தனக்கு கீழ் பணிபுரியும் கிளை மேலாளர்களையும் அலுவலர்களையும் பணியாளர்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணி பேச


தோழர்களே

இன்று இருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில் நமது புதிய தோழர்களும் குறிப்பாக பெண் தோழர்கள் மிகுந்த சிரமத்தோடு பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான சிரமங்களை எந்தப் புரிதலும் இல்லாமல் கடந்து செல்கிறது இந்த நிர்வாகம்.

மேலும் 22.08.2019 அன்று காஞ்சிபுரம் மண்டல மேலாளர் மற்றுமொரு அத்துமீறலை ஒரு பெண் மேலாளரிடம் நிகழ்த்தியிருக்கிறார். தன்னுடன் பணிபுரியும் அலுவலரை relieve செய்யவில்லை என்று மிகவும் கீழ்த்தரமான கொச்சையான வார்த்தை பிரயோகத்தை செய்திருக்கிறார். அவருடைய இத்தகைய எதேச்சதிகார கீழ்த்தரமான பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு நாம் நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இதைப்போல தூத்துக்குடி மண்டல மேலாளர் மேனேஜர் மீட்டிங்கில் ஒரு பெண் கிளை மேலாளரிடம் வரம்பு மீறி பேசியிருக்கிறார். இவர்களுக்கு இந்த துணிச்சலையும் அதிகார திமிரையும் யார் கொடுத்தது? தனக்கு கீழ் பணிபுரியும் கிளை மேலாளர்களையும் அலுவலர்களையும் பணியாளர்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணி பேசுவதையும் நடத்துவதையும் நமது சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இத்தகைய நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் பெண் தோழர்களுக்கு நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து HRM chief manager இடமும், சேர்மன் இடமும் நேரில் சென்று முறையிட்டோம். நமது கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்தோம்.

இதற்கு முன்னதாகவே நமது பொதுச் செயலாளர் காஞ்சிபுரம் மண்டல மேலாளரிடம் தமது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட இரண்டு மண்டல மேலாளர்களும் தங்களது செய்கைகளுக்கு பாதிக்கப்பட்ட பெண் தோழர்களிடம் வருத்தம் தெரிவித்தார்கள்.

நாம் நமது தலைமை அலுவலக நிர்வாகிகளிடம் இனியும் இத்தகைய நிகழ்வுகள் தொடருமாயின் நாங்கள் சங்கமாக இந்த பிரச்சினைகளை கையில் எடுத்து பெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டரீதியாகவும் தண்டனை பெற்றுத்தருவோம் என்றும் தெரிவித்தோம்.

தோழர்களே நாம் நம்முடைய சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் எந்த காரணத்தைக் கொண்டும் இழந்து விடக்கூடாது. எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான சொல்லாடல்களும் குற்றங்களும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் நம் சங்கம் தலையிட்டும் உங்களுக்காக போராடும். நீங்களும் உங்கள் அச்சங்களை விடுத்து இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க வேண்டாம்.

அறிவுடைநம்பி பொதுச் செயலாளர் TNGBOA