கண்முன்னே மனிதர்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தாலும் எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்து விட்டு தன் காரியத்தை தொடர்வது என்பது நிர்வாகங்களின் பொதுவான குணமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு ஆயிரத்தெட்டு நியாயங்களையும், ஒழுங்குகளையும் விதிக்கிற, வலியுறுத்துகிற நிர்வாகங்கள், அவைகளை பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை.
கிராம வங்கிகளில் 2018ம் ஆண்டிற்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, IBPS (Institute of Banking Personnel Selection) மூலம் கிராம வங்கிகளில் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு எல்லாம் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான லிஸ்ட்டும் IBPS மூலம் இறுதி செய்யப்பட்டு விட்டது. அந்தந்த கிராம வங்கி நிர்வாகங்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு விட்டது.
அந்தந்த கிராம வங்கி நிர்வாகங்கள், தங்கள் வங்கிகளுக்கு அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பி, அவர்களது சர்டிபிகேட்களை சரிபார்த்து பணிக்கு அமர்த்த வேண்டிய ஒரே காரியம்தான் மீதமிருக்கிறது.
இந்தியாவில் உள்ள மற்ற கிராம வங்கிகளில் பல கிராம வங்கிகளில் 2018ம் ஆண்டிறகான பணி நியமனம் நடந்து முடிந்திருக்கின்றன, நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள பாண்டியன் கிராம வங்கியிலும், பல்லவன் கிராம வங்கியிலும் இந்த பணி நியமனம் நடத்தப்படவில்லை. கேட்டால் ’ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து இரண்டு வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாகப் போகிறது, அதன் பிறகு பணிநியமனம் நடத்தலாம்’ என்று இரண்டு வங்கி நிர்வாகங்களின் தரப்பிலும் யோசிப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அது ஆகாத காரியம். இரண்டு வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டால், உடனடியாகச் செய்ய வேண்டிய அலுவல்களும், காரியங்களும் பல இருக்கின்றன. மேலும் இரண்டு வங்கி ஊழியர்கள், அலுவலர்களின் சீனியாரிட்டி முறைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு குறைந்த பட்சம் ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை ஆகும். அதன் பின்னர்தான் 2018ம் ஆண்டிற்கான பணி நியமனம் குறித்து நிர்வாகம் யோசிக்கும். அதற்குள் 2019ம் ஆண்டிற்கான பணி நியமனப் பணிகளை IBPS முடித்து விட்டிருக்கும்.
இப்படியொரு பெரும் குழப்பமும், கால தாமதமுமாகும் என்பது நிர்வாகத்துக்கும் தெரியும். கிளைகளில் ஊழியர்கள் படும் அவஸ்தைகளும் நன்றாகவேத் தெரியும். இயற்கை அழைப்புக்குக் கூட எழுந்திரிக்க முடியாமல் வாடிக்கையாளர் சேவை செய்ய வேண்டிய சங்கடம் பல கிளைகளில் நிலவுகிறது. Casual leave கூட எடுக்க முடியாத அளவுக்கு ஆள் பற்றாக்குறை தாண்டவமாடுகிறது. லீவு கிடைக்காமல் திருமண நிச்சயம் தள்ளிப் போன அவலங்கள், மிக நெருங்கிய உறவினர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்க முடியாமல் போன அவஸ்தைகள், கர்ப்பம் தரித்த பெண் ஊழியர்கள் ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் பேருந்துகளில் தொடர்ந்து பயணம் செய்து கிளைகளுக்குச் செல்ல வேண்டிய சித்திரவதைகள் என ஊழியர்களின் பணி நிலைமைகள் துயரமும், வலியும் கொண்டதாக இருக்கின்றன.
இந்த மோசமான நிலையை 2018ம் ஆண்டிற்கான பணிநியமனம் செய்தால், ஓரளவுக்கு சரிசெய்யலாம். ஆனால் நிர்வாகம் அது குறித்து கவலைப்படவில்லை.
நிர்வாகம் 2018ம் ஆண்டிற்கான பணிநியமனத்தை காலம் தாழ்த்துவதற்குக் இரண்டு கிராம வங்கிகளின் ஒன்றிணைப்பை காரணமாகச் சொன்னாலும், உண்மையான காரணம் அதுவல்ல.
பல்லவன் கிராம வங்கியில், புதிதாகப் பணிக்கு சேர்கிறவர்களிடம் ஒரு service Bond வாங்கும் வழக்கம் இருக்கிறது. அதன்படி பணிக்குச் சேர்ந்த அலுவலர் ஒருவர் வங்கியை விட்டு ராஜினாமா செய்தால் இரண்டு லட்சம் வங்கிக்கு கட்ட வேண்டும். ஊழியர் ஒருவர் ராஜினாமாச் செய்தால் ஒரு லட்சம் கட்ட வேண்டும். இதை தண்ட வசூல் என்பதா அல்லது அபராதம் என்பதா?
பாண்டியன் கிராம வங்கியில் அந்த வழக்கம் இல்லை. அப்படி நிபந்தனைகள் விதிக்கப்படுவதை இங்குள்ள நமது சங்கங்கள் எதிர்த்து தடுத்து நிறுத்தி இருக்கின்றன. ‘இங்கு வேலைக்குச் சேர்ந்து, வேறு வணிக வங்கியில் வேலை கிடைத்தால் உடனே அங்கு சென்று விடுகிறார்கள், அதை தடுப்பதற்காகத்தான் கொண்டு வருகிறோம்’ என்று நிர்வாகம் சொல்லிப் பார்த்தது. “இங்கு பணிக்குச் சேர்ந்து விட்டு, வணிக வங்கிக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டுமென்றால் சரிசெய்யப்பட வேண்டியது கிராம வங்கிகளின் நிலைமையே தவிர, பணிக்குச் சேர்ந்தவர்களிடம் முறையற்று காசு பிடுங்குவது அல்ல” என்று நமது சங்கங்கள் அழுத்தமாகச் சொல்லின. ‘நமது வங்கியின் நலனுக்காகத்தான் இந்த ஏற்பாடு, இதற்கு சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றும் கேட்டுப் பார்த்தன. ‘இந்த ஒரு லட்சம், இரண்டு லட்சத்தால் யாரும் இந்த வேலையை விட்டுப் போகாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் அப்படி அபராதத் தொகையை கட்டி விட்டுப் போகும் போது இந்த வங்கி நாசமாகப் போகட்டும் என சபித்தபடி செல்வார்கள். அது தேவையா?’ என்றோம். நிர்வாகம் அமைதியானது. அதையும் மீறி சென்ற வருடம் திரும்பவும் இந்த service bond condition-ஐ சேர்க்க முயன்றது. ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி வேலை பார்க்கும் உரிமையை நீங்கள் பறிக்கிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது’ என சட்டத்தின் மொழியில் பேசி தடுத்து விட்டோம்.
இப்போது அதுதான் பிரச்சினை. பல்லவன் கிராம வங்கியில் அதுபோல ஒரு service bond வாங்கி, பாண்டியன் கிராம வங்கியில் வாங்காவிட்டால், நாளை ஒன்றிணைய இருக்கும் தமிழ்நாடு கிராம வங்கியில் பிரச்சினை வருமாம். ஒரே வங்கியில் பாண்டியன் கிராம வங்கி மூலம் பணிக்கு வந்த ஒருவர் ராஜினாமா செய்தால் அபராதம் கட்ட வேண்டி இருக்காது. பல்லவன் கிராம வங்கி மூலம் பணிக்குச் சேர்ந்திருந்தால் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். எனவே 01.04.2019க்குப் பிறகு தமிழ்நாடு கிராம வங்கியில் இந்த பணி நியமனத்தை நடத்தி புதிதாக பணிக்குச் சேர்கிற அனைவரிடமும் service bondல் கையெழுத்து வாங்குவது என நிர்வாகங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.
இந்த ஒரு condition-ற்காக, ஒரு லட்சம் இரண்டு லட்சம் என முறையற்று வசூலிப்பதற்காக, இந்த நிர்வாகங்கள் வங்கிக்குள் பல நூறு ஊழியர்கள் படும் அவஸ்தைகளைப் புறக்கணிக்கிறது. தேர்வு செய்யப்பட்ட முடிவு அறிந்து, பாண்டியன் கிராம வங்கியிலும், பல்லவன் கிராம வங்கியிலும் வேலை பார்க்க வெளியே காத்திருக்கும் நானூற்றுக்கும் அதிகமான இளைஞர்களின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்பையும் அலட்சியம் செய்கிறது.
பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கியின் ஊழியர்கள் அலுவலர்களை திரட்டி இந்த அநீதிக்கு எதிராகவும், நிர்வாகங்களின் படு மோசமான நோக்கங்களுக்கு எதிராகவும் இயக்கம் நடத்த நமது சங்கங்கள் முடிவு செய்திருக்கின்றன.
இரண்டு கிராம வங்கிகளின் கட்டிடங்களும், கோப்புகளும், திட்டங்களும் ஒன்றிணைவதற்கு முன்பு, இரண்டு கிராம வங்கிகளின் ரத்தமும் சதையுமான மனிதர்கள் ஒரே பிரச்சினையை முன்னிறுத்தி போராட்டத்தின் வழி ஒன்றிணைகிறார்கள்.
留言