராம வங்கியில் பணிபுரியும் ஒவ்வொரு தோழரும் தனித்தனியாக கையொப்பமிட்டுக் கடிதங்கள் அனுப்புவது.

3. அக்டோபர் 3 முதல், அக்டோபர் 12 வரை 10 நாட்களும் அலுவலர் மட்டுமே மேனேஜர் மற்றும் கேஷியர் வைத்திருக்கும் 6 கிளைகளில், வாடிக்கையாளர்களிடம் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு எதிராக தாங்கள் பணிபுரியும் நிலைக்கு நிர்வாகத்தால் நிர்ப்பந்தப்படுத்தும் அநியாயத்தை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது.

4. அக்டோபர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு, அந்த 6 கிளை அலுவலர்களும் தங்களிடம் இருக்கும் கேஷியர்களுக்கான சாவிகளை, மாநில அமைப்பின் தலைவர்களோடு சேர்ந்து புதுவை பாரதியார் கிராம வங்கித் தலைமையலுவலகத்தில் ஒப்படைப்பது.

5. அக்டோபர் 26ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம். (கோரிக்கைகளை விளக்கி அனைத்து கிளைகளிலும், பாண்டிச்சேரியின் முக்கிய வீதிகளிலும் போஸ்டர் அடித்து ஒட்டுவது).

ஒன்றுபடுவோம்

போராடுவோம்

வெற்றி பெறுவோம்.

Workers Unity Zindabad!


3 views0 comments

Comments


world-spin-crop.gif
bottom of page