top of page

தமிழ்நாடு கிராம வங்கியில் நமது தொழிற்சங்க இயக்கம் தன் இருப்பை மிக அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது!


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

8.8.2019 !

தமிழ்நாடு கிராம வங்கியில் தொழிற்சங்க இயக்கம் தன் இருப்பை மிக அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது. நிர்வாகத்தை எதிர்த்து, சேலத்தில் நடைபெற்ற முதல் போராட்டம் உணர்வு பூர்வமாக எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கிறது.

நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிகளில் மீறுவதை, எல்லாவற்றிலும் பெரும் கால தாமதம் செய்வதை, தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் கிள்ளுக்கீரையாக நடத்துவதை எதிர்த்து ஜனநாயக ரீதியாக நம் குரல்களை பதிவு செய்வதற்காக 8.8.2019 அன்று தர்ணா அறிவித்தோம்.

நூறு தோழர்களை சேலம் தலைமையலுவலகத்தின் முன்பாக திரட்டுவோம் என திட்டமிட்டோம். ஆனால் நிர்வாகம் தர்ணாவுக்கு லீவு கிடையாது என அறிவித்து, மண்டல மேலாளர்கள் மூலம் அடக்குமுறைகளை ஏவி விட்டது. அதுவே ஊழியர்களிடையே கொந்தளிப்பைய ஏற்படுத்தியது.

இளைஞர்களின் பெரும்படையாய் 220 தோழர்கள் திரண்டார்கள். 60க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தோழர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 300 தோழர்களாய் தலைமையலுவலகம் முன்பு தர்ணாப்பந்தல் நிறைந்திருந்தது.

“ஒர்க்கர்ஸ் யூனிட்டி" என்னும் தோழர் சோலைமாணிக்கத்தின் உயிர்த்துடிப்பு மிக்க கோஷங்களோடு தர்ணா துவங்கியது. TNGBOA தலைவர் தோழர் பத்மநாபன் தலைமை தாங்கி தர்ணாவின் நோக்கத்தையும், நிர்வாகத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டினார். BEFI-TN Secretary தோழர் S.A. ராஜேந்திரன் தர்ணாவைத் துவக்கி வைத்து பேசினார். எங்கும் நிறைந்திருக்கும் ஆட்குறைப்பையும், நிர்வாகங்கள் நடத்தும் ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அரசையும், அமைப்பையும் அம்பலப்படுத்தினார். வங்கித்துறையும், தேசமும் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்களைச் சுட்டிக்காடினார். இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இது போன்ற நம்பிக்கை எனவும் உணர்த்தினார்.

TNGBWU, TNGBOA, TNGBRS சங்கங்களின் சார்பில் நம் தலைவர்களின் முன்வைத்த கருத்துக்களும், விமர்சனங்களும் தோழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அவை அனைத்தும் உண்மை என்பதை அனுபவத்தில் உணர்ந்து இருந்ததாலேயே அவர்கள் ஆர்ப்பரித்தனர். நிர்வாகத்தின் தரப்பில் இருக்கும் தவறுகளை மிக வெளிப்படையாக நம் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

வங்கியின் முக்கியப் பிரச்சினையான ‘போதிய ஊழியர்களும், அலுவலர்களும் இல்லை' என்பதை இந்த நிர்வாகம் உணர்ந்து, அதை எப்படி கையாள்வது என மனிதாபிமானத்தோடு சிந்திக்க மறுக்கிறது. இதுதான் அடிப்படையானப் பிரச்சினை. தொழிலாளர்களை இரக்கமற்று கஷ்டப்படுத்தி, சுரண்டி, எப்படியாவது வங்கியின் வணிகத்தை உயர்த்தவேண்டும் என்று சிந்திக்கிறது. செயல்படுகிறது. இதுதான் தொழிலாளர்களுக்கு பெரும் ஆத்திரத்தையும் எரிச்சலையும் தருகிறது.

இந்த நிர்வாகம் தொழிலாளர்களோடு நட்பாகவும், இணக்கமாகவும், அக்கறையாகவும் இல்லை என்பதுதான் அனைவரின் குரலாக வெளிப்பட்டது. இதைத்தான் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மிரட்டுவதும், கட்டாயப்படுத்துவதும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என நாம் சொல்கிறோம். ஆனால் நிர்வாகம் அதைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

இந்த நிர்வாகம் தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசிப்பது, வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவது என்பது அறவே இல்லை. எல்லாவற்றையும் மேலிருந்து திட்டமிட்டு அதைத் திணிப்பது என்பது நிர்ப்பந்தகளாகவே இருக்கும். இந்த நிர்ப்பந்தங்களும், கட்டாயப்படுத்துதலும், களத்தில் நின்று பணிபுரிகிறவர்களுக்கு தாங்கள் முக்கியமற்றவர்கள் என்ற உணர்வையே ஏற்படுத்தும்.

இந்த வங்கிக்கென்று விதிமுறைகள் இல்லை. இந்த வங்கியில் பணிபுரிகிறவர்களுக்கென்று பொறுப்புகள் வரையறுக்கப்படவில்லை. முக்கியப்பணிகளை நிர்வாகம் அதிகாரபூர்வமற்று வாய்மொழியாகவே நடத்தி வருகிறது. இது பெரும் பணிகளிலும்,பணிச்சூழல்களிலும் பெரும் சிக்கல்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இதனை கிளையில் பணிபுரிகிற தோழர்கள் அனுபவத்தில் கண்டு வருகிறார்கள். ஆனால் நிர்வாகம் அதை கண்டு கொள்ளவுமில்லை, சரி செய்ய எத்தனிக்கவும் இல்லை.

இதையெல்லாம் நிர்வாகம் புரிந்து கொள்ள மறுக்கிறது அதன் வெளிப்பாடுதான் இந்த தர்ணா.

சங்கங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் வெளிப்பட்டு இருக்கும் இருக்கும் பிரச்சினைகளும் இவைதாம்.

சி.ஐ.டி.யூ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், எல்.ஐ.சி, வங்கி ஊழியர் சம்மேளத்தைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். நம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

கோஷங்களும், சங்கத்தலைவர்களின் உரைகளும் தலமையலுவலகத்தை அதிர வைத்தன.

கொண்டாட்டமான, கொதிப்பான அனுபவமாக இருந்தது.

நிர்வாகம் இதனைப் புரிந்து கொண்டு நம் கோரிக்கைகளை உடனடியாகத் தீர்க்க முன்வர வேண்டும். ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றே நாம் இப்போதும் விரும்புகிறோம்.

தொழிலாளர்களை ,மிரட்டுவது, போராட்டங்களை ஒடுக்குவது என நிர்வாகம் சிந்திக்குமானால், செயல்படுமானால் நிலைமைகள் மேலும் மோசமாகும் என்றே சொல்லிக் கொள்கிறோம்.


70 views0 comments

Comments


world-spin-crop.gif
bottom of page