நமது நியாயமான கோரிக்கைகளுக்கு செயலாற்ற தயங்கும், நம்முடன் அமர்ந்து பேச மறுக்கும் இந்த நிர்வாகம் ஆடம்


தோழர்களே!

கடந்த ஞாயிறன்று (07.07.2019) சேலத்தில் நமது சங்கத்தின் நாமக்கல் மண்டல கூட்டம் நடைபெற்றது. நிறைய இளம் தோழர்கள் இதில் பங்கெடுத்தது மகிழ்ச்சியாகவும் எழுச்சியாகவும் இருந்தது. தோழர்களின் உரையாடலில் இருந்து இந்த வங்கியில் அலுவலர்களும் ஊழியர்களும் எத்தகைய சூழலில் பணிபுரிகிறார்கள் என்று நம்மால் உணர முடிகிறது. மேலும் நமது நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் அடக்குமுறையாலும் எந்த அளவிற்கு நமது தோழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நம்மால் உணர முடிகிறது.

உயிரோட்டமுள்ள ஒரு நல்ல தொழிற்சங்கமானது தனது உறுப்பினர்களுக்காக எந்தச் சூழலிலும் குரல் கொடுக்கத் தயங்காது, எந்த விலை கொடுத்தேனும் ஊழியர்களின் நலன் காக்க தன்னையே அர்ப்பணித்து போராடும் என்பதற்கு நமது தொழிற்சங்கம் சிறந்த உதாரணமாக இருக்கிறது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை (06.07.2019) அன்று விருதுநகரில் நடைபெற்ற PGBRS General body கூட்டத்தில் பங்கு பெற்ற நமது வங்கியின் சேர்மன் வரும் ஜூலை 27ஆம் தேதி தமிழ்நாடு கிராம வங்கியின் தொடக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடும் விதத்தில் தமிழக முதலமைச்சரை அழைத்து பெரும் விழாவை நடத்தவிருப்பதாகவும், அதில் கலந்துகொள்ள எல்லோருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்கள். மூன்று மாதங்களுக்கு முன் இணைந்த நமது வங்கிக்கு இப்பொழுது விழா எடுக்க வேண்டிய தேவை என்ன என்ற வினா அப்போதே எல்லோருக்கும் எழுந்தது. இந்த விழாவின் மூலம் இந்த நிர்வாகம் என்ன செய்தியை இங்கு பணிபுரிபவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சொல்ல நினைக்கிறது. இப்பொழுது விழா கொண்டாடும் மன நிலை தான் நமது ஊழியர்களும் அலுவலர்களும் இருக்கிறார்கள்? அப்படியே இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும் அதில் யாரால் கலந்து கொள்ள முடியும்? இந்த கேள்வியை ஒரு தோழர் நம்மிடம் கேட்டே விட்டார். அதற்கு நாம் பதிலாக

"யாரெல்லாம் இந்த வங்கியில் சிரமமின்றி பணிபுரிகிறார்களோ அவர்கள் கலந்து கொள்ளலாம்,

யாருக்கெல்லாம் கேட்ட விடுப்புகள் கிடைக்கிறதோ அவர்கள் கலந்து கொள்ளலாம்,

எந்த ஊழியர்களின் வீட்டுக் கடன் மற்றும் இதர கடன் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்கப்படுகிறதோ அவர்கள் கலந்து கொள்ளலாம்,

கிளைகளில் தேவைப்படும் எல்லா வசதிகளையும் பெற்று வேலை செய்பவர்கள் கலந்து கொள்ளலாம்,

நிர்வாகம் வெளியிடும் சர்குலர் களில் எந்த சந்தேகமும் வராமல் தெளிவாக புரிந்து கொண்டிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்,

கேட்ட விடுப்புகளை கேட்ட நாட்களுக்கு பெற்றுக்கொண்டு அனுபவித்தவர்கள் கலந்து கொள்ளலாம்,

விடுமுறை நாட்களில் கடன் வசூல் வேலை வேறுசில அலுவல் பணிகள் செய்ய கட்டாயப்படுத்த படாதவர்கள் கலந்து கொள்ளலாம்,

டெபுடேஷன் சென்று அதற்குரிய பயணப்படி தங்கும் செலவுகள் அப்படியே பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்,

தலைமை அலுவலகத்தின் தொலைபேசி உரையாடலில் சரியான பதிலும் தீர்வும் பெற்றவர்கள் கலந்து

கொள்ளலாம்,

தினந்தோறும் இந்த பணியை மகிழ்ச்சியான மனநிலையோடு அமைதியான சூழலில் செய்ய முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம்,

வங்கிப் பணிக்கு தேவைப்படும் எல்லா விண்ணப்பங்களையும் கிளைகளில் வைத்திருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்,

வாடிக்கையாளரின் கடன்கள் வட்டார அலுவலகங்களிலும் தலைமை அலுவலகத்திலும் எந்தத் தடையும் இன்றி sanction பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்,

தங்கள் பணிக்கு பாதுகாப்பும் சுயமரியாதையும் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்,

இவ்வளவு ஏன் சக பணியாளர்கள் எக்கேடு கெட்டால் என்ன நிர்வாகத்தோடு நெருங்கி நமக்குத்தேவையானதை சாதித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உடைய சுயநல கிருமிகள் கலந்து கொள்ளலாம்" என்றோம்.