பாண்டியன் கிராம வங்கி 1977ம் ஆண்டு துவங்கப்பட்டு, இன்று கன்னியாகுமரியிலிருந்து திருச்சி வரை 335 கிளைகளோடு இயங்கி வருகிறது. அதன் தலைமையலுவலகம் விருதுநகர் கலெக்டர் வளாகத்தில் அமைந்திருக்கிறது.
1987ல் கடலூரை தலைமையலுவலகமாகக் கொண்டு துவங்கப்பட்ட வள்ளலார் கிராம வங்கியும், தருமபுரியை தலைமையலுவலகமாகக் கொண்டு துவக்கப்பட்ட அதியமான் கிராம வங்கியும் 2006ம் ஆண்டு ஒன்றிணைக்கப்பட்டு பல்லவன் கிராம வங்கியாக சேலத்தை தலைமையலுவலகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து திருச்சி வரை 291 கிளைகளோடு இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் இந்த இரண்டு கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து (amalgamation) ஒரே கிராம வங்கியாக அமைப்பதற்கு மத்திய அரசின் நிதியமைச்சகம் முடிவு செய்து அறிவித்து உள்ளது.
பாண்டியன் கிராம வங்கியின் ஸ்பான்ஸர் வங்கியாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இருக்கிறது. பல்லவன் கிராம வங்கியின் ஸ்பான்ஸர் வங்கியாக இந்தியன் வங்கி இருக்கிறது. ஒன்றிணைக்கப்படும் கிராம வங்கியின் ஸ்பான்ஸர் வங்கியாக இனி இந்தியன் வங்கி இருக்கும் எனவும் மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.
ஒன்றிணைக்கப்பட இருக்கும் கிராம வங்கியின் பெயர், தலைமையலுவலகம் இருக்கும் இடத்தை முடிவு செய்து தெரிவிக்குமாறு இந்தியன் வங்கிக்கு நோட்டீஸூம் நிதியமைச்சகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி தெரிவித்தவுடன், இரண்டு கிராம வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, முறையான பிரத்யேக அரசாணை வெளியிடப்படும். இந்தியன் வங்கி அடுத்த போர்டு மீட்டிங்கில் இதனை அஜெண்டாவாக கொண்டு சென்று முடிவெடுத்து அரசுக்கு தெரிவிக்க இருப்பதாக அறிகிறோம்.
பாண்டியன் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியும் ஒன்றிணைக்கப்பட இருக்கும் இந்த தருணத்தில், அந்த கிராம வங்கியின் பெயர் மற்றும் தலைமையிடம் குறித்து நமக்கு ஒரு பார்வையும் தெளிவும் வேண்டும். அதுகுறித்து PGBOA & PGBWU கலந்து பேசி இருக்கிறோம். கீழ்கண்ட நிலைபாட்டை எடுத்திருக்கிறோம்.
1. ஒன்றிணைக்கப்பட இருக்கும் கிராம வங்கிக்கு ‘தமிழ்நாடு கிராம வங்கி’ அல்லது ‘தமிழக கிராம வங்கி’ என்ற பெயர் வைக்கலாம். அது நமது மாநிலத்தில் இயங்க இருக்கும் ஒரே கிராம வங்கிக்கு பொருத்தமான பெயராகவும், நம் மாநிலத்தை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என கருதுகிறோம்.
2. ஒன்றிணைக்கப்படும் கிராம வங்கியின் தலைமையலுவலகம் கீழ்கண்ட காரணங்கள் மற்றும் பின்னணியில் விருதுநகரில் இருப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என கருதுகிறோம்.
a) தமிழ்நாட்டில் முதன்முதலாக 1977ல் ஆரம்பிக்கப்பட்ட பாண்டியன் கிராம வங்கியின் மூலம்தான் தமிழக மக்களுக்கு ‘கிராம வங்கி’ (Regional Rural Banks) என்பதே அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வேரூன்றி இருக்கிறது. அதன் 42 வருட அனுபவமும், சேவையும் மகத்தானது. இந்த ஒன்றிணைப்பின் மூலம் அதன் பெயர் மாற்றப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது. இருப்பினும் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட அந்த பாண்டியன் கிராம வங்கியின் தலைமையலுவலகத்தையே ஒன்றிணைக்கப்பட இருக்கும் கிராம வங்கியின் தலைமையிடமாய் தக்க வைத்துக் கொள்வது அந்த அடையாளத்தையும், நீண்ட வரலாற்றையும் சுவீகரித்துக் கொள்ள உதவும்.
b) ஒன்றிணைக்கப்பட இருக்கும் கிராம வங்கியின் தலைமையிடமாக சேலம் அல்லது சென்னை இருக்கலாம் என பல்லவன் கிராம வங்கியில் கருதுவதாக அறிகிறோம். இந்த இரண்டுமே பெரு நகரங்களாக இருப்பதால், ‘கிராம வங்கி’ என்னும் கருத்துருவாக்கம் முன்னிறுத்தும் பிரத்யேக தன்மைகளையும், கிராமப்புற மணத்தையும், கோட்பாடுகளையும் நீர்த்துப் போகச் செய்வதாகவே அமையும். விருதுநகர் கிராமப்புற மயமான ஒரு சிறு நகரம். எனவே, ஒன்றிணைக்கப்பட்ட கிராம வங்கியின் தலைமையிடமாக விருதுநகர் இருப்பதே பொருத்தமாய் இருக்கும்.
c) ஒன்றிணைக்கப்பட்ட கிராம வங்கியின் தலைமையகம் புதிதாக ஒரு இடத்தில், ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு செயல்படுவது என்பது பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தலைமையிடத்தை மாற்றும் பெரும் சிரமங்களும் இருக்கும். விருதுநகரில் கலெக்டர் வளாகத்தில் அமைந்திருக்கும் பாண்டியன் கிராம வங்கியின் தலைமையிடம் தேவையான வசதிகளோடு, விரிவாக்கத்திற்கான இடத்தோடு சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே தலைமையக மாற்றமும், அதற்கான செலவுகளும் பெருமளவில் குறையும். அடுத்ததாக விருதுநகரில் தலைமையகம் கலெக்டர் வளாகத்தில அமைந்திருப்பதால், கிராமப்புற வங்கி சேவைக்கான அனைத்து வாய்ப்புகளும், வசதிகளையும் இயல்பாகவே கொண்டிருக்கிறது.
d) பாண்டியன் கிராம வங்கியின் 335 கிளைகளும், பல்லவன் கிராம வங்கியின் 291 கிளைகளும் சேர்ந்து ஒன்றிணைக்கப்பட்ட மொத்தம் 626 கிளைகள் இருக்கும். இந்த 626 கிளைகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 270 கிளைகள் அடர்ந்து இருக்கின்றன. இவை அனைத்திற்கும் விருதுநகரே மிக அருகில் உள்ள தலைமையிடமாக இருக்கும். மேலும் விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பது உடனடி தொடர்பு வசதிகளுக்கும் உகந்ததாகவும் இருக்கும்.
e) தமிழகத்தின் முதலமைச்சரும், ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டவருமான பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த ஊர் விருதுநகர். எனவே ஒன்றிணைக்கப்பட்ட கிராம வங்கியின் தலைமையலுவலகம் விருதுநகரில் அமைவது மேலும் சிறப்புக்குரியதாக இருக்கும்.
f) இவையனைத்திற்கும் மேலாக, எந்த ஒரு வங்கிக்கும் தென் தமிழகத்தில் தலைமையிடம் இதுவரை இருந்ததில்லை. ஒன்றிணைக்கப்ப்ட்ட கிராம வங்கி மூலம் முதன் முதலாக அந்த வாய்ப்பு தென் தமிழகத்திற்கு கிடைப்பது பெருமைக்குரிய விஷயமாக இருக்கும்.
இவ்விஷயங்களை தெளிவுபடுத்தி நமது இரு சங்கங்களிலிருந்து இந்தியன் வங்கி managing Director-க்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.
(J.மாதவராஜ்) (S.நடராஜன்)
GS – PGBWU GS – PGBOA
Comments