top of page

ஊழியர்கள் நலனில் கவலைகொள்ளாமல், நிர்வாகத்தின் நலனில் பெரிதும் அக்கறைகொள்ளும் பல்லவன் கிராம வங்கியின


Tamilnadu Grama Bank-ற்கான Amalgamation குறித்த அறிவிப்பு வந்ததும், பல்லவன் கிராம வங்கியில் இருக்கும் AIBOC சங்கத்தின் இணைப்புச் சங்கம் சார்பில் பல்லவன் கிராம வங்கி சேர்மனுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த சங்கத்தின் தோழர்களுக்கும் சில செய்திகள் பகிரப்பட்டுள்ளன. அவைகளைப் படிக்கும் போது அதெல்லாம் ஒரு தொழிற்சங்கமா என்னும் கேள்வியே முதலில் எழுகிறது.

பாண்டியன் கிராம வங்கியை எதோ தறுதலை போல இரண்டாம் பட்சமாக கருதுவதாக அந்த சங்கத்தின் தொனி இருக்கிறது. பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறவர்கள் சரியில்லாதவர்களாக, உண்மையை மறைப்பவர்களாக சித்தரிக்கிறது. தப்பித் தவறி கூட ஊழியர் நலன், அலுவலர் நலன் குறித்து யோசிக்காத அந்த சங்கத்தின் இயல்பை புரிந்து கொள்ள முடிகிறது. அச்சங்கம் குறித்தும், அவர்கள் தெரிவித்திருக்கும் செய்திகள் குறித்தும் பாண்டியன், பல்லவனில் பணிபுரியும் தோழர்கள் புரிந்து கொள்வது அவசியம் என கருதுகிறோம்.

பல்லவன் கிராம வங்கியில் மொத்தம் 560 ஆபிஸர்கள் இருக்கிறார்கள். ஆபிஸர்களுக்கு மூன்று சங்கங்கள் இருக்கின்றன. ஒன்று Pallavan Grama Bank Officers Union (Pallavan GBOU). இது நமது AIRRBEAவோடு இணைப்புப் பெற்றது. இதில் 80 பேர் உறுப்பினராக இருக்கின்ரனர். இன்னொரு சங்கம் Pallavan Grama Bank Officers Organisation (Pallavan GBOO). அது AIBOA வுடன் இணைப்புப் பெற்றது. அதில் 40 பேர் போல உறுப்பினராக இருக்கின்றனர். மூன்றாவது Pallavan Grama Bank Officers Association (Pallavan GBOA). அது AIBOC உடன் இணைப்புப் பெற்றது. இதில் ஏறத்தாழ 400 பேருக்கும் மேலே உறுப்பினர்களாக இருக்கின்றனர். 30 பேர் போல எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆக, AIBOC இணைப்புப் பெற்ற Pallavan GBOA சங்கம் பெரும்பான்மையான சங்கமாக பல்லவன் கிராம வங்கியில் இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது. ஸ்பான்ஸர் வங்கியான இந்தியன் வங்கியிலிருக்கும் 'AIBOC சங்கத்தை வைத்துக்கொண்டு காரியத்தை சாதிக்கலாம்’ என்னும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு காலத்தை தள்ளி வந்திருக்கிறது. அது பெரும்பான்மையாகவும், நிர்வாகத்துக்கு வேண்டப்பட்டவர்களாகவும் இருப்பதால் புதிய ஆபிஸர்களும் அதிலேயே சேர்ந்து கொண்டு விழி பிதுங்கி போயிருக்கின்றனர்.

பாண்டியன் கிராம வங்கியில் ஆபிஸர்களுக்கு ஒரே சங்கமாக நமது AIRRBEA இணைப்புப் பெற்ற Pandyan GBOA இருக்கிறது. ஏறத்தாழ 700 தோழர்கள் அதன் உறுப்பினர்களாக இருக்கின்றனர். AIRRBEA தலைமையில் தெளிந்த தொழிற்சங்க பார்வையோடு, ஆபிஸர்களின் நலனிலும் உரிமையிலும் சமரசமற்றும், போர்க்குணத்தோடும் இயங்கி வருகிறது.

பாண்டியனிலும் பல்லவனிலும் இருக்கிற நமது இரண்டு ஆபிஸர்கள் சங்கங்களும் இணையும் போது AIRRBEA இணைப்புச் சங்கத்தில் 780 தோழர்கள் இருப்பார்கள். AIBOC இணைப்புச் சங்கத்தில் 400 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அந்த சங்கம் இனி பெரும்பான்மையாக இருக்க முடியாது. அதை விட இரண்டு மடங்கு உறுப்பினர்களோடு நமது AIRRBEA இணைப்புச் சங்கம் பெரும்பான்மை கொண்டதாய் இருக்கும்.

பல்லவன் கிராம வங்கியில் நிர்வாகம் அதன் ஊழியர்களையும், அலுவலர்கலையும் கசக்கிப் பிழிகிறது. பல அலவன்சுகளை மறுக்கிறது. அதையெல்லாம் கேட்காமல் நிர்வாகத்துக்கு அனுசரணையாய் AIBOC சங்கம் இருப்பதால் பல்லவன் கிராம வங்கியில் இருக்கும் ஆபிஸர்கள் பலரும் மனக்குமுறலோடு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் Amalgamationக்குப் பிறகு நமது AIRRBEA இணைப்புச் சங்கத்தில் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர். AIBOC சங்கம் விரைவில் 100க்கும் கீழே உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாகவும், நமது AIRRBEA இணைப்புச் சங்கம் 1200 உறுப்பினர்களோடு தனிப்பெரும் சங்கமாக உருவெடுக்க இருக்கிறது.

இந்த நிலமையைப் புரிந்து கொண்ட AIBOC இணைப்புச் சங்கமான Pallavan GBOAவை இப்போதே பதற்றமும், பயமும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது. பல்லவன் கிராம வங்கி சேர்மனுக்கு எழுதப்பட்ட கடிதத்திலும், அதன் தோழர்களுக்கு பகிர்ந்த செய்திகளிலும் அந்த சங்கம் படபடக்கிறது.

TDS Compliance , KYC compliance பார்க்க வேண்டுமாம். Govt Deposit, Institutional Deposit களுக்கு proper mandate வாங்க வேண்டுமாம். Bulk Deposit களுக்கு balance confirmation உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாம். Renewal of Advances ஐ fine tune ஆக வைத்துக் கொள்ள வேண்டுமாம். இப்படி பல விஷயங்களை முன்வைக்கிறது. இவையெல்லாம் நிர்வாகம் கவலைப்பட வேண்டிய, கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள். அதை ஆளுக்கு முந்தி அங்கு ஒரு தொழிற்சங்கமே பேசுவது வினோதமாக இருந்தது. பரவாயில்லை, ஒரு தொழிற்சங்கமாக தங்கள் உறுப்பினர்களை தற்காத்துக் கொள்வதற்கு அறிவுறுத்துகிறது என்று Positive-ஆகவே முதலில் புரிந்து கொண்டோம்.

ஆனால் அதற்கான காரணத்தை – “OUR IN HOUSE NEEDS TO BE PERFECT SO THAT WE CAN DOMINATE POST AMALGAMATION SCENARIO.” – என்று அந்த சங்கம் குறிப்பிடும்போதுதான் தெளிவானது. அதாவது பல்லவன் கிராம வங்கியில் பணிபுரிகிற ஆபிஸர்கள் தங்களை சரியாக வைத்துக் கொண்டால்தான், amalgamationற்குப் பிறகு dominate செய்வதற்கான தகுதியோடு இருக்க முடியுமாம். ஆஹா…!

யாரை dominate செய்ய? Dominate செய்வது என்றால் என்ன? ஒருவர் தன்னை உயரத்தில் வைத்துக் கொள்வது. இன்னொருவரை தனக்குக் கீழே வைத்துக் கொள்வது. அதன் மூலம் அதிகாரத்தை செலுத்துவது. ஆக பல்லவன் கிராம வங்கியில் இருக்கும் ஆபிஸர்கள் தங்களுக்குக் கீழே பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு நல்லெண்ணம் அந்த AIBOC சங்கத்துக்கு பாருங்களேன்.

ஒரு தொழிற்சங்கம், ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களையும் சமமாக பாவிக்க வேண்டும். வேறு வேறு வர்ணம் பூசுவதும், அதிகாரம் செலுத்த நினைப்பதும் என்ன மனோபாவம்? தனித்தனியாக இரண்டு வங்கிகள் திடீரென ஒன்றிணையும்போது நிச்சயம் கலாச்சார ரீதியாக, பூகோள ரீதியாக, வரலாற்று ரீதியாக முரண்பாடுகள் எழலாம். அவைகளை சரிசெய்து, அனைவரையும் ஒன்றாக்கி, தொழிலாளர் ஒற்றுமையை வளர்த்தெடுப்பதுதானே சரியான தொழிற்சங்க அணுகுமுறையாக இருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே பேதங்களை முன்வைத்து நாம்தான் dominate செய்ய வேண்டும் என்று நினைப்பது தொலைக்காட்சி சீரியல்களை விடமோசமாகவும், அபத்தமாகவும் இருக்கிறது.

இந்தக் கருத்தை அந்த AIBOC இணைப்புச் சங்கம் பல இடங்களில் உறுதிப்படுத்துகிறது. “IN PAPER PALLAVANS PERFORMANCE MAY NOT BE ON PAR WITH PANDIAN STILL BY OUR ATTITUDE, IN HOUSE STANDARD WE CAN EXCEL.”. இது இன்னொரு இடத்தில் அந்த AIBOC இணைப்புச் சங்கம் குறிப்பிடும் விஷயம். அதாவது, பாண்டியன் கிராம வங்கி- கிளைகளின் எண்ணிக்கையில், ஊழியர்கள் அலுவலர்களின் எண்ணிக்கையில், வணிகத்தில், லாபத்தில் பல்லவன் கிராம வங்கியை விட சிறப்பானதாக காகிதத்தில் வேண்டுமானால் இருக்கலாமாம். ஆனால் இயல்பிலும், தரத்திலும் பல்லவன் கிராம வங்கி சிறப்பானதாக இருப்பதால் பல்லவன் கிராம வங்கி பிரமாதப்படுத்தி விடலாமாம். அட கண்றாவியே!

இங்கு நாம் அனைவரும் அவரவர்க்கான பணிகளைச் செய்யத்தானே வந்திருக்கிறோம். இதில் என்ன ஒருவரையொருவர் excel செய்வது? அப்படி excel செய்துவிட்டால்…..? . பார்வையே இங்கு ஊனமாகி இருக்கிறது.

பல்லவன் கிராம வங்கி ஆரம்பிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியன் கிராம வங்கி ஆரம்பிக்கப்பட்டது. எனவே இயல்பாக அதன் கிளைகளின் எண்ணிக்கையும், ஊழியர்களின் எண்ணிக்கையும், வணிகமும் அதிகமாகத்தான் இருக்கும். பாண்டியன் கிராம வங்கியை பல்லவன் கிராம வங்கி இப்படித்தான் பார்க்க வேண்டும். நமக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பித்தாலும், பல்லவன் கிராம வங்கி நன்றாக செயல்பட்டு இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என பாண்டியன் கிராம வங்கி கருத வேண்டும். பரஸ்பரம் இந்த புரிதல்தான் நாளை ‘தமிழ்நாடு கிராம வங்கி’யாக நாம் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஆதாரமாக இருக்கும்.

நாம் அனைவரும் கிராம வங்கி ஊழியர்களே. அஸ்ஸாமில் இருந்தாலும், காஷ்மீரில் இருந்தாலும், உத்திரப்பிரதேசத்தில் இருந்தாலும் கிராம வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்றே. மொழியும், இனமும், சாதியும், மதமும், எல்லைகளும் கடந்து தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதுதான் நமது அகில இந்திய சங்கம் AIRRBEA சொல்லித் தந்த பால பாடம். ஆனால் இந்த AIBOC இணைப்புச் சங்கம், ஒரே மாநிலத்தில் வெவ்வேறு பெயர்களைத் தாங்கி இருக்கும் கிராம வங்கி ஊழியர்களையும் அலுவலர்களையும் Performance என்றும் Excellence என்றும் பிரித்திட பேசுவது, சகுனி உருட்டி விடும் தாயத்தின் சத்தங்களாக கேட்கின்றன.

இன்னும் பாருங்கள்…. அந்த AIBOC இணைப்புச்சங்கம் எப்படியெல்லாம் பாண்டியன் கிராம வங்கியையும், அதன் ஆபிஸர்களையும் மோசமானவர்களாய் பார்க்கிறது என்பதை கீழ்கண்ட வாசகங்களின் இடையே இருக்கும் அர்த்தங்கள் சொல்லும்.

“Income tax compliance: In Pandiyan, the income tax payment issue is subjudice. Necessary legal opinion to be taken on handling the case post amalgamation as one merged entity (we are paying tax as pallavan and they have not paid as Pandiyan)”.

”TDS not paid by Pandian may be looked into and provision is adequately provided so that the bank need not absorb the shock of sudden burden of payment”.

“Written off and Waiver made after amalgamation notification needs to be scrutinised after analysis of age of accounts”.

“Unconfirmed expenditure, unconfirmed advances, unconfirmed priority rate deposits to be separately studied by vigilance department”.

“Personal files to be taken over with all records intact with due authentication between transferee officers”.

“Study of DP cases in detail for necessary action. We on our side can explore the possibility of portraying ourselves as zero vigilance case bank”.

நாளை தமிழ்நாடு கிராம வங்கியாக - ஒன்றாக பணிபுரிய இருக்கிற ஒரே வங்கியைச் சேர்ந்தவர்களாக – உணரத் தலைப்படும் ஒரு தொழிற்சங்கம் இப்படியா விஷத்தை கக்கும்? பல்லவன் கிராம வங்கியின் AIBOC இணைப்புச் சங்கம் ஒரு Informer போல செயல்பட துணிந்து விட்டது தெரிகிறது. எதோ குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் போல பாண்டியன் கிராம வங்கியின் ஆபிஸர்களை சித்தரிப்பது எவ்வளவு ஆபத்தானது?

தவறுகளை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டி அதை சரி செய்வதும், சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதுமே ஒரு தொழிற்சங்கத்தின் பணியாக இருக்க முடியும். காட்டிக் கொடுத்து பேர் வாங்கும் புலவர்களை வரலாறு ஒருபோதும் மதிப்பதில்லை.

தோழர்களே!

பல்லவன் கிராம வங்கியில் இருக்கும் அந்த AIBOC இணைப்புச் சங்கத்தின் நோக்கங்கள் இவைதான் எனத் தெளிவாகிறது.

1. நிர்வாகம் செய்ய வேண்டிய காரியங்களை முன்மொழிகிறவர்களாகவும், நிர்வாகத்துக்கு அனுசரணையானவர்களாகவும் தங்களை நிலை நிறுத்திக் கொள்வது.

2. பல்லவன் கிராம வங்கிக்கும், பாண்டியன் கிராம வங்கிக்கும் இடையே கசப்பான உணர்வுகளை ஆரம்பத்திலேயே ஏர்படுத்தி அதன் மூலம் பல்லவனில் இருக்கும் ஆபிஸர்களை தங்கள் உறுப்பினர்களாக தக்க வைத்துக் கொள்வது.

3. பாண்டியன் கிராம வங்கியைச் சேர்ந்தவர்களை எதிரிகளாக பாவிக்கச் செய்து, அதன் மூலம் ஏற்படும் குழப்பங்களில் குளிர் காய்வது.

நிர்வாகம் செய்ய வேண்டிய Administrative காரியங்களுக்கெல்லாம் யோசனை கொடுக்கும் அந்த AIBOC இணைப்புச் சங்கம், ஏன் பாண்டியனில் கொடுப்பது போல அங்கு Halting allowance கொடுக்க வேண்டும் என பேசவில்லை? Paternity leaveஐ பல்லவனில் 4 நாட்களாகச் குறைத்துக் கொடுப்பதை ஏன் பேசவில்லை.? Fundsக்குச் சென்றால் ஆபிஸர்களுக்கு Half TA கொடுக்க வேண்டும் என ஏன் பேசவில்லை. Recruitmentல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக service bond வாங்குவதை ஏன் ரத்து செய்ய பேசவில்லை? அந்த சங்கம் பகிர்ந்திருக்கும் செய்தியில் ஊழியர் நலன் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் amalgamation குறித்து அந்த சங்கம் சிந்திக்கும் லட்சணம் போலும்.

தொழிலாளர்கள் ஒற்றுமையைப் பேணும், வளர்க்கும் நமது AIRRBEA இணைப்புச் சங்கங்கள் இந்த குள்ளநரித்தனங்களையும், சதிகளையும் அறிந்து நிச்சயம் முறியடிக்கும். பல்லவன் கிராம வங்கியிலும் பாண்டியன் கிராம வங்கியிலும் இருக்கும் அனைத்து ஆபிஸர்களையும், ஊழியர்களையும் தங்கள் உறுப்பினர்களாக பாவித்து, அரவணைத்து அவர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்கும்.

பாண்டியனிலும் பல்லவனிலும் இருக்கும் AIRRBEA சங்கங்களின் கவலையெல்லாம் வேறு. கனவுகளும் வேறு.

1. பாண்டியனில் பெற்று வரும் அனைத்துச் சலுகைகளையும் பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்களுக்கும் ஊழியர்களுக்கும் வாங்கித் தர வேண்டும்.

2. இந்தியன் வங்கியில் இருக்கும் அனைத்து சலுகைகளையும் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பெற்றுத் தர வேண்டும்.

3. எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்து ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் உரிய சங்கமாக செயல்பட வேண்டும்.

4. பாண்டியனில் 35 தற்காலிக ஊழியர்கள் இதுவரை பணிநிரந்தரம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் 103 தோழர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்பட இருக்கின்றனர். அதுபோல் பல்லவனிலும் தற்காலிக ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

5. மிக முக்கியமாக அனைத்து ஆபிஸர்களும் ஊழியர்களும் சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் நடத்தப்பட வேண்டும்.

நமது இந்தக் கனவுகளை முன்னிறுத்தி, அதுவே நம் பாதையாக்கி பயணிப்போம்.

மொத்ததில் மிக முக்கியமான செய்தி ஒன்றுதான்.

பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றிணைவது என்பது வேறு. அங்குள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைவது என்பது வேறு.

தொழிலாளர்களை ஒன்றிணைப்பது அவர்கள் அனைவருக்குமான பிரச்சினைகளே. அவைகளை தீர்ப்பதற்காக அவர்கள் ஓரணியாய் திரளுகிறார்கள். வெற்றி பெறுவதற்கு சமரசமற்று போராடுகிறார்கள். ஒரு சரியான தொழிற்சங்கம் இதனைப் புரிந்துகொண்டு அந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பொதுவானதாக தலைமை தாங்க வேண்டும். அதைத்தான் AIRRBEA இணைப்புச் சங்கங்கள் நாம் செய்கிறோம்.

மாறாக உண்மையான பிரச்சினைகளை விட்டு தொழிலாளர்களை திசை திருப்பி, அவர்களின் கவனத்தை சிதைத்து, அவர்களை பிரித்து வைப்பது தொழிற்சங்க விரோதிகளின் வேலை. அவர்கள் தொழிலாளர்களை அடிமைகளாய் கருதுகிறவர்கள்.

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது நிர்வாகங்களின், அதிகாரத்தில் இருப்பவர்களின் உலகறிந்த தந்திரம் ஆகும். அதை இங்கு AIBOC இணைப்பில் இருக்கும் ஒரு தொழிற்சங்கமே முன்னின்று செய்ய பிரயாசைப்படுகிறது. இவர்கள் தொழிற்சங்க இயக்கத்துக்கே ஊறு விளைவிக்கிறவர்கள். எதிரிகள் என அடையாளம் காண்போம்.

“இனிதான் சிறப்பான, தரமான சம்பவங்கள் காத்திருக்கின்றன!”

J.மாதவராஜ்

General secretary

AIRRBEA TN and PUDUVAI


9 views0 comments

Comments


world-spin-crop.gif
bottom of page