
தோழர்களே!
சேலத்தில் நமது சங்க அலுவலகத் திறப்பு விழா 17.11.2019 அன்று மிக சிறப்பாகவும் எழுச்சியோடும் நடைபெற்றது.
சனிக்கிழமை இரவிலிருந்தே தோழர்கள் சங்க அலுவலகத்திற்கு வரத் துவங்கினர். சங்கத்தின் மீது தோழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரியமும், பிடிப்பும்தான் நமது வலிமையும், வீரியமும் ஆகும்.
பெரிய அளவில் தோழர்களுக்கு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றாலும், குறுகிய கால அவகாசத்தில் அழைப்பு விடப்பட்ட போதும், JAIIB பரீட்சைகள் இருந்த போதும், 300க்கும் அதிகமான தோழர்கள் நம சங்க அலுவலகத்திற்கு வந்து நிறைந்தனர். அந்தப் பகுதி முழுவதும் நமது AIRRBEAவின் செந்நிறக்கொடிகள் நிறைந்திருந்தன.
உடலநலமில்லையால, நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர், கடைசி நேரத்தில் வர இயலாமையைத் தெரிவித்திருந்தார். அவரது வேண்டுகோளின் பேரில் அகில இந்திய சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் நாகபூஷண் வந்து, நம் சங்க அலுவலகத்தை, தோழர் சோலைமாணிக்கத்தின் கம்பீர முழக்கங்களோடு திறந்து வைத்தார். சங்க அலுவலகத்தின் உள்ளிருந்து மகத்தான நம் அகில இந்தியத் தலைவர்கள் தோழர் அசிஸ்சென்னும், தோழர் திலிப்குமார் முகர்ஜியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் காலமெல்லாம் சிந்தித்து செயல்பட்ட மாமேதை அம்பேத்கரும் தோழர்களை வரவேற்றனர். சங்க அலுவலகம் நம் தோழர்களின் பாதங்களாலும், வெப்பம் நிறைந்த மூச்சுக் காற்றாலும் நிறைந்தது.
சங்க அலுவலகத்தில் அருகே உள்ள விஜயலஷ்மி மஹாலில், சங்கத் திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மகத்தான அந்த நிகழ்வு குறித்து நெகிழ்ச்சியோடு தோழர் காமராஜ் அறிவித்தார். தோழர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தோழர் அறிவுடை நம்பி, நம் பணிகளும், முயற்சிகளும் இந்த அலுவலத்திலிருந்து தொடர்கிறது என அனைவரையும் வரவேற்றார்.
தோழர் நாகபூஷண் ராவ் நம் சஙகங்களையும், சங்க அலுவலகத்தையும் பாராட்டி, வருங்காலத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் AIRRBEA சங்கமாக இருக்க வேண்டும் என்றார். நமது வங்கியின் சேர்மன் அவர்கள், இஸ்ரேலுக்கு அலுவல் நிமித்தம் செல்ல வேண்டி இருப்பதால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்பதையும், சங்கத் திறப்பு விழாவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். அவரது சார்பில் Chief Manager தோழர் சௌந்திர நாகேஸ்வரன் நமது அகில இந்தியத் தலைவருக்கு பூங்கொத்தை வழங்கினார்.
TNGBWU தலைவர் தோழர் சுரேஷ், வள்ளலார் கிராம வங்கியில் தாங்கள் செயல்படத் துவங்கியபோது கண்ட கனவு இன்று நனவாகி இருப்பதை உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார்.
TNGBRS தலைவர்கள் தோழர் புளுகாண்டி, தோழர் கிருஷ்ணன், சோலைமாணிக்கம் வாழ்த்திப் பேசினர்.
BEFI அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன், தமிழ்நாடு கிராம வங்கியின் போர்க்குணமிக்க தோழர்களால் சங்கம் நாளுக்கு நாள் வலிமை பெறுவதை பெருமையோடு குறிப்பிட்டார். இன்று வங்கித்துறை எதிர்கொண்டு இருக்கும் சவால்கள், பொதுத்துறை வங்கிகள் மீது மக்களின் நம்பிக்கையை இழந்து வருவது, அதுகுறித்து நாம் கவலைகொள்ள வேண்டி இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
BEFI TN மாநிலச் செயலாளர் தோழர் ராஜகோபால், தமிழ்நாடு கிராம வங்கியில் இருக்கும் நம் சங்கம் சமூகப் பார்வையோடு, தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி செயல்பட வேண்டும் என வாழ்த்தினார்.
BEFI Salem District Secretary தோழர் தீனதயாளன், தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனும், தமிழ்நாடு கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோஷியேஷனும் சேலத்தில் தொழிற்சங்க இயக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறார்கள் என தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
BEFI TN Secretary தோழர் S.A.ராஜேந்திரன், சேலத்தில் இருக்கும் மற்ற தொழிற்சங்கங்களோடு நம் உறவுகளையூம், தொடர்புகளையும் மேம்படுத்த வேண்டும், அந்த வழியில் பயணிக்க வேண்டும் என வாழ்த்தினார்.
TNGBOA சார்பில் தோழர் அருண ஜடேஜன், தோழர் ஐஸ்வர்யா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். 1985ல் முதன்முதலாக சாத்தூரில் 42 பி எல்.எப்.தெரு சாத்தூரில் ஆரம்பித்த சங்க அலுவலகத்தில், எத்தனை மகத்தான காரியங்களை ஆற்ற முடிந்தது என்பதை நினவு படுத்தி, சங்க அலுவலகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.
நன்றியுரை என்பது சம்பிரதாயம் எனச் சொல்லி விட்டு, நம் சங்கம் எங்கெல்லாம் நிர்வாகத்தின் தலைமையலுவலகம் மாறிக்கொண்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் தங்கள் சங்க அலுவலகத்தை திறந்து செயல்படுகிறோம் என்பதை வரலாற்று ரீதியாக தெரிவித்தார் தோழர் மாதவராஜ். சங்க அலுவலகத்திற்கு பணி நேரமெல்லாம் கிடையாது, 24 மணி நேரமும் பணி செய்வதற்கான களம் அது என்பதை உணர்த்தினார். ஊழியர்கள், அலுவலர்களுக்கு பிரச்சினைகளை தொடர்ந்து தந்து, வங்கியில் தொழில் அமைதியைக் கெடுப்பது நிர்வாகம் என்பதையும், அந்த பிரச்சினைகளை முன்வைத்து, அவைகளுக்கு தீர்வு கண்டு தொழில் அமைதி நிலவ பங்காற்றுவது சங்க நிர்வாகிகள் என்பதையும் விளக்கினார். இறுதியாக நிர்வாகம் சமீபத்து மாறுதல்களில் செய்திருக்கும் மோசடிகளையும், இன்னும் தீர்க்க்கப்படாத கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டங்களில் இறங்குவது என இரண்டு சங்க செயற்குழுக்களும் கூடி முடிவெடுத்ததை தோழர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார். இந்த சங்க அலுவலகம் போராட்ட அறிவிப்போடு திறக்கப்பட்டு இருக்கிறது என, நம் பயணம் தொடரும் என்றார். அத்துடன் திறப்பு விழா நிறைவு பெற்றது.
தோழர்களின் முகங்களில் மகிழ்ச்சியும், வெளிச்சமும் பரவி இருந்தது. அவர்களின் பேச்சுகள் அந்த அரங்கமெல்லாம் நிறைந்து பொங்கிப் பெருக்கெடுத்துக் கொண்டு இருந்தன.
J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி
GS–TNGBWU GS-TNGBOA